Friday, 14 October 2016

பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு

பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு
பிரபல அமெரிக்க இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு இலக்கிய நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் மருத்துவம், இயற்பியல், வேதியியல், உலக அமைதி, பொருளாதாரம், இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு மருத்துவம், இயற்பியல், ரசாயனம், உலக அமைதி, பொருளாதாரம் ஆகிய துறைகளுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு விட்டது. கடைசியாக இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு, நேற்று ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பிரபல இசைக்கலைஞர் பாப் டிலானுக்கு (வயது 75) வழங்கப்படுகிறது.
பாப் டிலான்

“அமெரிக்க பாடல் பாரம்பரியத்தில், புதிய கவித்துவ வெளிப்பாடுகளை உருவாக்கியதற்காக இந்த விருது, பாப் டிலானுக்கு வழங்கப்படுகிறது” என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்துறை வித்தகர் பாடகர், பாடலாசிரியர், ஓவியர், கவிஞர், நடிகர் என பல முகங்களை கொண்டவர், இந்த இசைக்கலைஞர். நாட்டுப்புற இசை தொடங்கி தோத்திர இசை, ராக் இசை என பல வகை இசையிலும் முத்திரை பதித்திருக்கிறார். இவரது ‘புளோயிங் இன் தி விண்ட்’, ‘தி டைம்ஸ் தே ஆர் எ சேஞ்சிங்’, ‘லைக் எ ரோலிங் ஸ்டோன்’ ஆகிய பாடல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. அந்த பாடல்கள் போர் எதிர்ப்பு, மனித உரிமை இயக்க முழக்கங்களாக அமைந்தன. விருதுகள் 50 ஆண்டுகளுக்கு மேலாக வெகுஜன இசையால் மக்களை கவர்ந்து வருகிற பாப் டிலான், 11 முறை கிராமி விருது, ஒரு முறை கோல்டன் குளோப் விருது, ஒரு முறை ஆஸ்கார் விருது வென்றிருக்கிறார். அமெரிக்காவில் மின்னசொட்டா மாகாணத்தில் பிறந்த இவரது பெயர், பல முறை நோபல் பரிசுக்கு அடிபட்டது உண்டு. ஆனால் இந்த முறைதான் கிடைத்திருக்கிறது. இவருக்கு பரிசாக 9 லட்சத்து 6 ஆயிரம் டாலர் (சுமார் ரூ.6 கோடியே 7 லட்சம்) வழங்கப்படுகிறது. பரிசளிப்பு விழா, டிசம்பர் மாதம் 10-ந்தேதி ஸ்டாக்ஹோம் நகரில் நடக்கிறது.

No comments: