Thursday, 28 July 2016

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு சட்டப்பேரவையில் தகவல்.

பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கான குழுவின் பணிக்காலம் நீட்டிப்பு சட்டப்பேரவையில் தகவல்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறு கள் பற்றி ஆராய அமைக்கப்பட்ட வல்லுநர் குழுவின் பணிக்காலம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக கொறடா அர.சக்கரபாணி (ஒட்டன்சத்திரம்) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து அமைச்சர் பேசியதாவது:
முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தவாறு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை தொடர்வதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆராய கடந்த 26-2-2016-ல் வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பணிக்காலம் 4 மாதங்கள். இக்குழுவின் முதல் கூட்டம் கடந்த 28-3-2016-ல் நடைபெற்றது. குழுவில் இடம்பெற்றிருந்த சென்னை பொருளியல் கல்வி நிறுவன பேராசிரியர்கள் கே.வி.பார்த்தசாரதி, லலிதா சுப்பிரமணியம் ஆகியோர் தங்களால் இக்குழுவில் பணியாற்ற இயலாது என தெரிவித்துள்ளனர். எனவே, அவர்களுக்குப் பதிலாக சென்னை பொருளியல் கல்வி நிறுவன பேராசிரியர்கள் பிரிஜேஷ், சி.புரோஹித் ஆகியோரை உறுப் பினர்களாக சேர்க்கவும், குழுவின் பணிக்காலத்தை 25-6-2016 முதல் மேலும் 3 மாத காலத்துக்கு நீட்டிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வல்லுநர் குழு தனது முதல் கூட்டத்தில் ஓய்வூதியம் குறித்த செலவினை மதிப்பீடு செய்ய ஏதுவாக ஓய்வூதியம் குறித்த புள்ளிவிவரங்களை ஆராய்ந்து அறிக்கை அளிக்க முடிவு செய்யப்பட்டது. இந்த ஆய்வு அறிக்கையை ஆராய்ந்து அதன் அடிப்படையில் வல்லுநர் குழு தனது நடவடிக்கையை தொடரும். இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

No comments:

TRB