Tuesday, 3 May 2016

ஒவ்வொரு ஜனநாயகத் திருவிழாவிலும் ஆசிரியர்களின் குமுறல்....

ஒவ்வொரு ஜனநாயகத் திருவிழாவிலும் ஆசிரியர்களின் குமுறல்....
ஆசிரியர்கள் குமுறல் காரணங்களை ஆராயுமா தேர்தல் கமிஷன்?
இது தேர்தல் நேரம், தேர்தல் பணி பற்றி முன்பு பணிக்குச் சென்ற அனைவருக்கும் தெரியும்.தேர்தல் பணி ஆணையை வாங்க மறுக்கும் ஆசிரியர்கள்மீது கடும்  நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சியர்களின் மிரட்டல் தொணியிலான செய்தியை அறிந்திருப்பீர்கள்.மருத்துவ விடுப்பு எடுத்தால் ரத்து செய்யப்படும்,மருத்துவ குழுவுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
அவர்களது நடவடிக்கைகளைப் பார்த்தால் நாட்டில் ஆசிரியர்களுக்கென்றே தனியாக எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்டுள்ளதோ என்ற ஐயம் எழுகிறது. தேர்தல்பணி என்பது கட்டாயப்பணியாகத்தான் ஆசிரியர்கள்மீது திணிக்கப்படுகிறது.ஏறத்தாழ அனைத்து ஆசிரியர்களுமே  தேர்தல்பணியை வெறுக்கிறார்கள். 100%பேரும் கடினமான, விருப்பமில்லாத, வெறுக்கத்தக்க,கடும் பணிச்சுமையாகத்தான் கருதுகின்றனர்.*RTE Act 2009 எனப்படும் குழந்தைகள் கல்வி உரிமைக்காக கொண்டுவரப்பட்ட  கட்டாயக் கல்வி உரிமைச் சட்டமே ஆசிரியர்களைத் தேர்தல் பணிக்கு பயன்படுத்தலாம் எனக் கூறுகிறது. ஆசிரியர்களுக்கு கல்விப்பணியைத் தவிர வேறுபணிகளைக் கொடுக்கக்கூடாது எனப் பேசவேண்டிய சட்டம் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகளைத் தருவதற்கு நேரடியாகவும் பிறபணிகளைக் கொடுக்க மறைமுகமாகவும் அனுமதியளிக்கிறது. தேர்தல் பணி என்பதை ஏதோ  ஐந்து ஆண்டுகொருமுறைதானே என்று நினைத்துவிட வேண்டாம்,ஆண்டுமுழுவதற்குமான பணியாக தேர்தல் கமிஷன் நடைமுறைப்படுத்தப்படுகிறது.ஒரு கல்விக்கூடத்தில் ஆண்டு முழுவதும் மாணவர் சேர்க்கை என்றால் மகிழ்ச்சி அடையலாம்.ஆனால் தேர்தல் கமிஷனோ ஆண்டு முழுவதும் வாக்காளர் சேர்க்கை என ஆசிரியர்களைக் கட்டாயப்படுத்துகிறது. ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலையும் வாக்காளர் சேர்ப்பு விண்ணங்களையும் வீடுவீடாகச் சென்று சரிபார்க்க ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்.சர்வதேச தொழிலாளர் சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட வார விடுமுறையில் கூட சிறப்புமுகாம் என்ற பெயரில் ஞாயிற்றுக்கிழமையில் தேர்தல் பணி. வழக்கமாக   அக்டோபரிலிருந்து 30 முதல் 45நாள் வரை நடக்கும் இப்பணிக்கான ஊதியத்தைக் கேள்விப்பட்டால் ஊரே சிரிக்கும்.30 to 45 நாட்களுக்கும் சேர்த்து . 150ரூபாய்.தினந்தோறும் 5ரூபாய். குக்கிராமத்து டீக்கடையில்கூட டீ 10ரூபாய்க்கு விற்கும் விலைவாசியில் நாளொன்று 5ரூபாய் கூலிக்கு ஆட்களை அமர்த்துவது தேர்தல் கமிஷன் மட்டும்தான்.இவை எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த கொடுமைக்கான உதாரணம்,தேர்தல் பயிற்சி வகுப்புகளாகும்.தேர்தல் பயிற்சி நாளன்று கழிவறை மற்றும் குடிநீர் வசதிகள்கூடச் செய்யாமல் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களை ஒரே இடத்தில் கூடச்செய்து நான்காம்தரக் குடிமக்கள் போல நடத்துவது மனித உரிமைமீறலுக்கு ஒப்பான செயல்.பயிற்சியின் இடையே தேநீர் இடைவேளையாம் குடிநீரே இல்லாதபோது தேநீர் யார் தருவார்?எங்கே போவது? பெயரளவில் வழங்கப்பட்டதைப்போல் கணக்கு காட்ட வேண்டுமானால் வசதியாக இருக்கும்.மாநாடுபோல் நடக்கும் கூட்டங்களில் எந்தப் பயிற்சியை எதிர்பார்க்க முடியும்?
