Friday, 29 April 2016

பொம்மலாட்டம் மூலம் கல்வி... அரசுப்பள்ளி ஆசிரியர்

பொம்மலாட்டம் மூலம் கல்வி... அரசுப்பள்ளி ஆசிரியர்
அந்தப் பள்ளியின் சூழலே வித்தியாசமாக இருக்கிறது. அத்தனை உற்சாகமாகப் பள்ளிக்கு வருகிறார்கள் குழந்தைகள். புத்தகம், வகுப்பறை, ஆசிரியர்கள் என எதைப்பற்றிய இருண்மையும் அவர்கள் முகத்தில் இல்லை. ஆசிரியர் உள்ளே நுழைந்ததும் குழந்தைகளின் உற்சாகமும், குதூகலமும் கூடுகிறது. மாலையில் பிரிவுத்துயரோடு பள்ளியில் இருந்து விடைபெறுகிறார்கள்.ஈரோட்டையொட்டியிருக்கும் நாதகவுண்டம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தான் இந்த அதிசயம். தனியார் பள்ளி மோகத்தில் இருந்து பெற்றோரின் மனம் மீட்டு, பள்ளி, வகுப்பறைச் சூழலை மாற்றி, கற்றலை இனிமையாக்கி பெரும் மாற்றத்தை விதைத்திருக்கிறார்
இப்பள்ளி யின் இடைநிலை ஆசிரியர் தாமஸ் ஆண்டனி. குழந்தைகள் "பொம்மலாட்ட சார்" என்று இவரை அன்பொழுக அழைக்கிறார்கள். ஆமாம்...!"க்ளவுஸ் பப்பட்" எனப்படும் பொம்மலாட்டம் மூலம் பாடம் நடத்துகிறார் தாமஸ்.
பேசுவதுபோல பொம்மையை இயக்கி வாயசையாமல் குரல்கொடுக்கும் கலையே 'க்ளவுஸ் பப்பட்''. கதைகளும், பாடல்களுமாக தாமஸ் பாடம் நடத்துகிற விதம் குழந்தைகளை ஒன்றச் செய்கிறது. ஒரே ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கையை 50% மேல் உயர்த்தி நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார். தாமஸ், ஈரோடு மாணிக்கம்பாளையத்தைச் சேர்ந்தவர். முதல் தலைமுறை ஆசிரியர். " 'எந்த வேலை செஞ்சாலும் வாங்குற சம்பளத்துக்கு நியாயமா வேலை செய்யின்னு அப்பா சொல்வார். அது மனசுக்குள்ள வேதமா பதிஞ்சிடுச்சு. தொடக்கத்துல பள்ளிக்கு வந்தோமா, நமக்குத் தெரிஞ்சதை வச்சு பாடம் நடத்தினோமான்னு தான் இருந்தேன். பிள்ளைகளுக்கு புரிஞ்சுச்சா, புரியலையான்னு கூட கவலைப்பட்டதில்லை. ஆனா, என்னைக் கண்டாலே பிள்ளைகளுக்குப் பிடிக்காது.
பயம், மரியாதை... ஒதுங்கிடுவாங்க... செயல்வழிக் கற்றல் வந்தபிறகு வகுப்பறையோட சூழலே மாறிடுச்சு. ஆசிரியர் ஆதிக்கத்துல இருந்து குழந்தைகளோட கைக்கு வகுப்பறை போயிடுச்சு. அது உண்மையிலேயே மனநிறைவான மாற்றம். சேர்ல உக்காந்து ஆதிக்கம் செலுத்துற மனநிலையில இருந்து இறங்கி, பிள்ளைகளோட சரிக்குச்சமமா உக்காந்து வார்த்தையா இல்லாம உதாரணங்கள் மூலமா பயிற்றுவிக்கிற அந்த அணுகுமுறை குழந்தைகளை ஈர்த்துச்சு. பள்ளியில குழந்தைகளைத் தக்க வைக்கவும், கற்றல் தன்மையை சுவாரஸ்யமாக்கவும் அரசு நிறைய முயற்சிகளை செஞ்சுக்கிட்டிருக்கு. அட்டை வழிக் கற்றல், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, கதை, பாடல்கள், நாடகங்கள், செய்யுள்கள் மூலம் கற்பித்தல்ன்னு ஆசிரியர்களுக்கு நிறைய பயிற்சி களும் கொடுக்கிறாங்க. நான் இதுமாதிரியான பயிற்சி முகாம்களுக்கு ஆர்வமா போறதுண்டு. ஆனா எதையும் நிறைவா செயல்படுத்த முடியலே.
2009ல் இந்தப் பள்ளிக்கு மாற்றலாகி வந்தேன். தலைமை ஆசிரியை புவனா மேடமும் பிற ஆசிரியர்களும் என் கருத்தொத்த ஆசிரியர்களா இருந்தாங்க. பள்ளிச்சூழலையும், கல்விச்சூழலையும் மாத்த ஏதாவது செய்யணுன்னு முடிவு செஞ்சோம். ஒவ்வொரு நடுநிலைப்பள்ளிக்கும் அடிப்படைச் செலவுகளுக்காக வருஷத்துக்கு 24 ஆயிரம் ரூபாயை அரசு ஒதுக்குது. அந்தத் தொகையை வச்சு பள்ளிக் கட்டுமானங்களை சரிபண்ணி குழந்தைகளை ஈர்க்கிற விதமா சூழ்நிலையை மாத்தினோம். எங்க ஈடுபாட்டைப் பார்த்த ஊராட்சி மன்றத் தலைவர் பள்ளிக்கு முன்னால ஒரு விளையாட்டு மைதானத்தை அமைச்சுத் தந்தார். புரவலர் நிதித்திட்டத்தைத் தொடங்கினோம். அதன்மூலம் பெற்றோர்கள்கிட்ட நிதி வசூலிச்சு, கணித அறை, கணினி அறை, அறிவியல் ஆய்வகம்ன்னு பல ஏற்பாடுகளைச் செஞ்சோம். பள்ளிச்சூழல் மாறிடுச்சு. ஆனா வகுப்பறையும், கற்பித்தலும் குழந்தைகளுக்குக் கசப்பாவே இருந்துச்சு.
