Thursday, 25 August 2016

பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் ஞாயிறு முழுவதும் இலவசமாக பேசும் திட்டம் அறிமுகம் தொடர்ந்து 34 மணி நேரம் சலுகை

பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் ஞாயிறு முழுவதும் இலவசமாக பேசும் திட்டம் அறிமுகம் தொடர்ந்து 34 மணி நேரம் சலுகை
பி.எஸ்.என்.எல். தரைவழி தொலைபேசியில் இரவு நேர இலவச அழைப்புகளை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையும் இலவசமாக பேசும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 34 மணி நேரம் இலவசமாக பேச முடியும். இது குறித்து தமிழ்நாடு வட்ட பி.எஸ்.என்.எல். முதன்மை பொதுமேலாளர் என்.பூங்குழலி சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
அகில இந்திய அளவில் சிறப்பாக செயல்படும் தொலைபேசி நிலையங்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. அந்தவகையில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டத்தில் கோயம்புத்தூர் தொலைத்தொடர்பு மாவட்டம் முதல் பரிசும், சேலம் 2-வது பரிசும், நெல்லை 3-ம் பரிசும் பெற்றுள்ளன. தமிழ்நாடு பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு 2015-2016-ம் நிதியாண்டில் ரூ.82.31 கோடி லாபம் கிடைத்தது. இதன் மூலம் அகில இந்திய அளவில் செல்போன் வருவாயில் தமிழ்நாடு தொலைத்தொடர்பு வட்டம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. 2014-2015-ம் ஆண்டில் ரூ.51.39 கோடி லாபம் கிடைத்தது. செல்போன் எண்ணை மாற்றாமல் பி.எஸ்.என்.எல். சேவைக்கு மாறும் திட்டத்தில் 1 லட்சத்து 73 ஆயிரத்து 193 புதிய வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துடன் இணைந்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இலவசம் தரைவழி தொலைபேசியில் தினசரி இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை இலவச அழைப்பு சலுகையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் நாடு முழுவதும் கடந்த 15-ந் தேதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை முழுவதும் தரைவழி தொலைபேசி வாயிலாக அனைத்து நிறுவன அழைப்புகளும் இலவசமாக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தரைவழி தொலைபேசி வாடிக்கையாளர்கள் சனிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கட்கிழமை காலை 7 மணி வரை தொடர்ந்து 34 மணி நேரம் தொடர்ச்சியாக இலவசமாக பேச முடியும். ‘புதிய அனுபவம் தரைவழி 49’ திட்டம் சுதந்திர தினத்தையொட்டி பி.எஸ்.என்.எல். ‘புதிய அனுபவம் தரைவழி 49’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு மாத வாடகை ரூ.49 மட்டும். இணைப்பு நிறுவன கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. பி.எஸ்.என்.எல். இணைப்புகளுக்கு ரூ.1-ம், ஏனைய எண்களுக்கு ரூ.1.20 கட்டணத்திலும் பேசலாம். 6 மாதத்திற்கு பிறகு இந்த திட்டம் பொது திட்டத்திற்கு மாற்றப்படும். ஒரு பி.எஸ்.என்.எல். சிம் கார்டும் இலவசமாக அளிக்கப்படுகிறது. இந்த திட்டம் கடந்த 15-ந் தேதியில் இருந்து நவம்பர் 12-ந் தேதி வரை அமலில் இருக்கும். இத்திட்டத்தில் 50 ஆயிரம் புதிய இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது கடந்த 1-ந் தேதி முதல் ‘பிராட்பேண்ட்’ வேகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. ரூ.750, ரூ.1,045 ஆகிய புதிய ‘பிராட்பேண்ட்’ திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 26 இடங்களில் ஒரு லட்சம் இணைப்புத்திறனுடன் முதல் கட்டமாக ‘பிரிபெய்டு’ சேவை உள்ளிட்ட பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 96 இடங்களில் 2 லட்சம் இணைப்புத்திறனுடன் 2-ம் கட்டமாக சேவைகள் தொடங்கப்பட உள்ளது. ‘வை-பை’ வசதி மாநிலம் முழுவதும் 62 சுற்றுலாத்தலம், பொது இடங்களில் ‘வை-பை’ சேவை அளிக்கப்பட்டு உள்ளது. குற்றாலம், திருவண்ணாமலை, கொடைக்கானல் போன்ற பகுதிகளில் ‘வை-பை’ சேவை அளிக்கப்பட இருக்கிறது. இதுதவிர 15 இந்தியன் வங்கி கிளைகளும், 60 ஸ்டேட் வங்கி கிளைகளும் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ‘நலந்தானா’ என்ற திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் வாடிக்கையாளர்களை வீடுகளுக்கு சென்று சந்தித்து உள்ளோம். இதன் மூலம் 1,200 பழுதுகள் நீக்கப்பட்டு இருக்கின்றன. 3 ஆயிரம் புதிய தரைவழி இணைப்புகளும், 2 ஆயிரத்து 700 ‘பிராட்பேண்ட்’ புதிய இணைப்புகளும் வழங்கப்பட்டு உள்ளன. 750 வாடிக்கையாளர்கள் மறு இணைப்பு பெற்றுள்ளனர். 15 ஆயிரம் சிம்கார்டுகளும், 35 ஆயிரம் நலந்தானா சிறப்பு ரீசார்ஜ் கூப்பன்களும் விற்கப்பட்டுள்ளன. விற்பனை மேளா மூலம் ஜூலை மாதம் 38 ஆயிரமும், ஆகஸ்டு மாதம் 68 ஆயிரம் சிம் கார்டுகளும் விற்பனை செய்யப்பட்டன. செல்போன் கோபுரங்கள் மாநிலம் முழுவதும் 2ஜி செல்போன் கோபுரங்கள் 5 ஆயிரத்து 828-ம், 3ஜி செல்போன் கோபுரங்கள் 1,530-ம் செயல்படுகின்றன. கூடுதலாக 3ஜி செல்போன் கோபுரங்கள் 1,421 அமைக்கப்பட்டு உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். அப்போது பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் ஜி.ரவி, பி.வி.கருணாநிதி, கே.முத்துகுமார், பி.சந்தோஷம், சுப்ரதா சட்டர்ஜி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: