Friday, 9 September 2016

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14-ந்தேதி வரை நீட்டிப்பு இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால் நடவடிக்கை.

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க 14-ந்தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் குரூப்-4 தேர்வு மூலம் 5,451 இளநிலைப்பணியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காக www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பிக்க எஸ்.எஸ்.எல்.சி. படித்திருந்தால் போதும். ஆனால் பட்டதாரிகள்தான் அதிக அளவில் விண்ணப்பித்துள்ளனர். நேற்று வரை 10 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பிக்க நேற்று (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். சர்வரில் கோளாறு ஆனால் கடந்த சில நாட்களாக பலரால் விண்ணப்பிக்க முடியவில்லை. காரணம் விண்ணப்பிக்கும் இணையதளத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதாவது சர்வரில் கோளாறு ஏற்பட்டதாக பலர் கூறினார்கள். இதனால் விண்ணப்பிக்கும் தேதியை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்கள் கோரிக்கை விடுத்தது போல விண்ணப்பிக்கும் தேதி 14-ந்தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தேதி நீட்டிப்பு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொகுதி-4-ல் அடங்கிய பல்வேறு பதவிகளில் 5,451 காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, விண்ணப்பிக்க 9.8.2016 முதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டு, கடைசி நாளாக 8.9.2016 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கக் குறிப்பிட்டுள்ள கடைசி நாள் வரை காத்திருக்காமல் அதற்கு முன்னரே போதிய கால அவகாசத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் கடைசி நாளில் அதிகப்படியான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பம் சமர்ப்பிப்பதில் தாமதமோ அல்லது வேறு பிரச்சினைகளோ எழ வாய்ப்புள்ளது. கடைசி நேரத்தில் விண்ணப்பிக்க அதிக அளவிலான விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களைச் சமர்பித்து வருகின்ற காரணத்தினாலும், விண்ணப்பதாரர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையிலும், இந்த தொகுதி-4 தேர்விற்கு விண்ணப்பிக்க 14-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து தேர்விற்கான கட்டணம் செலுத்த 16-ந்தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு வெ.ஷோபனா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

1 comment:

Kanniappan Ranganathan said...

Sir / madam please help,tnpsc one time registration user name & password forged now i will apply group 4 exam how can i will apply