Saturday, 30 April 2016

நாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு மே 1-ந்தேதி, ஜூலை 24-ந்தேதி நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

நாடு முழுவதும் மருத்துவம், பல்மருத்துவ படிப்புகளுக்கு 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு மே 1-ந்தேதி, ஜூலை 24-ந்தேதி நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நாடு முழுவதும் மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கு மே 1-ந்தேதியும், ஜூலை 24-ந்தேதியும் 2 கட்டங்களாக பொது நுழைவுத்தேர்வு நடத்த சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பொது நுழைவுத்தேர்வு
நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு 'என்.இ.இ.டி.' என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு முறையை ரத்துசெய்து 2013-ம் ஆண்டு, ஜூலை 18-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீர் தலைமையிலான அமர்வு தீர்ப்பு அளித்தது.இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் மனுக்கள் தாக்கல் செய்தன. அவற்றை நீதிபதிகள் அனில் ஆர்.தவே, ஏ.கே.சிக்ரி, ஆர்.கே.அகர்வால், ஆதர்ஷ் குமார் கோயல் மற்றும் ஆர்.பானுமதி ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து, தேசிய தகுதி நுழைவுத்தேர்வை ரத்து செய்து வழங்கிய முந்தைய தீர்ப்பை திரும்பப்பெற்றதுடன், அந்த தேர்வை நடத்த அனுமதி வழங்கி கடந்த 11-ந்தேதி உத்தரவிட்டது.
'ரிட்' வழக்கு
இதையடுத்து 2016-17-ம் கல்வி ஆண்டில், மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வுகளை உடனடியாக நடத்த உத்தரவிட வேண்டும் என்று சங்கல்ப் அறக்கட்டளை என்னும் தன்னார்வ தொண்டு அமைப்பின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் 'ரிட்' வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.இந்த 'ரிட்' வழக்கை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவ கீர்த்திசிங், ஏ.கே.கோயல் ஆகியோர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) விசாரித்தனர். அப்போது, மத்திய அரசு, இந்திய மருத்துவ கவுன்சில், சி.பி.எஸ்.இ. ஆகியவற்றின் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மருத்துவ படிப்புகளுக்கான தேசிய தகுதி நுழைவுத்தேர்வை இந்த ஆண்டே நடத்த விரும்புவதாகவும், அதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த ஆண்டே பொது நுழைவுத்தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டனர்.
தேர்வு அட்டவணை தாக்கல்
அதன்படி, சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அனில் ஆர்.தவே, சிவ கீர்த்திசிங், ஏ.கே.கோயல் ஆகியோர் முன்னிலையில், அகில இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் நேற்று ஆஜராகி, கடந்த 2010 டிசம்பர் 21-ந்தேதி இந்திய மருத்துவ கவுன்சில் மற்றும் பல் மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிக்கையின்படி மருத்துவ படிப்புக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வுகளை நடத்த உத்தேசித்துள்ளதாக தெரிவித்தார். நுழைவுத்தேர்வுக்கான உத்தேச கால அட்டவணையையும் கோர்ட்டில் தாக்கல் செய்தார்.மேலும், மே 1-ந்தேதி மற்றும் ஜூலை 24-ந்தேதி ஆகிய நாட்களில் 2 கட்டமாக தேர்வுகளை நடத்தலாம்; ஆகஸ்டு 17-ந்தேதியன்று முடிவுகள் வெளியிட்டு செப்டம்பர் 30-ந்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்.
