Wednesday, 27 July 2016

7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது.

7-வது சம்பள கமிஷன் சிபாரிசுப்படி மத்திய அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வு அரசிதழில் வெளியீடு
7-வது சம்பள கமிஷன் சிபாரிசைத் தொடர்ந்து, மத்திய அரசு ஊழியர்களின் புதிய ஊதிய விகிதம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதன்படி, அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியங்களை மாற்றி அமைக்க நீதிபதி ஏ.கே.மாத்தூர் தலைமையில் 7-வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் தனது சிபாரிசுகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்தது. அதில், இதர படிகள் உள்பட ஒட்டுமொத்தமாக 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்தது.
கடந்த மாதம் நடைபெற்ற மத்திய மந்திரிசபை கூட்டத்தில், அடிப்படை சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான சிபாரிசு மட்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மொத்தம் உள்ள 196 இதர படிகளில், 53 படிகளை ரத்து செய்ய வேண்டும் என்று சம்பள கமிஷன் சிபாரிசு செய்திருந்ததால், இதர படிகள் தொடர்பான இறுதி முடிவு எடுக்க மத்திய நிதித்துறை செயலாளர் தலைமையிலான கமிட்டியிடம் அப்பிரச்சினை ஒப்படைக்கப்பட்டது. அந்த கமிட்டி, 4 மாதங்களில் மத்திய அரசிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று தெரிகிறது. அரசிதழில் வெளியீடு இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிக்கையை அரசி தழில் மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம், ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை சம்பளம் 2.57 மடங்கு உயர்ந்துள்ளது. குறைந்தபட்ச சம்பளம் ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிகபட்ச சம்பளம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம், காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளின் தலைவர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.4 லட்சத்து 50 ஆயிரமும், உறுப்பினர்களுக்கு தொகுப்பூதியமாக ரூ.4 லட்சமும் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல், முன்தேதியிட்டு சம்பள உயர்வு வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்து 2 ஆயிரம் கோடி செலவாகும். இதர படிகள் இதர படிகள் தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும் வரை, தற்போதைய விகிதாச்சாரப்படியே இதர படிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது, வருடாந்திர ஊதிய உயர்வு, ஆண்டுதோறும் ஜூலை 1-ந் தேதி என்ற ஒரே தேதியில்தான் வழங்கப்பட்டு வருகிறது. இனிமேல், ஊதிய உயர்வுக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 என இரண்டு தேதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ஊழியரின் பணி நியமன தேதி, பதவி உயர்வு தேதி ஆகியவற்றைப் பொறுத்து, மேற்கண்ட இரண்டு தேதிகளில் ஏதேனும் ஒரு தேதியில் அவர்களுக்கு ஆண்டுக்கு ஒரே ஒரு ஊதிய உயர்வு வழங்கலாம் என்று அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. வருடாந்திர உயர்வு கிடையாது சிறப்பாக செயல்படாத மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு முடக்கிவைக்கப்படும் என்றும் மத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது. சிறப்பான செயல்பாடுக்கான அளவுகோல், ‘நன்று’ என்ற நிலையில் இருந்து ‘மிக நன்று’ என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. பணிக்கு சேர்ந்த முதல் 20 ஆண்டுகளில், ஒரு ஊழியர், இந்த அளவுகோலை எட்டாவிட்டால், அவருக்கு எதிர்காலத்தில் வருடாந்திர ஊதிய உயர்வையோ, பதவி உயர்வையோ வழங்காமல் நிறுத்திவைக்கலாம் என்று 7-வது சம்பள கமிஷன் அளித்த சிபாரிசை ஏற்று, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

TRB