கூடிக்கலையும் கூட்டமா தேர்தல் பயிற்சிகள்?
அடுத்து இன்னொரு கொடுமையை மறக்காமல் பதிவு செய்யவேண்டும். அது வெளியூர் பயிற்சி தான்.தேர்தல் பணிதான் வெளியூர்களிலென்றால் 2நாள் பயிற்சியும் 100கி.மீ.க்கு அப்பால் வெளியூர்களில்தான்.ஏன் உள்ளூரில் நடந்தால் பயிற்சியில் தில்லுமுள்ளு நடந்துவிடுமோ? தமிழகம் முழுவதும் தேர்தல்! விதிமுறைகள் ஒரே மாதிரியானவைதானே, அப்படி இருக்கையில் 100 கி.மீ கடந்து சென்றுதான் விதிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? உள்ளூரில் பயிற்சி பெற்றால் தெரிந்து கொள்ள இயலாதா? இவை எல்லாவற்றுக்கும் மேலாக அடுத்த உச்சபட்ச கொடுமைக்கான உதாரணம்,2நாள் தேர்தல் பணிதான்.எந்த ஊருக்கு  செல்கிறோம் என்று தெரியாமலேயே அந்த ஊருக்கு  புறப்படும் காமெடி நிகழ்ச்சி தான் தேர்தலுக்கு முன் தின நிகழ்ச்சி.  100 கி.மீ அப்பால் ஒரு ஊருக்குச் சென்று , பணி செய்யும் ஊரைத் தெரிந்து மீண்டும் பயணம். எத்தனை கி.மீ. யாருக்குத் தெரியும்? தெரியாத அந்த ஊருக்கு, பஸ் இல்லாமல் சிலநேரங்களில் நடந்தே சென்று தேர்தலுக்கு முன் தினமே சென்று சேரவேண்டும். அங்கு சென்ற பிறகுதான் தெரியும் அங்கு பெட்டிக்கடைகூட இருக்காதென்று, ஆனால் தேர்தல் பணிக்குச் செல்வோர் தனக்கான உணவை தாங்களே ஏற்பாடு செய்துகொள்ள வேண்டுமாம்.இது தேர்தல் கமிஷனின் கண்டிப்பான உத்தரவு.எப்படிச் செய்யமுடியும் என்பது தேர்தல் கமிஷனுக்கே வெளிச்சம். தேர்தல் பொருட்களை மண்டல அலுவலர் வரும்வரை காத்திருந்து பெறவேண்டும்.(வடமாநிலங்களில் இப்பொருட்களை தேர்தல் பணியாளர்களே தலையில் சுமந்து செல்லவேண்டும்.)பெற்ற பொருட்களை வைத்து தேர்தலுக்கான முன் தயாரிப்பு வேலைகள் இரவுவரை முடிக்க வேண்டும். முடித்துவிட்டு தூங்கலாமா என்றால் கூடாது, அப்பொருட்களையெல்லாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவேண்டியது தேர்தல் பணியாளர்களின் கடமை என தேர்தல் பயிற்சியின்பொழுது திரும்பத் திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.எனவே இரவு முழுவதும் இரவுக்காவலர் பணி. நள்ளிரவில் எழுந்து தன்னை தயார் படுத்திக்கொண்டு வாக்குச் சாவடியை முறைப்படி அமைத்து  அமர்ந்தால், காலை மணி ஆறு,அரசியல்வாதிகளின் படையெடுப்பு.
அந்த ஊரிலுள்ள அனைத்து ஏழரைகளும் அமர்ந்திருக்கும் ஏஜென்ட்கள் என்ற பெயரில்.அவர்களிடம் நாங்கள் நேர்மையானவர்கள், எங்கள் ஓட்டு மிஷினும் நேர்மையானதுதான் என நிரூபிக்க வேண்டும்.நிரூபித்துவிட்டு அக்கடா என்று அமர்ந்தால் மணி ஏழு.இனிமேல்தான் வாக்குபதிவு.அதில்தான் எல்லாமே கூச்சல், குழப்பம், வாக்குவாதம்,தள்ளுமுள்ளு பல நேரங்களில் அடிதடி, வெட்டுக்குத்து.
எல்லாமே நடக்கும்.
நடக்காது என்று தேர்தல் கமிஷனே உத்தரவாதம் தரமுடியாது.நடக்கும் என எதிர்பார்த்துதான் sensitive booths என வகைப்படுத்தியுள்ளது.தமிழில் சொல்லிப்பாருங்கள் சொல்லும்போதே உங்கள் மனதில் கலவரம் தோன்றும்,ஆம் தமிழில்  பதற்றமான வாக்குச்சாவடிகள்.பதற்றம் வருகிறதா? வாக்குப்பதிவு காலை 7மணி முதல் மாலை 6மணி வரை 11மணி நேர இடைவேளையே இல்லாத கடும்பணி.உணவு இடைவேளை,தேநீர் இடைவேளை எதுவுமின்றி தடையின்றி வாக்குப்பதிவு நடைபெற வேண்டும். வாக்குபதிவு இயந்திரம் இடைவேளை எதுவும் கேட்பதில்லை அதேபோல் இயந்திரமாய் பணியாளர்களும் மாற வேண்டுமா? வாக்குப்பதிவு முடிந்ததே மணி 6 ஆயிற்றே வீட்டு செல்லலாமா என்றால் முடியாது.இரண்டாம் நாள் இரவுக்காவல் பணியை யார் செய்வது? இரவெல்லாம் காவலிருந்தால் நள்ளிரவு 2மணிக்கு மண்டல அலுவலர் வர அத்தனையும் கணக்கிட்டு வைத்திருந்தால்.,நாமோ 2016 ஆனால் அவரோ 1947.ஒட்டிய கவரைப் பிரி என்பார்,பிரித்த கவரை ஒட்டென்பார்.எல்லாம் சரியாக்கி ஒப்படைத்து முடித்து விட்டால் ஒற்றைக்காவலரும் புறப்பட்டுப்போயிருப்பார்.தேர்தல் கமிஷன் உச்சபட்ச மனிதாபிமானமற்ற செயல் இதுதான்.தேர்தல் முடிந்தது என்ற காரணத்திற்காக நட்ட நடு இரவில் பெண் / ஆண் ஊழியர்களை நடுகாட்டில் விட்டுவிடுவது, பாதுகாப்பை விலக்கிக்கொள்வது எந்த வகையில் நியாயமானது.தேர்தல் கமிஷனுக்கு ஒரு பகிரங்க சவால். தேர்தல் பணிக்கு விருப்பமுள்ள ஆசிரியர்கள் மட்டும் வரலாம் என்று முடிந்தால் இந்த ஒரு அறிவிப்பை மட்டும் தேர்தல் கமிஷன் வெளியிடட்டும்.ஒரே ஒரு ஆசிரியர் தேர்தல் பணிக்கு விரும்பி வருகிறேன் என வந்துவிட்டால் இனிவரும் அத்தனை தேர்தல்களிலும் இலவசமாய் ஊதியமில்லாமல் அனைத்து ஆசிரியர்களும் உழைக்கிறோம்.சவாலுக்கு தேர்தல் கமிஷன் தயாரா? 60ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் தேர்தல் பணியை அனைவரும் விரும்பும் பணியாக தேர்தல் கமிஷன் ஏன் மாற்றவில்லை?காரணங்களை ஆராயுமா தேர்தல் கமிஷன்?தேர்தல் பணிக்காக பெயரளவுக்கு தேர்தல் முடிந்து வழங்கப்படும் ரூ.ஆயிரம் சொச்சம் காசுக்காகத்தான் ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றுகிறார்கள் என இன்னமும் தேர்தல் கமிஷன் நினைப்பதுதான் முட்டாள்தனம்.ஜனநாயத்திருவிழாவில் தனது பங்களிப்பும் இருக்கவேண்டும் என நினைக்கும் ஆசிரியர்கள் பல்லாயிரம்பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக்கூடாது.
இப்படிக்கு ....
அன்புடன் ....
ஜனநாயகத்திருவிழாவில் இரவுக்காவலர் பணியாற்றப்போகும்...
வாக்குச்சாவடி தேர்தல் அலுவலர்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,