Wednesday, 13 April 2016

சானியா மிர்சா, பிரியங்கா சோப்ராவுக்கும் பத்ம விருதுகள்,நடிகர் ரஜினிகாந்த், டாக்டர் சாந்தா பத்ம விபூஷண் விருது பெற்றனர் ,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்

சானியா மிர்சா, பிரியங்கா சோப்ராவுக்கும் பத்ம விருதுகள்,நடிகர் ரஜினிகாந்த், டாக்டர் சாந்தா பத்ம விபூஷண் விருது பெற்றனர் ,ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்

நடிகர் ரஜினிகாந்த், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை டாக்டர் .சாந்தா ஆகியோருக்கு பத்ம விபூஷண் விருதுகளையும், சானியா மிர்சாவுக்கு பத்மபூஷண், நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு பத்மஸ்ரீ  விருதுகளையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
56 பேருக்கு பத்ம விருதுகள்
இந்தியாவில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 112 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசு தினவிழா அன்று மாலை மத்திய அரசு அறிவித்தது. மார்ச் 28-ந் தேதி ஏற்கனவே 56 பேருக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.   ஜனாதிபதி மாளிகையில் நேற்று எஞ்சிய 56 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் 5 பேருக்கு பத்ம விபூஷண்  விருதுகளையும், 11 பேருக்கு பத்மபூஷண் விருதுகளையும், 40 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகளையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்கினார்.
விருது பெற்ற முக்கியமானவர்கள் விவரம் வருமாறு:-

ரஜினிகாந்த், டாக்டர் சாந்தா
நடிகர் ரஜினிகாந்துக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. அடையாறு மருத்துவமனை டாக்டர் வி.சாந்தா, டாக்டர் வாசுதேவ் கல்குந்தே ஆத்ரே, டாக்டர் கிரிஜா தேவி, பட அதிபர் ராமோஜி ராவ் ஆகியோரும் பத்ம விபூஷண் விருதுகளை பெற்றனர்.  இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பின்னணி பாடகர் உதித்நாராயண், இந்தியாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ராபர்ட் டீன் பிளாக்வில், சிற்பி ராம்வாஞ்சி சுதர், சமஸ்கிருத புலவர் ராமானுஜ தத்தாச்சார்யா, சாமி தேஜோமயானந்தா ஆகியோருக்குபத்மபூஷண் விருதுகள் வழங்கப்பட்டது.
பிரியங்கா சோப்ரா
பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மிக குருவும், அர்ஷா வித்யா குருகுலம் நிறுவனருமான சாமி தயானந்த சரஸ்வதிக்கு மறைவுக்கு பிந்தைய பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது.பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, பாகுபலி பட தயாரிப்பாளர் ராஜமவுலி, பிரபல கலைஞர் பிரதீபா பிரகலாத், கன்னட எழுத்தாளர்    எஸ்.எல்.பைரப்பா, சமூக ஆர்வலர் சுனிதா கிருஷ்ணன் உள்பட 40 பேர்  பத்மஸ்ரீ விருதுகளையும் பெற்றுக்கொண்டனர். நடிகர் சயீது ஜாப்ரேவுக்கு மறைவுக்கு பிந்தைய பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி, பிரதமர் நரேந்திர மோடி, பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், பா.ஜனதா   தலைவர் அமித்ஷா, ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு உள்ளிட்ட மத்திய மந்திரிகளும் கலந்து கொண்டனர்.