Friday, 15 July 2016

கோயம்புத்தூர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 969 புதிய பணிஇடங்கள் ஜெயலலிதா உத்தரவு

கோயம்புத்தூர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 969 புதிய பணிஇடங்கள் ஜெயலலிதா உத்தரவு
கோயம்புத்தூர், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிகளில் 969 புதிய பணிஇடங்கள் ஏற்படுத்துவதற்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஆண்டு தோறும் புதிது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு ஆண்டுதோறும் ஒரு புதிய அரசு மருத்துவக் கல்லூரியை ஏற்படுத்தி வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் சிவகங்கை, திருவண்ணாமலை மற்றும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகம் ஆகிய இடங்களில் மூன்று மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த மருத்துவக் கல்லூரிகள் ஒவ்வொன்றிலும் ஆண்டுதோறும் 100 மாணவர்கள் மருத்துவ பட்டப்படிப்புகளில் சேர்க்கப்படுகின்றனர்.
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 410 மருத்துவ பட்டப்படிப்பு இடங்களுக்கு இந்திய மருத்துவக் குழுமத்தில் அனுமதி பெறப்பட்டு மாணவர்கள் பட்டப்படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டு, கோயம்புத்தூர் தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரியில் 100 மாணவர்கள் சேர்க்கையுடன் மருத்துவ படிப்பு தொடங்க மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதாவது, கடந்த ஐந்தாண்டுகளில் 810 மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நிதி ஒப்பளிப்பு முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உத்தரவின்படி, கரூர் மற்றும் புதுக்கோட்டையில் தலா 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கையுடன் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் புதிய மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டவும், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைக்கவும் தலா 229 கோடியே 46 லட்சம் ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதலும், நிதி ஒப்பளிப்பும் வழங்கப்பட்டுள்ளது. அலுவலர் நியமனம் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி 2017-18-ம் கல்வியாண்டு முதல் 150 மாணவர்கள் சேர்க்கையுடன் தொடங்க கட்டிடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஒரு சிறப்பு அலுவலர், முதல்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தேவையான பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவம் சாரா பணியாளர்கள் என 808 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதால் அரசுக்கு தொடர் செலவினமாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 39 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவாகும். புதிய பணியிடம் மேலும், புதுக்கோட்டையில் தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரிக்கு முதற்கட்டமாக பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் மற்றும் மருத்துவம் சாராத பணியாளர்கள் என 161 புதிய பணியிடங்களை ஏற்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இந்த கூடுதல் பணியிடங்கள் காரணமாக, அரசுக்கு தொடர் செலவினமாக ஆண்டு ஒன்றுக்கு சுமார் 8 கோடியே 87 லட்சம் ரூபாய் செலவாகும். அதாவது, கோயம்புத்தூர் தொழிலாளர் அரசு ஈட்டுறுதி மருத்துவமனை, அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் புதுக்கோட்டையில் தொடங்கப்பட உள்ள அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றுக்கு 969 புதிய பணியிடங்கள் ஏற்படுத்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படுவதால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு, சுமார் 48 கோடியே 55 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

TRB