பல மாநிலங்கள் எதிர்ப்பு
இந்த முடிவுக்கு தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், தெலுங்கானா, உத்தரபிரதேசம் மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் மற்றும் வேலூர் சி.எம்.சி உள்ளிட்ட தனியார் மருத்துவ கல்லூரிகள் சார்பாகவும் மூத்த வக்கீல்கள் பி.பி.ராவ், ராஜீவ் தவான், கே.கே.வேணுகோபால் மற்றும் கோபால் சுப்பிரமணியம் உள்ளிட்டோர் ஆஜராகி, நுழைவுத்தேர்வுகளை இந்த ஆண்டு நடத்துவதற்கு கோர்ட்டு இடைக்கால அனுமதி வழங்கக்கூடாது என்று வாதிட்டனர்.அப்போது அவர்கள், பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தடையை இடைக்காலமாகத்தான் நீக்கியிருப்பதாகவும், அந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விரிவான விசாரணை நடத்த இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் 3 நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு, இந்த ஆண்டு நுழைவுத்தேர்வு நடத்த அனுமதி வழங்கினால் அது நீதிக்கு எதிரானதாக இருக்கும் என வாதிட்டனர்.
தமிழகம் வாதம்
மேலும், கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் சொந்தமாக நுழைவுத்தேர்வுகள் நடத்தி வருவதால் அதற்காக மாணவர்கள் தயாராக உள்ளனர் என்றும் தற்போது திடீரென தேர்வு நடத்த உத்தரவு பிறப்பித்தால் அவர்களால் இந்த தேர்வுக்கு தயாராக முடியாது என்றும் தெரிவித்தனர்.தமிழக அரசு சார்பாக ஆஜரான மூத்த வக்கீல் நாகேஸ்வர ராவ், "2007-ம் ஆண்டு தமிழக அரசு ஒரு சட்டத்தை பிறப்பித்து, அதன் அடிப்படையில் தமிழகத்தில் நுழைவுத்தேர்வு தேவையில்லை என்றும் முடிவு செய்து, 2007-ம் ஆண்டு முதல் பிளஸ்-2 மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மேலும் 2010-ம் ஆண்டு அகில இந்திய மருத்துவ கவுன்சில் முடிவுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது" என குறிப்பிட்டார். மேலும், "பொது நுழைவுத்தேர்வு நடத்த அனுமதித்தால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்; இப்படி ஒரு நுழைவுத் தேர்வை தமிழக மாணவர்கள் இன்றுவரை நினைத்துக் கூடப்பார்க்கவில்லை. ஆகவே நுழைவுத்தேர்வை இந்த ஆண்டில் அனுமதித்தால் அவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். எனவே நுழைவுத் தேர்வை அனுமதிக்கக்கூடாது" என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து நீதிபதிகள் உத்தரவை ஒத்திவைத்தனர்.
உத்தரவு
அதன் பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதில், "இந்திய மருத்துவ கவுன்சில் வழங்கிய கால அட்டவணைப்படி மே 1-ந்தேதி மற்றும் ஜூலை 24-ந்தேதி ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேசிய தகுதி நுழைவுத்தேர்வை நடத்த வேண்டும்; தேர்வு முடிவுகளை ஆகஸ்டு 17-ந்தேதி வெளியிடவேண்டும்; செப்டம்பர் 30-ந்தேதிக்குள் மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்" என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அறிவிக்கையை நாளை (சனிக்கிழமை) வெளியிடவேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு பொருந்தும்?
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் ஏற்கனவே இவர்கள் நுழைவுத்தேர்வுகள் நடத்தி இருந்தாலும், நடத்த உத்தேசித்திருந்தாலும் அவை தாமாகவே ரத்தாகி விடும் என்றும் கூறப்படுகிறது.மே 1-ந்தேதி நடக்கவுள்ள முதல் கட்ட நுழைவுத்தேர்வை நாடு முழுவதும் 52 நகரங்களில், 1,040 மையங்களில் 6 லட்சத்து 67 ஆயிரத்து 637 மாணவ, மாணவிகள் எழுதுவார்கள் என்றும், மீதியான மாணவ, மாணவிகளுக்கு ஜூலை 24-ந்தேதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கைக்காகவே 90 நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படுவதாகவும், பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகளால் நடத்தப்படுகிற இந்த நுழைவுத்தேர்வுகளால் மாணவர்கள் பெரும் செலவை எதிர்கொள்ள வேண்டி இருப்பதாகவும், தவிரவும் தேர்வுகள் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்தப்படுவதில்லை எனவும் வழக்கில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,