Tuesday, 14 June 2016

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்கள் அதிகரிப்பு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு

கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்கள் அதிகரிப்பு சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு
கலை, அறிவியல் கல்லூரிகளில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் இடங்களை அதிகரிப்பது என்று சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. மாணவர் சேர்க்கை பொறியியல் கல்லூரிகளை விட, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் சேரவேண்டும் என்றும், நகர்ப்புறத்தில் படித்தால் நல்லது என்றும் பல பெற்றோர்கள், மாணவர்கள் விரும்புகிறார்கள். அதன் காரணமாக சென்னையில் சில குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர்களுக்கு இடம் கிடைத்தால் அவர்கள் எல்லை இல்லா இன்பம் அடைகிறார்கள்.
இந்த சூழ்நிலையில் சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டம் பகல் 2-30 மணிக்கு தொடங்கியது. உயர்கல்வித்துறை செயலாளர் அபூர்வா, கல்லூரி கல்வி இயக்குனர் சேகர், சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஸ்ரீமன் நாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். கூட்டம் மாலை 4 மணிக்கு முடிவடைந்தது. கூட்டம் முடிந்ததும் சென்னை பல்கலைக்கழக பதிவாளர் டேவிட் ஜவஹர் நிருபர்களிடம் கூறியதாவது:- சிண்டிகேட் கூட்டத்தில் முக்கிய முடிவாக கல்லூரிகளில் உள்ள இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழக கட்டுப்பாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களை சேர்ந்த அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரிகள், சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகள் என மொத்தம் 140 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அனைத்து கல்லூரிகளிலும் சேர்வதற்கு மாணவ- மாணவிகள் அலை மோதுகிறார்கள். எனவே கல்லூரிகளில் இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று கல்லூரிகள் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. எனவே மாணவர் நலன் கருதி அனைத்து பாடப்பிரிவிலும் இடங்களை அதிகரிக்க சிண்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அரசு கல்லூரிகளில் 20 சதவீதம், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவீதம், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவீதம் என்று இடங்களை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு டேவிட் ஜவஹர் தெரிவித்தார்.


No comments:

TRB