Sunday, 1 May 2016

ஒரே பள்ளி 21 இரட்டையர்கள்!

ஒரே பள்ளி 21 இரட்டையர்கள்!
சீர்காழியில் உள்ளது சபாநாயக முதலியார் இந்து மெட்ரிக்பள்ளி. எல்.கே.ஜி முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் ஆண்டுக்கு ஆண்டு மாணவர் சேர்க்கையின் போது அதில் இரட்டையர்கள் இல்லாமல் இருக்காது.  இப்பள்ளியில் மட்டுமே வெவ்வேறு வகுப்புகளில் 21 ஜோடி இரட்டையர்கள் எல்.கே.ஜி முதல் எட்டாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பறையிலும் இரட்டையர்கள் படிக்கிறார்கள் என்கிறார் 
பள்ளி முதல்வர் கே.தங்கத்துரை:
பள்ளி ஆசிரியை கிரிஜாபாய்: எனது வகுப்பில்(8-ம் வகுப்பு) எஸ்.எம்.சிவதாரிணி, எஸ்.எம்.பவதாரிணி என இரட்டை சகோதரிகள் பயின்று வருகின்றனர். இருவரும் ஒரே மாதிரியாக தலை பின்னுவதும், காலணிகள் அணிவதும், உடைகள் அணிவதும் எல்லாம் ஒரே மாதிரியாக இருக்கும். சகோதரிகளின் முக அமைப்பும் ஒரே மாதிரியாக இருப்பதால் சில நேரம் வீட்டு பாடம் எழுதி வராத மூத்த சகோதரியை கண்டிப்பதற்கு பதிலாக, இளையவளை கண்டித்த சுவாரசியங்கள் நடந்துள்ளன. அதுபோன்று மூத்தவளின் பிராகஸ் ரிப்போர்ட் மற்றும் தேர்வுதாள்களை இளையவளிடமும், இளையவளிடம் வழங்கவேண்டியவைகளை மூத்தவளிடமும் அளித்து பின்னர் திரும்ப பெற்று சரியாக மீண்டும் கொடுத்துள்ளேன். இருவரையும் இடம் மாற்றி (வகுப்பறையில் இடது, வலதுபுறங்கள் என) அமரவைத்தாலும் யாரை இடது பக்கம் அமரவைத்தோம் என குழப்பம் திடீரென வந்துவிடும். அப்போது அவளிடமே உன் பெயர் என்ன என்று கேட்டு தெரிந்துகொள்வதைவிட வேறு வழி?
ஆசிரியை ஸ்ரீவித்யா: எனது வகுப்பில்(7-ம் வகுப்பு) ஆர்.மதுமிதா, ஆர்.மாளவிகா என இரட்டை சகோதரிகள் படித்துவருகின்றனர். இருவரையும் அடையாளம் காண்பதில் பலமுறை நான் ஏமாற்றம் அடைந்திருக்கிறேன். ஒருமுறை பள்ளி ஆண்டு விழாவில் மதுமிதா கட்டுரை போட்டியில் பரிசு வென்றாள். ஆனால் நான் அவளுக்கு பரிசு வழங்குவதற்கு பதிலாக ஒலிபெருக்கியில் பெயரை கூப்பிடாமலே மேடை அருகில் இருந்த அவளது சகோதரி மாளவிகாவை சட்டென்று அடுத்து உன்பெயர் தான் அழைக்க போகிறார்கள் என மேடையில் ஏறும்படி அனுப்பிவைத்துவிட்டேன். பின்புதான் தெரிந்தது பரிசுக்கு அனுப்பியவள் மதுமிதா இல்லை மாளவிகா என்று. பின்பு மேடைக்கு பின்னால் உரியவளுக்கு அந்த பரிசை கொடுத்து பாராட்டும்படி நேர்ந்தது என்கிறார் சிரித்தவாறு.
மாளவிகா(12),மதுமிதா(12) தாயார் ஆனந்தி கூறுகையில், ""எனது இரண்டு மகள்களுக்கும் பிறந்ததிலிருந்து ஒரே மாதிரிதான் உடைகள், தோடு, காலணிகள், நோட்டு, புத்தகம் என எல்லாவற்றையும் பார்த்து, பார்த்து வாங்கித்தருவேன். இருவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் எந்தச் சண்டையும் வரக்கூடாது என இருவரையும் ஒரேமாதிரிதான் வளர்த்துவருகிறோம். எந்த கடைக்கு சென்றாலும் ஒரே மாதிரி இரட்டை பொருட்கள் உள்ளதை மட்டுமே தேர்வு செய்து வாங்கி தருவோம் என்றார். பல பேர் என்னிடம் எவ்வாறு இருவரையும் அடையாளம் தெரிந்து கொள்கிறீர்கள் என கேட்பர். தாய்க்கு தெரியாதா தன் மகள் யாரென்று'' என்றார் பெருமிதத்துடன்.
இதேபோன்று நான்காம் வகுப்பில் பயிலும் ரோஷினி, ரோஷன் ஆகிய இரட்டையர்களின் தாய் கவிதா கூறுகையில், ""இருவரும் ஆண், பெண் இரட்டையர்களாக இருப்பதால் வேறுபாடு காண்பது மற்றவர்களுக்கு எளிது. ஆனால் இருவரின் குணாதிசயங்களும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். ஒருவரை மட்டும் வெளியூருக்கு செல்லும்போது அழைத்து சென்றால் மற்றவருக்கு ஏக்கம் வந்து உடல்நிலை பாதிக்கும். ஆகையால் இருவரையும் பிரிப்பதில்லை'' என்றார்.
மற்றொரு பெற்றோரான சுந்தர் கூறுகையில், ""தீபக், தீபிகா என எனது மகன்,மகள் ஆகிய இரட்டையர்கள் எல்.கே.ஜி பயில்கின்றனர். இருவரும் ஒரே மாதிரிதான் நடந்து கொள்வார்கள். தீபக்கிற்கு காய்ச்சல் வந்தால், இரண்டு நாட்களில் தீபிகாவிற்கும் காய்ச்சல் வந்துவிடும்'' என்றார்.
இவ்வாறு அதிக இரட்டையர்கள் இந்தப் பள்ளியில் பயில்வதால் இந்தப் பள்ளி நிர்வாகம்  நாகை மாவட்டத்திலேயே தனிக் கவனம் பெற்றிருக்கிறது. அதிக இரட்டையர்கள் பயிலும் பள்ளி என்றாலே எங்களது பள்ளியைதான்  என்று அனைத்து பெற்றோர்களும் கூறுகின்றனர்.
பள்ளியில் மாடி தோட்டம் அமைத்து மாணவர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்தும் பயிற்சி அளிக்கிறோம் என்று பெருமையாக கூறும் பள்ளி நிர்வாக அலுவலர் தங்கவேலுவின் பேத்திகளும்  (எஸ்.எம்.சிவதாரிணி,எஸ்.எம்.பவதாரிணி) இதே பள்ளியில் பயிலும் இரட்டையர்கள்தான் என்பது இப்பள்ளிக்கு கூடுதல் சிறப்பு.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,