Thursday, 21 July 2016

அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்
அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதல்-அமைச்சர் ஜெயலலிதா 18.7.2016 அன்று தலைமைச்செயலகத்தில், 1.7.2016 முதல் 30.6.2020 வரை நான்கு ஆண்டு காலத்திற்கு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 அரசுப் பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளை வழங்கினார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்தி 1.7.2012 முதல் 30.6.2016 வரை நான்கு ஆண்டு காலத்திற்கு மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட, ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார். இந்த மருத்துவ காப்பீட்டு திட்டமானது 30.6.2016 முடிவடைந்ததையடுத்து, 1.7.2016 முதல் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை சில கூடுதல் பயன்களுடன் செயல்படுத்திட ஜெயலலிதா உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையைப்பின்பற்றி, பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு, ஒப்பந்தப்புள்ளியை ஏற்கும் குழு யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தை தெரிவு செய்தது. அதன் அடிப்படையில் 1.7.2016 முதல் 30.6.2020 வரையிலான காலத்திற்கு அரசுப்பணியாளர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம் செயல்படுத்திட ஜெயலலிதா உத்தரவிட்டார். அரசுப் பணியாளர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்படும் இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் நான்கு ஆண்டுகளுக்கு அரசுப் பணியாளர் குடும்பத்திற்கு அனுமதிக்கப்படும் மருத்துவ காப்பீட்டு தொகை 4 லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், புற்று நோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட குறிப்பிட்ட சில சிகிச்சைகளுக்கு அனுமதிக்கப்படும் நிதியுதவியானது 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியரை முழுவதும் சார்ந்துள்ள, குறைந்தபட்சம் 40 சதவீத குறைபாடு கொண்ட மாற்றுத்திறனாளிகள், எவ்வித வயது வரம்புமின்றி இத்திட்டத்தில் பயன்பெற வகை செய்யப்பட்டுள்ளதுடன், விபத்து காரணமாக இத்திட்டத்தின் கீழ் ஒப்புதலளிக்கப்பட்ட சிகிச்சைகளை அவசர சிகிச்சையாக அங்கீகரிக்கப்படாத மருத்துவமனையில் மேற்கொண்டிருப்பின், பணியாளர் பயன்பெறவும் இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் அரசு துறை, உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்படியான வாரியங்கள், மாநில அரசு பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றின் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் நான்கு ஆண்டுகளுக்கு மருத்துவ காப்பீட்டு பலன்களை பெற முடியும். 10 லட்சம் பணியாளர்கள் இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு அரசு பணியாளர்கள் சந்தாத்தொகையாக மாதம் 180 ரூபாய் செலுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு தனது பங்காக மொத்தம் 17 கோடியே 90 லட்சம் ரூபாயை ஆண்டு தோறும் காப்பீட்டு நிறுவனத்திற்கு வழங்கும். இந்த திட்டத்தின் மூலம் சுமார் 10.22 லட்சம் அரசுப் பணியாளர் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் பயன் பெறுவர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

TRB