Tuesday, 21 June 2016

TNEA 2016 Random Number Download | பொறியியல் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு-தரவரிசை பட்டியல் நாளை (22.6.2016) வெளியிடப்படுகிறது.

பொறியியல் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ வெளியீடு-தரவரிசை பட்டியல் நாளை (22.6.2016) வெளியிடப்படுகிறது.
தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேர நடைபெறும் கலந்தாய்வுக்கான ‘ரேண்டம் எண்’ நேற்று வெளியிடப்பட்டது. தரவரிசை பட்டியல் நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் என 538 கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் பி.இ., பி.டெக். உள்ளிட்ட பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி வருகிறது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு விண்ணப்பம் செய்ய மொத்தம் 2 லட்சத்து 53 ஆயிரத்து 113 பேர் பதிவு செய்திருந்தனர். ஆனால் 83 ஆயிரத்து 706 மாணவர்கள், 51 ஆயிரத்து 288 மாணவிகள் என மொத்தம் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 994 பேர்களிடம் இருந்து மட்டுமே விண்ணப்பம் பெறப்பட்டிருந்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு ‘ரேண்டம் எண்’ வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது. தமிழக அரசின் உயர்கல்வித்துறை செயலாளர் ஏ.கார்த்திக் கலந்துகொண்டு பொறியியல் படிப்புக்கான ரேண்டம் எண்ணை தொடங்கி வைத்தார். அப்போது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்குனர் எஸ்.மதுமதி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், கிண்டி பொறியியல் கல்லூரி ‘டீன்’ நாராயணசாமி, பேராசிரியர்கள் இந்துமதி, ஜி.நாகராஜன், மல்லிகா ஆகியோர் உடன் இருந்தனர். தரவரிசை பட்டியல் இதையடுத்து ஏ.கார்த்திக் நிருபர்களிடம் கூறியதாவது:- பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்காக விண்ணப்பித்தவர்களுக்கு 10 இலக்கங்களை கொண்ட ‘ரேண்டம் எண்’ ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் ஒரே மதிப்பெண் பெற்று இருந்தால் இந்த முறையின்படி இடம் ஒதுக்கப்படும். கடந்த ஆண்டு ‘ரேண்டம் எண்’ முறையில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியல் 22-ந் தேதி (நாளை) வெளியாகிறது. 24-ந் தேதி விளையாட்டு துறையை சேர்ந்தவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து 25-ந் தேதி மாற்றுத்திறனாளி பிரிவினருக்கும், 27-ந் தேதி முதல் பொதுபிரிவினருக்கான கலந்தாய்வும் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


No comments: