Thursday, 16 June 2016

பள்ளிச்சான்றிதழ்களில் சாதி, மதங்களை குறிப்பிடத்தேவை இல்லை என்ற அரசாணையை விளம்பரப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பள்ளிச்சான்றிதழ்களில் சாதி, மதங்களை குறிப்பிடத்தேவை இல்லை என்ற அரசாணையை விளம்பரப்படுத்த வேண்டும் தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு
பள்ளிச்சான்றிதழ்களில் சாதி, மத விவரங்களை குறிப்பிடத்தேவை இல்லை என்று பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரியும் விதமாக தமிழக அரசு விளம்பரப்படுத்தவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:-
பள்ளி மாற்றுச் சான்றிதழிலும், பள்ளிச் சான்றிதழிலும் தன்னுடைய சாதி, மதம் ஆகியவற்றை குறிப்பிட ஒருவர் விரும்பவில்லை என்றால், அதை பள்ளி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை 1973-ம் ஆண்டு ஜூலை 2-ந் தேதி அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆனால், இந்த அரசாணை குறித்து பொதுமக்கள் மத்தியில் விளம்பரம் செய்யவில்லை. அதேநேரம், தமிழக பள்ளிக்கல்வித்துறை 1973-ம் ஆண்டு பிறப்பித்த இந்த அரசாணையை வலியுறுத்தி, கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 31-ந் தேதி மற்றொரு அரசாணையையும் பிறப்பித்துள்ளது. இந்த அரசாணை குறித்தும் பொதுமக்களுக்கு விளம்பரம் செய்யவில்லை. இதனால், அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய பள்ளிகளின் நிர்வாகம், மாற்றுச்சான்றிதழில் (டி.சி.யில்) கண்டிப்பாக சாதி, மதத்தை குறிப்பிடவேண்டும் என்று மாணவர்களையும், அவர்களது பெற்றோர்களையும் வற்புறுத்துகின்றன. இதனால் சாதி, மதத்தை துறக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் விரக்தி அடைகின்றனர். இதையடுத்து, பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தை குறிப்பிட நிர்பந்திக்கக்கூடாது என்று கடந்த மே மாதம் 5-ந் தேதி உயர் கல்வித்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர் ஆகியோருக்கு மனு அனுப்பினேன். இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் எஸ்.சத்தியசந்திரன் ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சாதி, மதம் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழக அரசு அரசாணையை பிறப்பித்துள்ளது. ஆனால், அந்த அரசாணையை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற மனுதாரரின் கோரிக்கையை நாங்களும் ஏற்கிறோம். எனவே, இந்த அரசாணை விவரங்கள் பொதுமக்களுக்கு தெரியும் விதமாக தமிழக அரசு விளம்பரப்படுத்தவேண்டும். இதன்மூலம் பள்ளிச்சான்றிதழில் சாதி, மத பெயரை குறிப்பிட விரும்பாதவர்களை, அதை குறிப்பிடவேண்டும் என்று வற்புறுத்த முடியாது. அதேநேரம், பள்ளி மாற்றுச்சான்றிதழில் சாதி, மத பெயரை குறிப்பிடக்கூடாது என்று எங்களால் உத்தரவிட முடியாது. ஏன் என்றால், அவற்றை குறிப்பிட சிலர் விரும்புகின்றனர். அதேநேரம், அவற்றை குறிப்பிட விரும்பாதவர்களை, தமிழக அரசின் அரசாணையின்படி வற்புறுத்தவும் முடியாது என்பதை தெளிவுபடுத்தி, இந்த வழக்கை முடித்து வைக்கிறோம். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


No comments: