Thursday, 17 May 2012

பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்கள் மே 27-ம் தேதி வழங்கப்படும்: பள்ளி கல்வித் துறை

தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வரும் மே 22 -ம் தேதி காலை வெளியாக இருக்கிறது. இதனையடுத்து மே மாதம் 30-ம் தேதி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்திருந்தது.
 
மருத்துவ படிப்பிற்கும், என்ஜினீயரிங் படிப்பிற்கும் விண்ணப்பிப்பதற்கு மே 30 -ம் தேதி கடைசி தேதி என்பதால், மூன்று தினங்களுக்கு முன்னதாகவே, அதாவது மே 27-ம் தேதியே மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. 
 
மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளியிலேயே அவர்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
 
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 8ம் தேதி துவங்கி, மார்ச் 30ம் தேதி முடிவடைந்தன. மொத்தம் 1,874 மையங்களில், 7 லட்சத்து 60 ஆயிரத்து 975 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினார்கள். தனித் தேர்வர்களாக 61 ஆயிரத்து 319 பேர் பங்கேற்றனர்.
 
மாணவர்களின் விடைத்தாள்களை திருத்தும் பணி முடிவடைந்துள்ள நிலையில், இம்மாதம் 22-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கிறது.

No comments:

TRB