Tuesday, 15 March 2016

SSLC EXAM-MARCH - 2016 | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் SSLC தேர்வுகள் | தொடக்கம் 15.03.2016 | முடியும் நாள் 11.04.2016 | 12053 பள்ளிகள் | 3,371 தேர்வு மையங்கள் | 10,72,185 மாணவ–மாணவிகள் | 6600 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துக்கள்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு, தமிழகம், புதுச்சேரியில் நாளை தொடங்குகிறது. முறைகேடுகளை தடுக்க 6600 பறக்கும் படையை தேர்வுத்துறை அமைத்துள்ளது. தமிழகம், புதுச்சேரியில் செயல்படும் 12053 பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான பொதுத் தேர்வு
நாளை தொடங்குகிறது. மொத்தம் 10 லட்சத்து 72 ஆயிரத்து 185 மாணவ மாணவியர் தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்கள் தவிர தனித் தேர்வர்களாக 48 ஆயிரத்து 564 மாணவ மாணவியரும் எழுதுகின்றனர். தமிழகம் புதுச்சேரியில் 3371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நடந்த 10ம் வகுப்பு தேர்வில் கலந்து கொண்டவர்களை விட 11 ஆயிரத்து 319 பேர் இந்த ஆண்டு குறைவாக தேர்வு எழுதுகின்றனர். பள்ளிகளில் படிப்போரில் 5 லட்சத்து 51 ஆயிரத்து 301 பேர் மாணவர்கள். 5 லட்சத்து 20 ஆயிரத்து 884 பேர் மாணவியர். மாணவியரை விட மாணவர்கள் 30 ஆயிரத்து 417 பேர் கூடுதலாக எழுதுகின்றனர். சென்னை மாவட்டத்தில் 574 பள்ளிகள் மூலம் மொத்தம் 53 ஆயிரத்து 159 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். இவர்களுக்காக சென்னை மாவட்டத்தில் மட்டும் 209 தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் 298 பள்ளிகளை சேர்ந்த 17 ஆயிரத்து 041 பேர் எழுதுகின்றனர். இவர்களுக்காக 48 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தவிர, திருச்சி, பாளையங்கோட்டை, சென்னை புழல் சிறையில் உள்ள 250 கைதிகளும் இந்த தேர்வில் பங்கேற்கின்றனர். தமிழ் வழியில் படிக்கும் மாணவ மாணவியருக்கு தேர்வுக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் வழியில் படிப்போர் 6 லட்சத்து 70 ஆயிரத்து 795 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். இவர்களுடன் டிஸ்லெக்ஸ்சியா, கண்பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் மற்றும் இதர மாற்றுத் திறனாளிகள் என 3420 பேருக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை கண்காணிக்க 6600 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களால் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தேர்வுகள் காலை 9 மணிக்கே தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முதல்முறையாக வழக்கமாக 10 மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணி வரை நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணியுடன் முடிவடைகிறது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பள்ளிக்கல்வித்துறை இந்த ஏற்பாட்டை செய்துள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரங்கள் களை கட்டும் என்பதாலும், காலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் போன்றவற்றால் மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவும் காலை 9 மணிக்கு தேர்வுகள் தொடங்கும் என கல்வி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.