Tuesday, 14 June 2016

டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
டிஎன்பிஎஸ்சி-க்கு நியமிக்கப்பட்ட 11 புதிய உறுப்பினர்களின் முழு விவரங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டிஎன்பிஎஸ்சி) கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதிமுகவைச் சேர்ந்த 11 பேர் புதிய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இந்த நியமனத்தை எதிர்த்து திமுக சார்பில் டிகேஎஸ்.இளங்கோவன், பாமக சார்பில் வழக்கறிஞர் கே.பாலு மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் டாக்டர் எஸ்.கிருஷ்ணசாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகள் மீதான விசாரணை நேற்று தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடந்தது. அப்போது திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் ஆஜராகி, ‘‘ இந்த நியமனம் அரசியல் நியமனமாகத்தான் உள்ளது. தேர்ந்த கல்வியாளர்கள் யாரும் இல்லை. உயர் நீதிமன்றம் கட்டாய ஓய்வில் அனுப்பி வைத்த மாவட்ட நீதிபதியும், தற்போது உறுப்பினராகி உள்ளார். எனவே இவர்களின் நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்’’ என கோரினார். இதையடுத்து நீதிபதிகள், டிஎன்பிஎஸ்சி-க்கு புதிதாக நியமிக்கப்பட்ட உறுப்பினர்களான ஆர்.பிரதாப்குமார், வி.சுப்பையா, எஸ்.முத்துராஜ், எம்.சேதுராமன், ஏ.வி.பாலுச்சாமி, எம்.மாடசாமி, வி.ராமமூர்த்தி, பி.கிருஷ்ணகுமார், ஏ.சுப்பிரமணியன், என்.பி.புண்ணியமூர்த்தி, எம்.ராஜாராம் ஆகிய 11 பேரின் பயோ-டேட்டாவையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி விரைவில் அந்த பயோ-டேட்டாக்களை ஒரு தொகுப்பாக நீதிமன்ற பார்வைக்கு சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார். அதையடுத்து வழக்கை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.


No comments: