Saturday, 11 June 2016

உளுந்தூர்பேட்டை அருகே விபரீதம் பள்ளி மாணவர்களுக்கு சூடு ஆசிரியை கைது, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்

உளுந்தூர்பேட்டை அருகே விபரீதம் பள்ளி மாணவர்களுக்கு சூடு ஆசிரியை கைது, தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
உளுந்தூர்பேட்டை அருகே பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியை கற்பூரத்தால் சூடு வைத்த சம்பவம் தொடர்பாக பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட 8 மாணவ, மாணவிகள் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டை அருகே பாலி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 53 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் 4-ம் வகுப்பில் பாடம் நடத்திய ஆசிரியை வைஜெயந்திமாலா, பாடம் தொடர்பாக மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு சுப்புலட்சுமி, அனிதா, ப்ரீத்தி, கவுசல்யா, சந்தோஷ்ராஜ், புகழேந்தி, ஹரிகிருஷ்ணன், ராஜ சேகர் ஆகிய 8 மாணவ, மாணவி களும் சரியாக பதில் அளிக்க வில்லை. உடனே ஆசிரியை வைஜெயந்திமாலா, பிரம்பால் அடித்துள்ளார். மேலும் அவர்களின் காலில் கற்பூரத்தை ஏற்றி சூடு வைத்துள்ளார். தீக்காயத்துடன் வீட்டுக்குச் சென்ற மாணவர்கள் பெற்றோரிடம் இதுபற்றி தெரிவித் தனர். நேற்று காலை வழக்கம்போல் பள்ளி திறந்தபோது, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர் பள்ளி யின் முன் திரண்டனர். அவர்கள் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி ஆவேசமாக முறையிட்டனர். தீக்காயமடைந்த மாணவர் கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். தகவலறிந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ், ஆசிரியை மற்றும் தலைமை ஆசிரி யர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளும்படி மாவட்டக் கல்வி அலுவலர் இளங்கோவனுக்கு உத்தரவிட்டார். முதற்கட்டமாக ஆசிரியை வைஜெயந்திமாலா மற்றும் தலைமை ஆசிரியர் வரதராஜன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மாணவ, மாணவி களை மாவட்டக் கல்வி அலுவலர் இளங்கோவன் சந்தித்து, அங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார். அங்கு திரண்டிருந்த பெற்றோர் ஆசிரியை வைஜெயந்திமாலா பற்றி புகார்களை தெரிவித்தனர். பாதிக்கப் பட்ட மாணவர்களின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் உளுந்தூர் பேட்டை போலீஸார் ஆசிரியை வைஜெயந்திமாலாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றோரிடையே இந்த சம்பவம் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பள்ளிக்கு நேற்று விடுமுறை விடப்பட்டது. கைது செய்யப்பட்ட ஆசி ரியை வைஜெயந்திமாலா உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிபதி ரோஸ்லின் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். ஆசிரியை வைஜெயந்திமாலாவை 24-ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதையடுத்து, அவரை போலீஸார் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.


No comments: