Wednesday, 8 June 2016

7-வது சம்பள கமிஷன் முரண்பாடுகள் - ஜூலை 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - நாடு முழுவதும் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு:

நாடு முழுவதும் 40 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பங்கேற்பு: ஜூலை 11-ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் ‘எந்த ரெயிலும் ஓடாது’ என்று தொழிற்சங்கம் அறிவிப்பு 
36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை 11-ந் தேதி முதல் ரெயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 40 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்பார்கள் என்றும் எந்த ரெயிலும் ஓடாது என்றும் தொழிற்சங்கம் அறிவித்து உள்ளது. 36 அம்ச கோரிக்கைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதிய கமிஷனில் உள்ள முரண்பாடுகளை நீக்க வேண்டும், அடிப்படை ஊதியம் ரூ.26 ஆயிரம் என்று நிர்ணயிக்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட 36 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரெயில்வே மற்றும் மத்திய அரசு ஊழியர்களின் தேசிய கூட்டுப் போராட்டக் குழு கடந்த ஏப்ரல் 11-ந் தேதி காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது.
தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக ‘வாபஸ்’ பெறப்பட்டது. இந்த நிலையில் நாடு முழுவதும் வேலை நிறுத்தம் போராட்டம் மீண்டும் எதிரொலித்து உள்ளது. 7-வது சம்பள கமிஷன் முரண்பாடுகள் கூட்டு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், சதர்ன் ரெயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யூ.) தொழிற்சங்க பொதுச்செயலாளருமான என்.கண்ணையா சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்களின் நீண்ட நெடிய போராட்டங்களுக்கு பிறகு கடந்தாண்டு 7-வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வெளியானது. இந்த பரிந்துரைகள் மத்திய அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டது. இந்த பரிந்துரைகள் அனைத்தும் ரெயில்வே ஊழியர்களுக்கும், ரெயில்வே துறைக்கும் எதிரான முரண்பாடுகளை உள்ளடக்கியே இருந்தன. இதையடுத்து பல கட்டங்களாக மத்திய அரசு பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். இதையடுத்து காலவரையற்ற போராட்டம் அறிவித்தோம். ஆனால் தேர்தலையொட்டி மக்கள் நலனுக்காக போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றோம். அதற்கு பிறகும் மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு மெத்தனமாக செயல்பட்டது. இடைப்பட்ட காலத்தில் நடந்த 5 பேச்சுவார்த்தைகளிலும் எங்களது கோரிக்கைகளை ஏற்க மத்திய அரசு தயாராக இல்லை. தொடர்ந்து பாராமுகமாக இருந்து வரும் மத்திய அரசுக்கு எங்களது கோரிக்கைகளை வலுவாக சொல்ல நினைத்தோம். இதுதொடர்பாக கடந்த 3-ந் தேதி டெல்லியில் தேசிய கூட்டு போராட்டக் குழு முக்கிய ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்தாக காலவரையற்ற போராட்டத்தை நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத மத்திய அரசால், வேலை நிறுத்தம் என்ற முடிவை வேறு வழியில்லாமல் எடுக்கப்பட்டது. எனவே அடுத்த மாதம் (ஜூலை) 11-ந் தேதி காலை 6 மணியில் இருந்து தெற்கு ரெயில்வே தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் தொடங்க உள்ளது. போராட்டம் தொடர்பான அறிவிப்பை 9-ந் தேதி (நாளை) பிற்பகல் 1 மணிக்கு தெற்கு ரெயில்வே பொது மேலாளரிடம் வழங்க உள்ளோம். இதைப்போலவே தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் உள்ள தபால், பாதுகாப்பு, வருமான வரி உள்பட 36 துறை மத்திய அரசு ஊழியர்கள் சங்க தலைவர்களும் வேலை நிறுத்தம் தொடர்பான நோட்டீசை தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் வழங்குவார்கள். அந்தவகையில் நாடே ஸ்தம்பிக்கும் வகையில் ரெயில்வே உள்பட மத்திய அரசு ஊழியர்கள் 40 லட்சம் பேர் ஜூலை 11-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள். எனவே அன்றைய தினம் முதல் ஒரு ரெயிலும் ஓடாது. இதனால் பொருளாதார ரீதியில் அரசுக்கு மிகப்பெரிய இழப்பு நேரிடும். 1974-ம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். 21 நாட்கள் நடந்த அந்த வேலை நிறுத்தத்தால் இந்தியாவே ஸ்தம்பித்தது. அதுபோல ஒரு வேலை நிறுத்தத்தை மீண்டும் இந்தியா சந்திக்க இருக்கிறது. இந்த வேலை நிறுத்த அறிவிப்பு திட்டமிட்டபடி நடக்கும். இந்தமுறை ‘வாபஸ்’ என்பதற்கே இடமில்லை. நிச்சயம் இந்த போராட்டம் காரணமாக மக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று உணர்கிறோம். ஆனால் உரிமைகள் மற்றும் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டதால் இந்த கடினமான முடிவை எடுக்கிறோம். ஒவ்வொரு முறையும் பேச்சுவார்த்தையில் ஏதாவது நல்லது நடந்துவிடாதா? என்று தான் போராட்டத்தை நடத்த யோசித்தோம். இந்த முறை அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாது. ரெயில்வே துறை காணாமல் போகும் ரெயில்வே உள்பட அனைத்து துறைகளிலும் அன்னிய முதலீடு, தனியார் கம்பெனிகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு என்பது நீடித்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் ரெயில்வே துறையே காணாமல் போகும். பத்து லட்சம் ரெயில்வே ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும். இட ஒதுக்கீடு மூலம் வேலை பெற்று வரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்டோர் கடுமையாக பாதிப்படைவார்கள். ரெயில்வே தனியார் வசம் சென்றால் பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்கள் பெருமளவு உயரும். மின்சார ரெயில் கட்டணமும் வெகுவாக உயர்ந்து விடும். இதனால் மக்கள் பாதிக்கப்படுவது உறுதி. ‘ஹை-ஸ்பீடு’ எனும் அதிவேக ரெயில்கள் அறிமுகம் என்ற பெயரில் கட்டண கொள்ளை நடக்கும். வெறும் 5 அல்லது 10 நிமிடங்கள் முன் செல்வதற்காக ரூ.100 முதல் ரூ.300 வரை கட்டணம் வசூலிக்கப்படும். எனவே மத்திய அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடக்க உள்ள காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள், பொதுமக்கள் ஆதரவு தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது, எஸ்.ஆர்.எம்.யூ. தலைவர் சி.ஏ.ராஜாஸ்ரீதர், துணை பொதுச்செயலாளர் ஜி.ஈஸ்வர்லால் ஆகியோர் உடனிருந்தனர்.


No comments: