Thursday, 28 April 2016

மலேரியாவுக்கான மருந்து

மலேரியாவுக்கான மருந்து
கொயினா என்பது உலகெங்கும் பயன்படுத்தப்படும் மலேரியாவுக்கான மருந்தாகும். கொயினா எடுக்கப்படும் மரத்திற்கு சின்கோனா என்று பெயர். இந்த மரத்தை 'குயினா, குயினா' என்று அழைப்பார்கள். இதற்கு பட்டைகளின் பட்டை என்று பொருள். இந்தப் பெயர் மருவி கொயினா என்று ஆனது. சின்கோனா மரத்தின் பட்டையிலிருந்து மருந்து தயார்
செய்யப்படுவதால், பட்டையின் மருத்துவ மகிமையை போற்றும் விதமாக கொயினா என்று அழைக்கப்படுகிறது.சின்கோனா மரம் ஐரோப்பா கண்டத்திற்கு ஜெசூயிட் பாதிரியார்களால் கொண்டு வரப்பட்டது. அதனால் அந்த நாடுகளில் இதை ஜெசூயிட் பட்டை என்று அழைக்கிறார்கள். இந்தியாவில் இதை பறங்கிச் சக்கை என்று அழைப்பதுண்டு. வெள்ளையரை இந்தியாவில் பறங்கியர் என்று குறிப்பிடுவதால் இந்தப் பெயர்.சின்கோனா மரம் இரட்டை விதையிலைத் தாவரக் குடும்பத்தை சேர்ந்த, ரூபியேசீ வகையை சார்ந்தது. இதன் பூர்வீகம் தென் அமெரிக்கா. ஆண்டிஸ் மலைத்தொடரின் கிழக்குச் சரிவுகளில் 2,500 அடி முதல் 9,000 அடி வரை உயரம் கொண்ட மலைக்காடுகளில் பரவிக் காணப்படுகின்றன. இம் மரங்களில் 38 வகை இனங்கள் உள்ளன. இவற்றில் சில வகை மரங்கள் குன்று மரங்களாகவும் வளருகின்றன.இலைகள் வெற்றிலை போன்ற வடிவம் கொண்டவை. பூக்கள் கொத்துக் கொத்தாக கிளைகளின் நுனிகளில் கலந்து மஞ்சரிகளாக உண்டாகும். மலர்கள் நறுமணம் உள்ளவை. இதன் பூக்கள் வெண்மை, வெண் சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு நிறங்களில் பூக்கும்.சின்கோனா மரத்தில் அதன் பட்டைகளே மருத்துவ முக்கியத்துவம் பெற்றவை. சின்கோனா மரத்தின் பட்டைகளில் இருந்து 'குவீனின்' என்னும் ஆல்கலாய்டும். வேறு சில ரசாயனப் பொருட்களும் எடுக்கப்படுகின்றன. இந்த வகை மரங்களில் பல இனங்களிலிருந்து குவீனின் எடுக்கப்படுகிறது. இப்படிதான் மலேரியாவுக்கான மருந்தும் தயாரிக்கப்படுகிறது.