Monday, 13 June 2016

பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 1,200 பேர் வரை நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர்.

நடப்பாண்டில் ஓய்வு பெறுபவர்களின் எண்ணிக்கையால் பொதுப்பணித்துறையில் 1,200 பணியிடங்கள் காலியாகிறது
பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் 1,200 பேர் வரை நடப்பாண்டில் ஓய்வு பெறுகின்றனர். பொதுப்பணித்துறையில் கட்டுமானம் மற்றும் நீர்வளத்துறை என இரு அமைப்புகள் உள்ளன. இதன் மூலம் கட்டமைப்பு உருவாக்குதல், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக, கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட மண்டலங்களாக பிரிக்கப்பட்டு திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. இந்த துறையில், உதவி பொறியாளர், உதவி செயற்பொறியாளர், கண்காணிப்பாளர், தலைமை பொறியாளர் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு அவ்வப்போது மற்றும் காலி பணியிடங்கள் அடிப்படையில் பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. இதன் காரணமாகவும், பொறியாளர்கள் ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பொதுப்பணித்துறையில் காலி பணியிடங்கள் ஆண்டுக்காண்டு அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், ஏற்கனவே 500 உதவி பொறியாளர்கள், 350 இளநிலை உதவியாளர்கள், 62 உதவி செயற்பொறியாளர், 50 செயற்பொறியாளர், 30 கண்காணிப்பு பொறியாளர் 800 இளநிலை மற்றும் உதவி வரை தொழில் அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில், நடப்பாண்டில் பொதுப்பணித்துறையில் பல்வேறு பொறுப்புகளின் கீழ் பணிபுரிந்து வரும் பொறியாளர்கள் பலர் ஓய்வு பெறுகின்றனர். குறிப்பாக, 350 செயற்பொறியாளர்கள், 675 உதவி செயற்பொறியாளர்கள், 20 கண்காணிப்பு பொறியாளர் பணியிடங்கள் என 1,200க்கும் மேற்பட்ட பொறியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர். இதனால், அந்த துறையில் காலி பணியிடங்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் உள்ளது. நடப்பாண்டில் மட்டும் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வருபவர்கள் ஓய்வு பெறுவதால் பல்வேறு திட்ட பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறும் போது, ‘பொதுப்பணித்துறையில் இதுவரை அல்லாத வகையில் நடப்பாண்டில் மட்டும் பல்வேறு பொறுப்புகளில் பணிபுரிந்து வரும் பொறியாளர்கள் 1,200க்கும் மேற்பட்டோர் வரை ஓய்வு பெறுகின்றனர். ஏற்கனவே, ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ள நிலையில், மேலும், பலர் ஓய்வு பெறுகின்றனர். இதுதொடர்பாக பொதுப்பணித்துறை தலைமை தீவிரமாக ஆலோசித்து வருகிறது. முதற்கட்டமாக காலி பணியிடங்களை நிரப்பும் வகையில் 450 உதவி பொறியாளர் பணியிடங்களை நிரப்ப பொதுப்பணித்துறை தலைமை தரப்பில் டிஎன்பிஎஸ்சிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வௌியாக வாய்ப்புள்ளது’ என்றார்.


No comments: