Tuesday, 15 May 2012

தேசியக் கல்வி - பாரதியார்

தேசமென்பது குடிகளின் தொகுதி. தேசக் கல்விக்கு குடும்பக் கல்வியே வேர். வீட்டுப் பழக்கந்தான் நாட்டிலும் தோன்றும். வீட்டில் யோக்கியன் நாட்டிலும் யோக்கியன். வீட்டில் பொறுமையுடையவன் நாட்டிலும் பொறுமையுடையவன். குடும்பம் நாகரிகமடையாவிட்டால் தேசம் நாகரிகமடையாது. குடும்பத்தில் விடுதலை இராவிடில் தேசத்தில் விடுதலை இராது.
தமிழ்நாட்டில் தேசியக் கல்வியென்பதாக ஒன்று தொடங்கி அதில் தமிழ் பாஷையை பிரதானமாக நாட்டாமல் பெரும்பான்மைக் கல்வி இங்கிலீஷ் மூலமாகவும் தமிழ் ஒருவித உப பாஷையாகவும் ஏற்படுத்தினால் அது தேசியம் என்ற பதத்தின் பொருளுக்கு முழுவதும் விரோதமாக அமைந்துவிடும் என்பதில் ஐயமில்லை.
தமிழ்நாட்டில் தமிழ் சிறந்திடுக. பாரத தேச முழுவதும் எப்போதும்போலவே வடமொழி வாழ்க. பாரத தேசத்தின் ஐக்கியத்தை பரிபூர்ணமாகச் செய்யுமாறு நாடு முழுவதிலும் வடமொழிப் பயிற்சி மேன்மேலும் ஓங்குக. எனினும் தமிழ்நாட்டில் தமிழ்மொழி தலைமை பெற்றுத் தழைத்திடுக.
உங்களுடைய கிராமத்தில் ஒரு பாடசாலை ஏற்படுத்துங்கள். அல்லது பெரிய கிராமமாக இருந்தால் இரண்டு மூன்று வீதிகளுக்கு ஒரு பள்ளிக்கூடம் வீதமாக எத்தனை பள்ளிக்கூடங்கள் ஸôத்யமோ அத்தனை ஸ்தாபனம் செய்யுங்கள். தேசிய பாடசாலைகளில் உபாத்தியாயராக வருவோர் திருக்குறள், நாலடியார் முதலிய நூல்களிலாவது தகுந்த பழக்கம் உடையவர்களாக இருக்க வேண்டும். ஆரோக்கியமும், திட சரீரமுடைய உபாத்தியாயர்களைத் தெரிந்தெடுப்பது நன்று.
வேதகால சரித்திரம், புராணகால சரித்திரம், பௌத்தகால சரித்திரம், ராஜபுதன சரித்திரம் இவை மிகவும் சிரத்தையுடன் கற்பிக்கப்பட வேண்டும். பள்ளிக்கூடம் எந்த மாகாணத்தில் அல்லது ராஷ்ட்ரத்தில் இருக்கிறதோ அந்த மாகாணத்தின் சரித்திரம் விசேஷமாக பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
ஆரம்ப பூகோளமும், அண்டசாஸ்த்ரமும், ஜகத்தைப் பற்றியும், சூரிய மண்டலத்தைப் பற்றியும் அதை சூழ்ந்தோடும் கிரகங்களைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும் இவற்றின் சலனங்களைப் பற்றியும் பிள்ளைகளுக்கு இயன்றவரை தக்க ஞானம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பூமிப் படங்கள், கோளங்கள், வர்ணப் படங்கள் முதலிய கருவிகளை ஏராளமாக உபயோகப்படுத்த வேண்டும், ஐந்து கண்டங்கள், அவற்றிலுள்ள முக்கிய தேசங்கள், அந்த தேசங்களின் ஜனத் தொகை, மதம், ராஜ்யநிலை, வியாபாரப் பயிற்சி முக்கியமான விளைபொருள்கள், முக்கியமான கைத்தொழில்கள் குறித்து பிள்ளைகளுக்குத் தெளிந்த ஞானம் ஏற்படுத்த வேண்டும். பாரத தேசத்தின் அற்புதமான சிற்பத் தொழில்கள், கோயில்கள், இவற்றைப் பற்றி மாணாக்கர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். பூமி சாஸ்திரப் பயிற்சியில் விளைபொருள் முதலியவற்றை திருஷ்டாந்தங்களின் மூலமாகத் தெளிவுபடுத்துவதுடன், இயன்றவரை பிள்ளைகளை யாத்திரைக்கு அழைத்துச் சென்று பிற இடங்களை நேருக்கு நேராகக் காண்பித்தல் நன்று.