எனக்கு ரெண்டு குழந்தைகள். மூத்தவள் பிரணிதா ரோஸ் மூணாவது படிக்கிறா. இளையவ ஜெசிகா நிலோபருக்கு 5 வயது. நான் என் குழந்தைகளோட இயல்பையும் செயல்பாட்டையும் வச்சே பிற குழந்தைகளோட இயல்பை புரிஞ்சுக்குவேன். பிரணிதா எப்போ பார்த்தாலும் கார்ட்டூன் சேனலையே பார்த்துக்கிட்டிருப்பா. ஒருநாள், "நியூஸ் பாக்கணும், ரிமோட்டைக் கொடும்மா''ன்னு கேட்டேன். "பிளீஸ்ப்பா, இந்த புரோகிராம் முடிஞ்சவுடனே தர்றேன்''னு கெஞ்சினா. அவ அவ்வளவு விரும்பி பார்த்த நிகழ்ச்சி, 'பப்பட் ஷோ'. எனக்கு பளீர்ன்னு யோசனை உதிச்சுச்சு. பள்ளிக்கூடத்துக்கு இதை கொண்டு போனா என்ன...? உடனடியா அது சம்பந்தமா படிக்க ஆரம்பிச்சேன். பொம்மலாட்டத்துல ஆறேழு வகை இருக்கு. சிலவகைகளைச் செய்ய பாரம்பரிய அறிவு வேணும். க்ளவுஸ் பப்பட்டை முயற்சியும் பயிற்சியும் இருந்தா கத்துக்கலாம். சென்னைக்குப் போய் ஏழெட்டுப் பொம்மைகள் வாங்கினேன்.
இயல்பாவே எனக்கு மிமிக்ரி நல்லா வரும். 9 விதமான குரல்கள்ல பேசுவேன். சுயமா, அந்த பொம்மைகளை இயக்கி பயிற்சி எடுத்துக்கிட்டேன். 6 மாதப் பயிற்சியிலேயே எனக்கு அந்தக் கலை கைவந்திடுச்சு. வகுப்பறைக்குள்ள அந்த பொம்மைகளை கொண்டு வந்தபோதே குழந்தைகள் முகம் மலரத் தொடங்கிடுச்சு. ஆசிரியர்ங்கிற அச்சம் போய், ப்ரண்டைப் போல என் கையைப் பிடிச்சு தொட்டு விளையாட ஆரம்பிச்சாங்க. எனக்கு நம்பிக்கை வந்திடுச்சு. இப்போ நான் வகுப்புக்கு எப்போ வருவேன்னு குழந்தைகள் எதிர்பார்த்து காத்திருக்காங்க. இதோ இந்த 'தீனு' மங்கிப் பொம்மையும், இந்த 'ஃபேமிலி'' பொம்மைகளும் அவங்க இதயத்துக்கு நெருக்கமான நண்பர்களா ஆயிட்டாங்க. குழந்தைகளோட கற்பனைத்திறனும், ஞாபகத்திறனும், புரிதல்திறனும்  பல மடங்கு அதிகமாயிருக்கு. நாலாம் வகுப்புக்கும் அஞ்சாம் வகுப்புக்கும் நான் கிளாஸ் டீச்சர்.
கணக்கு தவிர மற்ற அனைத்து பாடங்களையும் பப்பட் ஷோ மூலமாத் தான் நடத்துறேன். வாரத்துல ரெண்டு நாள் பப்பட் ஷோ கிளாஸ். இப்போ குழந்தைகள் சந்தோஷமா பள்ளிக்கூடம் வர்றாங்க. அவங்களே காட்சிகளை வடிவமைக்கிற அளவுக்கு கற்பனைத்திறன் மேம்பட்டிருக்கு ..." -பெருமிதத்தோடு சொல்கிறார் தாமஸ். பொம்மலாட்டக் கற்பித்தல் முறை ஏற்படுத்திய நல்விளைவுகளை அடுத்து நிறைய ஆசிரியர்கள் அதைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். நூற்றுக்கணக்கான ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்திருக்கிறார் தாமஸ். சில ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் அதை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியிருக்கிறார்கள். 46 பிள்ளைகள் படித்த பள்ளியில் இப்போது 70 குழந்தைகள் படிக்கிறார்கள். இந்தக் கல்வியாண்டில் அது நூறாக மாறும் என்கிறார் தாமஸ். அரசுப்பள்ளிகள் இப்படியான அக்கறையுள்ள ஆசிரியர்களுக்காகத்தான் தவம் கிடக்கின்றன. தாமஸ்... நீங்கள் வாங்குகிற  சம்பளம் நியாயமானதுதான்...!