Wednesday, 22 June 2016

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் வரி ஏய்ப்பு செய்தால் 3 ஆண்டு ஜெயில் கடும் நடவடிக்கையை அமல்படுத்த வருமான வரி அதிகாரிகளுக்கு உத்தரவு

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் விதிக்கவும், வரி ஏய்ப்பு செய்பவர்கள் மீது சிறை தண்டனை உள்ளிட்ட கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் வருமான வரித்துறையினருக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நமது நாட்டில் முறையாக வருமான வரி செலுத்தாமல், ஏய்க்கிறவர்கள் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே போகிறது.
அதிரடி மாற்றம் இப்படி வருமான வரி செலுத்தாமல், ஏய்க்கிறவர்கள் மீது சட்டத்தின் பிடியை இறுக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கூட்டணி அரசு முடிவு செய்துள்ளது. இதுவரை வருமான வரி செலுத்தாதவர்கள் வரியை அபராதத்துடன் செலுத்திவிட்டால் போதும், சட்ட நடவடிக்கையில் இருந்து தப்பிவிடலாம் என்ற நடைமுறை இருந்து வந்தது. அதில் இப்போது மத்திய அரசு பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அந்த வகையில் வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது எடுக்க வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் பற்றிய வழிமுறை குறிப்புகளை மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படுகிற சி.பி.டி.டி. என்னும் மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறைக்கு அனுப்பி உள்ளது. 3 ஆண்டு சிறை தண்டனை அந்த வழிமுறை குறிப்புகளில் மிக முக்கியமான ஒன்று, அபூர்வமாக பயன்படுத்தப்படுகிற இந்திய வருமான வரி சட்டம் பிரிவு 276 சி (2) -ஐ பயன்படுத்தவும் அதிகாரிகள் தயங்கக்கூடாது என்பதுதான். இந்த சட்டப்பிரிவின்படி, வருமான வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து, 3 மாதங்கள் முதல் 3 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்க முடியும். சிறை தண்டனையுடன், அபராதமும் விதிக்க இயலும். சொத்துகள் ஜப்தி, விற்பனை அத்துடன் அவர்களது சொத்துகளை ஜப்தி செய்து, ஓராண்டுக்குள் விற்பனை செய்யவும் வழி இருக்கிறது. இந்த சட்டப்பிரிவின்படி நடவடிக்கை எடுப்பதற்கு, டி.ஆர்.ஓ. என்னும் வரி மீட்பு அதிகாரியை வருமான வரித்துறை அமர்த்தி உள்ளது. இந்த டி.ஆர்.ஓ. கட்டமைப்பு வலுப்படுத்தப்பட வேண்டும், தேவையான ஆள்பலத்தையும் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், வேண்டுமென்றே வருமான வரி செலுத்தாதவர்களை கைது செய்து, காவலில் வைக்க வகை செய்கிற வருமான வரிச்சட்டத்தின் விதிகள் 73-ல் இருந்து 81 வரையிலானவற்றை வரி மீட்பு அதிகாரி பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் வழிமுறை குறிப்பு கூறுகிறது. கடன்மீட்பு தீர்ப்பாயம் வேண்டுமென்றே வரி செலுத்தாமல் இருக்கிறபோது, தனது அதிகாரத்தை டி.ஆர்.ஓ. பயன்படுத்த வேண்டும்; தொடர்ந்து ஒருவர் நீண்டகாலமாக வரி செலுத்தாமல் ஏய்த்து வந்திருக்கிறபோது, அவரை கைது செய்து காவலில் வைக்கிற தனது அதிகாரத்தை டி.ஆர்.ஓ. பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை பொறுத்தமட்டில் எல்லா மட்டத்திலும் வரி வசூல் செய்வது ஒன்றை மட்டுமே முக்கிய நோக்கமாக கொண்டு செயல்படவும், இது தொடர்பாக டி.ஆர்.டி. என்னும் கடன் மீட்பு தீர்ப்பாயம் வரை செல்லவும் டி.ஆர்.ஓ.க்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், புதிய வழிமுறைகளை பின்பற்றி, வரி செலுத்தாமல் யாரும் எளிதில் தப்பிக்க முடியாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பான் எண் முடக்கம் ‘வரி செலுத்தாமல் ஏய்க்கிறவர்களின் ‘பான்’ என்னும் வருமான வரி நிரந்தர கணக்கு எண் முடக்கப்பட வேண்டும். இதன்மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் எந்தவொரு கடனையும் பொதுத்துறை வங்கிகளில் இருந்து பெற முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும்’ எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி இதுபற்றி பத்திரப்பதிவாளர்களுக்கு தகவல் தெரிவித்து, சம்பந்தப்பட்ட நபர்களின் பெயரில் எந்தவொரு அசையா சொத்தையும் பதிவு செய்ய முடியாத நிலையை ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த வழிமுறை குறிப்புகளில் கூறப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பு செய்பவர்களுக்கு சமையல் கியாஸ் சிலிண்டர் மானியத்தை ரத்து செய்ய நிதித்துறை அமைச்சகத்துக்கு முறையீடு செய்ய வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கண்காணிக்க வேண்டும் இந்த வழிமுறைகளை பின்பற்றி, வரி ஏய்ப்பு செய்கிறவர்கள்மீது வரி மீட்பு அதிகாரிகள் (டி.ஆர்.ஓ.) உரிய நடவடிக்கை எடுக்கிறார்களா என கண்காணிக்குமாறு வருமான வரித்துறை முதன்மை கமிஷனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் சொத்துகளை ஜப்தி செய்வதுடன், அவ்வாறு ஜப்தி செய்தவற்றை ஒரு வருட காலத்திற்குள் விற்பனை செய்வதிலும் வரி மீட்பு அதிகாரிகளின் செயல்பாடுகளை வருமான வரித்துறை முதன்மை கமிஷனர்கள் கண்காணிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் வருமான வரி ஏய்ப்பு செய்கிறவர்களின் எண்ணிக்கை எப்படி அதிகரித்து வருகிறதோ, அதே போன்று வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாதவர்களின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது. இதற்கும் முடிவு கட்ட நடவடிக்கை பாய்கிறது. வருமான வரிச்சட்டம் பிரிவு 139 (1) படி வருமான வரி கணக்கினை ஒருவர் தாக்கல் செய்ய வேண்டும். அப்படி தாக்கல் செய்யாதபோது அவர் மீது அதே சட்டத்தின் பிரிவு 271 எப்- படி, ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. வரிகள் வாரியம் விளக்கம் இதற்கிடையே வரி ஏய்ப்பு செய்கிறவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதில், கடந்த வாரம் நடந்த வருமான வரித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இந்த வழிமுறைகள் அதிகாரிகளிடம் சுழற்சிக்கு விடப்பட்டதாகவும், வருமான வரி செலுத்தாமல் ஏய்க்கிறவர்களை கைது செய்து, காவலில் வைத்து நடவடிக்கை எடுப்பதற்கு வருமான வரி சட்டத்தில் ஏற்கனவே விதிமுறைகள் இருப்பதாகவும், ஆனால் அவை மிகவும் அபூர்வமாகவே அமல்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

TRB