Saturday, 16 April 2016

+2 வினாத்தாளில் மட்டுமல்ல... விடைக்குறிப்பிலும் குளறுபடி! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடலாமா?

+2 வினாத்தாளில் மட்டுமல்ல... விடைக்குறிப்பிலும் குளறுபடி! மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடலாமா?
மாணவர்களின் மிக முக்கியத் தருணங்களில் ஒன்று +2 பொதுத்தேர்வு. இரவு பகல் பாராமல், கடும் உழைப்பைக் கொடுத்து மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு தயாராகிறார்கள். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக +2 பொதுத்தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்துவருவதாக குமுறுகிறார்கள்
ஆசிரியர்கள். கடந்த 14ம் தேதி, நடந்த +2 வேதியியல் தேர்வில் குழப்பமாகவும் தவறாகவும் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகள் மாணவர்களை பதற்றத்தில் ஆழ்த்தியது. பின்னர், 'அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முயற்சி செய்திருந்தால் கருணை மதிப்பெண் அளிக்கப்படும்' என்று கூறி அந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். ஆனால், ஆங்கிலம், இயற்பியல், கணித வினாத்தாள்களிலும் குழப்பமான, தவறான கேள்விகள் கேட்கப்பட்டதாக வேதனையோடு தெரிவிக்கிறார்கள் ஆசிரியர்கள். திருத்தும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட விடைக்குறிப்புகளிலும் பல்வேறு முரண்பாடுகள் இருந்ததாக வருந்துகிறார்கள் அவர்கள்.''+2 ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வு முடிந்து, பேப்பர் திருத்தும் பணியும் முடிந்துவிட்டது.திருத்துவதற்காகத் தரப்பட்ட விடைக்குறிப்பில் (Answer key), ஏழு கேள்விகளுக்கான பதில் குழப்பமாக இருந்தது. ஆங்கிலம் முதல் தாள், செக்‌ஷன் `'ல் 3வது ஒரு மதிப்பெண் வினாவுக்கு `C' தான் சரியான பதில். இது புத்தகத்திலேயே இருக்கிறது. ஆனால், விடைக்குறிப்பில், 'A, C என இரண்டில் எதை எழுதியிருந்தாலும் மதிப்பெண் கொடுக்கலாம்' என்று சொல்லப்பட்டிருக்கிறது.27வது கேள்வி, முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பற்றியது."Rameshwaram is the place _____ Dr APJ Abdul Kalam was born (use a relative pronoun)" எனக் கேட்கப்பட்டிருக்கிறது. விடைக்குறிப்பில் 'where' என  கொடுக்கப்பட்டிருக்கிறது. 'where' என்பது relative adverb. இதற்கு, 'in which' என்பதுதான் சரியான பதில். ஆனால், இந்த in which என்கிற பதில் Answer key-ல் கொடுக்கப்படவேயில்லை.இந்த Answer key-ல் கொடுக்கப்பட்டுள்ள பதிலை எழுதியிருந்தால் மட்டுமே மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைக்கும். உண்மையிலேயே சரியான விடையை எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் கிடைக்காது. இதுபோல, ஆங்கிலம் இரண்டாம் தாளில் கேள்வி 20, 21க்கு இரண்டு விடைகள் சரியெனக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், முதல் விடைதான் சரியானது. இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தும் காது கொடுக்கவே இல்லை. இயற்பியலில் ஒரு கேள்வி சற்று குழப்பமாகக் கேட்கப்பட்டிருந்தது. அந்தக் கேள்விக்கு ஓரளவு பதில் எழுதியிருந்தாலும் முழு மதிப்பெண் கொடுக்க உத்தரவிட்டிருக்கிறார்கள். தமிழ்வழி கணித வினாத்தாளில் ஏற்பட்ட தவறால், ஆறு மதிப்பெண் கேள்விக்கு விடையளிக்க முயற்சித்திருந்தாலே முழு மதிப்பெண்ணும் கொடுக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார்கள். இப்படி பல்வேறு குளறுபடிகள் கேள்வித்தாளிலும் விடைக்குறிப்பிலும் நடக்கிறது.இதனால், நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்'' என வருத்தம் பொங்கச் சொல்கிறார் ஆசிரியர் பாலு. இதே கருத்தை முன்வைத்து பேசுகிறார் தனியார் பள்ளியொன்றின் தாளாளர் கோவிந்தராஜன். '' 'கேள்வித்தாள் எடுப்பது ஒருவர்; விடைக்குறிப்பு தயாரிப்பது மற்றொருவர்' என்ற நிலையால்தான் இதுமாதிரி குளறுபடிகள் நடக்கின்றன. இரண்டு பேர் எதிர் எதிர் துருவங்களிலிருந்து மாணவர்களின் வாழ்க்கையோடு விளையாடுகிறார்கள். கேள்வி எடுப்பவரே அதற்கான பதிலும் கொடுத்தால் தான் இதுமாதிரி பிரச்னைகளை தடுக்க முடியும்.  பொதுவாக, தேர்வுகள் முடிந்த பிறகுதான் அதற்கான விடைக்குறிப்புகள் தயாரிக்கப்படுகின்றன. விடைக்குறிப்பு தயாரிப்பவர் எந்த அடிப்படையில், ஒரு கேள்விக்கு இரண்டு விடைகள் என்று தீர்மானிக்கிறார் என்று தெரியவில்லை.இன்றைய சூழலில், ஒரிரு மதிப்பெண்களில் தான் மாநில ரேங்க் தீர்மானிக்கப்படுகிறது. அந்த அளவுக்கு போட்டிகள் நிலவும் நிலையில் இப்படியான குளறுபடிகளால் உண்மையாக உழைத்த மாணவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். அரசு, உடனடியாக இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட வேண்டும். கேள்வித்தாள் எடுப்பவரையே விடையையும் தயாரிக்கச் சொல்ல வேண்டும். இதுமாதிரி பிரச்னைகள் வரும்போது, அவரையே அதற்குப் பொறுப்பாக்கலாம். போட்டித் தேர்வுகளில் வெளியிடப்படுவதைப் போல, +2 தேர்வு முடிந்த சில மணி நேரங்களில் விடைக்குறிப்பை இணையதளத்தில் வெளியிட வேண்டும். அதனால் மாணவர்களின் மன உளைச்சலைத் தடுப்பதோடு, வெளிப்படைத் தன்மையையும் பாதுகாக்க முடியும்..." என்கிறார் அவர். செய்யுமா அரசு?
Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,