Saturday, August 13, 2016

நடப்பு நிகழ்வுகள் | ஜூலை 24- 30

நடப்பு நிகழ்வுகள் | ஜூலை 24- 30

* ஐகோர்ட்டு கொண்டுவந்த சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடர்ந்து போராட்டம் நடத்திய 105 வக்கீல்களை வக்கீல் தொழிலில் இருந்து இடைநீக்கம் செய்து அகில இந்திய பார் கவுன்சில் உத்தரவிட்டது. (ஜூலை 24)
* பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்புக்கு முன்னதாகவே நேபாள பிரதமர் கே.பி. ஒளி திடீரென ராஜினாமா செய்தார். (ஜூலை 24)
* காஷ்மீரில் வன்முறைக்குப் பலியானோர் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்த நிலையில், அங்கு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை தொடர்ந்து பாதிக்கப்பட்டது. (ஜூலை 24)
* இலங்கை சிறைகளில் இருந்த தமிழக மீனவர்கள் 77 பேரை விடுதலை செய்ய அந்த நாடு முடிவு செய்தது. (ஜூலை 25)
* 16 ஆயிரம் தமிழர்கள் மாயமானது குறித்து விளக்கம் அளிக்கும்படி இலங்கை அரசுக்கு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உத்தரவிட்டது. (ஜூலை 26)
* காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஒரு பயங்கரவாதி உயிருடன் சிக்கினார். (ஜூலை 26)
* வக்கீல்கள் சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டத் திருத்த விதிகளை குறிப்பிட்ட காலத்துக்கு தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. (ஜூலை 26)
* முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் கைதிகளை விடுதலை செய்ய மத்திய அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்பது ஏற்புடையது அல்ல என்றும், எனவே இது தொடர்பாக அரசியல் சாசன அமர்வு வழங்கிய தீர்ப்பை மறுஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்தது. (ஜூலை 27)
* ராமேசுவரம் அருகே உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது வெண்கலச் சிலையை மத்திய மந்திரிகள் வெங்கையா நாயுடு, மனோகர் பாரிக்கர் ஆகியோர் திறந்துவைத்தனர். (ஜூலை 27)
* ஜி.எஸ்.டி. மசோதாவில் 1 சதவீத கூடுதல் வரியை ரத்து செய்வது, மாநிலங்களுக்கு 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்குவது ஆகிய புதிய திருத்தங்களுக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. (ஜூலை 27)
* சென்னையைச் சேர்ந்த பிரபல கர்நாடக இசைப் பாடகர் டி.எம். கிருஷ்ணா, கர்நாடக மாநிலத்தின் பிரபல சமூக சேவகர் பெஸ்வாடா வில்சன் ஆகியோர் மகசாசே விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். (ஜூலை 27)
* அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஹிலாரி கிளிண்டன் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டார். அங்கு பெண் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளர் ஆகியிருப்பது இதுவே முதல்முறை ஆகும். (ஜூலை 27)
* ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டதை எதிர்த்து டெல்லி மேல்-சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் சபை ஒத்திவைக்கப்பட்டது. (ஜூலை 28)
* மாயமான விமானப் படை விமானம் பற்றி உறுதியான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை, கடலில் மிதந்த பொருட்கள் அந்த விமானத்துடன் தொடர்பு இல்லாதவை என்று பாராளுமன்றத்தில் ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறினார். (ஜூலை 28)
* குளச்சல் துறைமுக திட்டத்தைக் கைவிட முடியாது என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். (ஜூலை 29)
* வாணியம்பாடி அருகே பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசால் கட்டப்பட்ட 12 அடி உயர தடுப்பணையில் தண்ணீர் நிரம்பியது. தடுப்பணையில் குதித்து தமிழக விவசாயி சீனி வாசன் தற்கொலை செய்துகொண்டார். (ஜூலை 29)
* காஞ்சீபுரத்தில் இருந்து சென்று நேபாள நிலச்சரிவில் சிக்கியவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டதாகவும், அவர்கள் விரைவில் இந்தியா திரும்புவார்கள் என்றும் மத்திய வெளியுறவுத் துறை தெரிவித்தது. (ஜூலை 29)
* நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 10 லட்சம் பேர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தமிழ்நாட்டில் ரூ. 6 ஆயிரம் கோடி மதிப்பிலான காசோலை பணப் பரிவர்த்தனை முடங்கியது. (ஜூலை 29)
* உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரி மாயாவதியை இழிவாகப் பேசிய வழக்கில் பா.ஜ.க. முன்னாள் துணைத் தலைவர் தயாசங்கர் சிங் கைது செய்யப்பட்டார். (ஜூலை 29)
* செக் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட சம்மனை ரத்து செய்ய முடியாது என டெல்லி ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்தது. (ஜூலை 29)
* நிரந்தரக் கணக்கு எண் இல்லாமல் வங்கிக் கணக்கில் ரூ. 10 லட்சத்துக்கு மேல் வரவு வைத்தவர்கள், ரூ. 30 லட்சத்துக்கும் அதிக மதிப்புடைய அசையா சொத்துக்கள் வாங்கிய 7 லட்சம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்தது. (ஜூலை 30)
* அசாம் மாநிலத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஹெலிகாப்டரில் பறந்து பார்வையிட்டார். ஒடிசாவில் மின்னல் தாக்கி 27 பேர் இறந்தனர். (ஜூலை 30)
* காஷ்மீர் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கர வாதிகள் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் தரப்பிலும் இருவர் பலியாயினர். (ஜூலை 30)
* துருக்கியில் ராணுவ தளத்தைத் தகர்க்கும் முயற்சியில் ஈடுபட்ட குர்து இன பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். (ஜூலை 30)


No comments:

Popular Posts