Wednesday, 31 August 2016

மத்திய அரசு ஊழியர் களுக்கு 2 வருட போனஸ் வழங்கப்படும், தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக உயர்த்தப்படும் என நிதி மந்திரி அருண் ஜெட்லி அறிவித்தார்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 வருட போனஸ் தொழிலாளர்களின் குறைந்தபட்ச தினக்கூலி ரூ.350 ஆக உயர்வு - நிதி மந்திரி அருண்ஜெட்லி அறிவிப்பு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச மாத ஊதியமாக ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும், முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் வரும் 2-ந் தேதி (நாளை மறுதினம்) வேலை நிறுத்தத்தில் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளன. இந்த நிலையில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி, டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான போனஸ் வழங்கப்படும். போனஸ் திருத்த சட்டம், கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும். போனஸ் வழங்குதல் தொடர்பாக ஐகோர்ட்டுகளிலும், சுப்ரீம் கோர்ட்டிலும் நிலுவையில் உள்ள வழக்குகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கைகள் எடுக்கும். போனஸ் வழங்குவதால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,920 கோடி செலவு பிடிக்கும். தினக்கூலி உயர்வு கடந்த ஒன்றரை ஆண்டு களாக மத்திய தொழிற்சங்கங் களுடன் அமைச்சகங்களுக்கு இடையேயான குழு சந்திப்புகளை நடத்தியது. தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தன. அவற்றில் சில தொழிலாளர்கள் தொடர்பானவை. சில, பொருளாதார கொள்கை தொடர்பானவை. அமைச்சகங்களுக்கு இடையேயான குழுவின் சிபாரிசின்படி, மத்திய அரசு சில முடிவுகளை எடுத்துள்ளது. பயிற்சி பெறாத, பண்ணை சாராத தொழிலாளர்களின் (‘சி’ பிரிவினர்) குறைந்தபட்ச தினக்கூலியை, ரூ.350 ஆக உயர்த்துவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரியை தலைவராக கொண்ட குறைந்தபட்ச கூலி ஆலோசனை வாரியத்துடன் கலந்து ஆலோசித்த பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. (தற்போதைய தினக்கூலி ரூ.246). பதிவு செய்தல் ஒப்பந்த தொழிலாளர்களை பதிவு செய்வதும், அவர்களை பணிக்கு அமர்த்தும் முகவர்களை (ஏஜென்சிகள்) பதிவு செய்வதும் கட்டாயம் ஆக்கப்படுகிறது. அவற்றை மாநில அரசுகள் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த அறிவுறுத்தப்படும். தவறு செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது விதிமுறை மீறலுக்கு ஏற்றபடி நடவடிக்கை எடுக்கப்படும். அமைப்பு சாராத தொழிலாளர்கள் அமைப்புசாராத தொழிலாளர்களுக்கு (அங்கன்வாடி, மதிய உணவு, கல்விக்கான ஆஷா தன்னார்வ ஊழியர்கள்) சமூக பாதுகாப்பு அளிப்பது பற்றி குழு அமைத்து பரிசீலிக்கப்படும். அந்தக் குழு தனது அறிக்கையை விரைவில் அளிக்குமாறு பார்த்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார். தொழிற்சங்கங்கள் 2-ந் தேதி வேலை நிறுத்தம் செய்ய அழைப்பு விடுத்திருப்பது குறித்த கேள்விக்கு நிதி மந்திரி அருண் ஜெட்லி, “நமது தொழிற்சங்கங்கள் பொறுப்பானவை என கருதுகிறேன்” என்று பதில் அளித்தார். “பாரத ஸ்டேட் வங்கியுடன் அதன் இணை வங்கிகளை இணைக்கும் அரசின் திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளதே?” என நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, “அந்த இணைப்பு தொழிற்சங்கங்களின் விவகாரம் அல்ல” என அவர் பதில் அளித்தார்.

No comments: