Friday, 29 April 2016

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டே நுழைவு தேர்வு?

மருத்துவ படிப்புக்கு இந்த ஆண்டே நுழைவு தேர்வு?
மருத்துவ படிப்புகளுக்கான, பொது நுழைவுத் தேர்வை இந்தாண்டே நடத்துவதற்கான கால அட்டவணையை, சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி, சி.பி.எஸ்.இ., எனப்படும் மத்திய கல்வி வாரியம் இன்று தாக்கல் செய்ய உள்ளது.மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு தடை விதித்து, 2013ல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ஆய்வு செய்யக் கோரி, மறுசீராய்வு மனு, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது, அதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், 'நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவத்துக்கான இளங்கலை பட்டப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, இம்மாதம், 14ல் தீர்ப்பளித்தது.வரும், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மருத்துவப் படிப்புகளுக்கு, பொது நுழைவுத் தேர்வை நடத்தாமல், மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகள் வேண்டுமென்றே காலம் தாழ்த்துவதாக கூறி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது;
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தனியார் கல்லுாரிகள், இஷ்டம்போல மாணவர் சேர்க்கையை நடத்தி வருகின்றன; இவை, பெரும் தொகையை, 'கேபிடேசன் பீஸ்' எனப்படும், கட்டாய நன்கொடைக் கட்டணமாக பெற்று, மாணவர்களை சேர்க்கின்றன. இதனால், தகுதி வாய்ந்த மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்; இதை தடுக்க, இந்தாண்டு, பொதுநுழைவுத் தேர்வைகட்டாயம் நடத்த வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.இம்மனு, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், அனில் தவே, ஏ.கே.சிக்ரி, ஏ.கே.கோயல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவக் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'இந்தாண்டு, பொது நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான வாய்ப்பில்லை' என்றார்.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு விவரம்:
நாடு முழுவதும், 2016 - 17ம் கல்வி ஆண்டில், மருத்துவப்படிப்புகளுக்கு, நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான கால அட்டவணையை, மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில், சி.பி.எஸ்.இ., ஆகியவை தயாரித்து, தாக்கல் செய்ய வேண்டும்.நுழைவுத் தேர்வை, எம்.சி.ஐ., விதிமுறைகளுக்கு உட்பட்டு, இந்தாண்டு நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். அதைத் தொடர்ந்து, நுழைவுத் தேர்வு நடத்துவதற்கான கால அட்டவணையை, சி.பி.எஸ்.இ., இன்று தாக்கல் செய்ய உள்ளது.