பிள்ளைகள் தாங்களே ஸயன்ஸ்சோதனைகளை செய்து பார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். பௌதீக சாஸ்திரங்கள் கற்றுக் கொடுப்பதில், மிகவும் தெளிவான எளிய தமிழ் நடையில் பிள்ளைக்கு மிகவும் சுலபமாக விளங்கும்படி சொல்லிக் கொடுக்க வேண்டும். இயன்றவரை மாணாக்கர்கள் எல்லோருக்கும், விசேஷமாகத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு நெசவு முதலிய முக்கியமான கைத்தொழில்களிலும், நன்செய், புன்செய் பயிர்தொழில்களிலும், பூ, கனி, காய், கிழங்கு
கள் விளைவிக்கும் தோட்டத்தொழில்களிலும், சிறு வியாபாரங்களிலும் தகுந்த ஞானமும் அனுபவமும் ஏற்படும் படி செய்தல் நன்று.
தோட்டத் தொழில்கள், கிணறுகளில் ஜலமிறைத்தல் முதலியவற்றால் ஏற்படும் சரீரப் பயிற்சியே மிகவும் விசேஷமாகும். பிள்ளைகளுக்குக் காலையில் தாமே ஜலமிறைத்து ஸ்நானம் செய்தல், தத்தம் துணிகளை தோய்த்தல் முதலிய அவசியமான காரியங்களில் ஏற்படும் சரீரப் பயிற்சியும் நன்றேயாம்.
இவற்றைத் தவிர ஓட்டம், கிளித்தட்டு, சடுகுடு முதலிய நாட்டு விளையாட்டுகளும், காற்பந்து முதலிய ஐரோப்பிய விளையாட்டுகளும் பிள்ளைகளுடைய படிப்பில் பிரதானமான அம்சங்களாக கருதப்பட வேண்டும். பிள்ளைகளுக்கு சரீரபலம் ஏற்படுத்தாமல் வெறுமனே படிப்பு மாத்திரம் கொடுப்பதால் அவர்களுக்கு நாளுக்கு நாள் ஆரோக்கியம் குறைந்து அவர்கள் படித்த படிப்பெல்லாம் விழலாகி, அவர்கள் தீராத துக்கத்துக்கும் அற்பாயுசுக்கும் இரையாகும்படி நேரிடும்.
மாணாக்கர்களை வனபோஜனத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அங்கு பிள்ளைகள் தமக்குள் நட்பும், அன்பும், பரஸ்பர ஸம்பாஷணையில் மகிழ்ச்சியும் எய்தும்படி செய்ய வேண்டும். மலைகள், கடலோரங்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று இயற்கையின்அழகுகளையும், அற்புதங்களையும் பிள்ளைகள் உணர்ந்து மகிழும்படி செய்ய வேண்டும்.
தேசத்தின் வாழ்வுக்கும் மேன்மைக்கும் தேசியக் கல்வி இன்றியமையாதது. தேசியக் கல்வி கற்றுக் கொடுக்காத தேசத்தை தேசமென்றுசொல்லுதல் தகாது. அது மனிதப் பிசாசுகள் கூடி வாழும் ஸ்தார மான சுடுகாடேயாம். நமது தேசம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் மேற்கூறியபடி பாடசாலைகள் வைக்க முயலுதல் நம்முடைய ஜனங்களின் முதற்கடைமையாகும். தேசியக் கல்வியில் ரிக் வேதமும், குரானும், பைபிளும் சமானம். தேசியக் கல்வி முயற்சியில் ஜாதிமத வர்ண பேதங்களைக் கவனிக்கக் கூடாது.

No comments: