Friday, 4 March 2016

PLUS TWO EXAM-MARCH - 2016 | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பிளஸ்-2 தேர்வுகள் | தொடக்கம் 04.03.2016 | முடியும் நாள் 01.04.2016 | 6,550 பள்ளிகள் | 2421 தேர்வு மையங்கள் | 8,39,697 மாணவ–மாணவிகள் | 3,91,806 மாணவர் | 4,47,891 மாணவிகள் | 42,347 தனித்தேர்வர்கள் | 4,000 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | ஏப்ரல் இறுதி வாரத்தில் தேர்வு முடிவுகள் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள்.

2015-16 கல்வியாண்டிற்கான மேல்நிலைப் பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2016 வருகிற 04.03.2016 அன்று தொடங்கி 01.04.2016 வரை நடைபெறவுள்ளது மேல்நிலைத் தேர்வு தொடர்பான புள்ளி விவரங்கள்:- மேல்நிலைப் பொதுத் தேர்வினை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 6,550 மேல்நிலைப்
பள்ளிகளிலிருந்து மொத்தம் 8,39,697 மாணவ/மாணவியர்கள்தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவ/மாணவியர்களில் மாணவர்கள் 3,91,806 பேர், மாணவியர் 4,47,891 பேர் ஆவர். மாணவர்களை விட 56,085 மாணவிகள் கூடுதலாக தேர்வெழுதவுள்ளனர். பள்ளி மாணவர்களை தவிர 42,347 தனித்தேர்வர்களும் தேர்வெழுத பதிவு செய்துள்ளனர். சென்னை மாநகரில் 410 பள்ளிகளிலிருந்து மொத்தம் 51,091 மாணவ/மாணவியர்கள் 145 தேர்வு மையங்களில் தேர்வெழுத உள்ளனர். இவர்களில் 23,617 மாணவர்கள் மற்றும் 27,474 மாணவிகள் உள்ளடங்குவர். புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 35 தேர்வு மையங்களில், 135 பள்ளிகளைச் சார்ந்த 14,337 மாணவ/மாணவியர் தேர்வெழுத உள்ளனர். அவர்களில் மாணவர்கள் 6556 பேர் மற்றும் மாணவியர் 7781 பேரும் ஆவர். தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி முழுவதுமாக மேல்நிலைப் பொதுத் தேர்விற்கு மொத்தம் 2421 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைவாசிகளும் கல்வியில் ஏற்றம் கண்டிட, சிறைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான மேல்நிலைப் பொதுத் தேர்வினை 106 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி மற்றும் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வெழுத உள்ளனர். மேல்நிலைப் பொதுத் தேர்வினை தமிழ் வழியில் பயின்று தேர்வெழுதும் பள்ளி மாணாக்கருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று மேல்நிலைத் தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணாக்கரின் எண்ணிக்கை 5,56,498 ஆகும். 
மாற்றுத் திறனாளி தேர்வர்கள்:- 
மேல்நிலைப் பொதுத் தேர்வில் டிஸ்லெக்சியா பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காதுகேளாதோர்/வாய்பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப் பாடவிலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு தேர்வு மையங்களில் தரைதளத்தில் தேர்வெழுதும் வகையில் தனி அறைகள் ஒதுக்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத் திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் சுமார் 1867 தேர்வர்களுக்கு அரசுத் தேர்வுத் துறையால் ஒப்பளிக்கப்பட்டு ஆணையிடப்பட்டுள்ளது. அவற்றில் 827 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு சொல்வதை எழுதுபவர் நியமனம் செய்யப்பட்டுள்ளது, 611 மாற்றுத் திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. சலுகை வழங்கப்படும் என்ற அறிவுரை அனைத்து தேர்வர்களுக்கும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டிலேயே அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. 
தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு:- 
தமிழகமெங்கும் மேல்நிலைத் தேர்வினை எழுதவுள்ள அனைத்து பள்ளி மாணவர்கள்/ தனித்தேர்வர்கள் ஆகியோருக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகள் ஆன்-லைன் மூலமாக பதிவேற்றம் செய்யப்பட்டு அனுப்பப்பட்டு விட்டது. இவ்வாண்டு முதன்முறையாக தேர்வுக்கூட நுழைவுச் சீட்டில் தேர்வர்களுக்கான சிறப்பு அறிவுரைகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வினாத்தாள் மற்றும் விடைத்தாட்களில் வழக்கமாக அச்சிடப்படும் அறிவுரைகளை தேர்வுக்கு முன்னதாகவே தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளின் மூலமாகவே படித்து அறிந்துக் கொள்ளலாம். 
தேர்வு எழுதுப்பொருட்கள்:- 
அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாட்கள், கூடுதல் விடைத்தாட்கள் மற்றும் முகப்புச் சீட்டுகள் ஆகியவை அனுப்பி வைக்கப்பட்டுவிட்டன. தேர்வின் போது தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்புச் சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து தைக்கப்பட்டே தேர்வர்களுக்கு வழங்கப்படுகிறது. தேர்வர் முகப்புச் சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதுமானது. வழித்தடங்கள்:- அனைத்து மாவட்டங்களிலும் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தேர்வு நாளன்றும் வழித்தட அலுவலர்கள் மூலமாக வினாத்தாள் கட்டுக்கள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து பாதுகாப்பான முறையில் தேர்வு மையங்களுக்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்படவும் தேர்வு முடிவுற்றவுடன் அனைத்து தேர்வு மையங்களிலிருந்தும் விடைத்தாள் கட்டுக்களை பாதுகாப்பான முறையில் விடைத்தாள் சேகரிப்பு மையத்திற்கு கொண்டு சென்று ஒப்படைக்கப்படவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 
பாதுகாப்பு ஏற்பாடுகள்:- 
வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் பாதுகாப்பான இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவ்விடங்களில் 24 மணி நேர ஆயுதம் தாங்கிய காவலர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பிட வசதிகள் சிறப்பான முறையில் அமைத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கிட ஆவன செய்யுமாறு மின்சார வாரிய தலைவருக்கு கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு மையங்கள், வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள், விடைத்தாள் சேகரிப்பு மையங்கள் ஆகிய இடங்களில் போதிய காவல் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டி காவல் துறைத் தலைவருக்கும் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தேர்வினை எவ்வித புகார்களுக்கும் இடம் அளிக்காவண்ணம் செம்மையாக நடத்திட அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு நல்க கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்கள் மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் நடத்தப்பட்டு தேர்வுப் பணிகளில் எவ்வித சுணக்கமுமின்றி பொறுப்புடன் செயலாற்றுமாறு அனைவருக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. 
தேர்வுக் கால கண்காணிப்பு ஏற்பாடுகள்: 
அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித் துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அக்குழுவில் மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் மாவட்டங்களுக்கு அவரவர் எல்லைக்குட்பட்ட தேர்வு மையங்களை திடீர் பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாகக் கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைச் சார்ந்த இயக்குநர்கள்,இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக தோராயமாக சுமார் 4,000 எண்ணிக்கையிலான பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர்கள் முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள முதன்மைக் கல்வி அலுவலர், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து ஆய்வு அலுவலர்களும் அம்மாவட்டத்திலுள்ள அனைத்து தேர்வு மையங்களிலும் தங்களது சரிசமமாக பிரித்துக் கொண்டு தேர்வு நாட்களின்போது தங்களுடன் கண்காணிப்பு குழுவை அழைத்துக் கொண்டு தேர்வு மையங்களைப் பார்வையிட்டு முறைகேடுகள் ஏதும் நடைபெறாவண்ணம் தீவிரமாக கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த அலுவலர்கள் முக்கிய பாடங்களுக்கான தேர்வு நாட்களில் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 
அலைபேசி தடை:- 
இவ்வாண்டு தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் அலைபேசியை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. மேலும் தேர்வர்களது அலைபேசிகள் பராமரிப்பிற்கு தேர்வு மையங்கள் பொறுப்பேற்காது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதர தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஒழுங்கீனச் செயல்பாடுகள்:- தேர்வு நேரங்களில் தேர்வர்கள் துண்டுத்தாள் வைத்திருத்தல், துண்டுத்தாட்களை பார்த்து எழுத முயற்சித்தல், பிற மாணவர்களை பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைக்கேடாக நடந்துக்கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் மற்றும் ஆள்மாறாட்டம் செய்தல் ஆகிய ஒழுங்கீனச் செயல்களில் ஈடுபட்டால் கடுங்குற்றமாக கருதப்படும். அத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிமுறைகளின்படி உரிய தண்டனைகள் வழங்கப்படும். மேலும் ஒழுங்கீனச் செயல்களுக்கு உடந்தையாகவோ, ஊக்குவிக்கவோ பள்ளி நிர்வாகம் முயலுமேயானால் பள்ளித் தேர்வு மையத்தினை இரத்து செய்தும், பள்ளி அங்கீகாரத்தினை இரத்து செய்திட பள்ளிக் கல்வி இயக்குநருக்கு பரிந்துரை செய்தும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். – மேற்காண் முன்னேற்பாட்டு பணிகள் அரசுத் தேர்வுத் துறையால் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது


Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,