Thursday, 17 November 2016

பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்த பொய்யான தகவலை அகற்றுவது குறித்து 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்த பொய்யான தகவலை அகற்றுவது குறித்து 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு | சி.பி.எஸ்.. 9-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயம் குறித்து தெரிவிக்கப்பட்ட தவறான தகவல்களை அகற்றுவது குறித்து ஆய்வு செய்து, 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் கே.பாலு. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:- தவறான தகவல் எங்கள் அமைப்பு சமூகநீதி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நற்பணியிலும், ஏராளமான சமூகசேவைகளிலும் ஈடுபட்டு வருகிறது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்..) பள்ளிகள் ஏராளமாக உள்ளன. சி.பி.எஸ்.. பாடத்திட்டம் என்பது நாட்டிலேயே சிறப்பு வாய்ந்தது ஆகும். சி.பி.எஸ்.. பாடத்திட்டத்தை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் தயாரிக்கிறது. இதன்படி, தயாரிக்கப்பட்ட 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், இந்தியன் காலனி ஆதிக்கம் என்ற தலைப்பில் ஒரு பாடம் உள்ளது. அந்த பாடத்தில், அதாவது புத்தகத்தில் 168-வது பக்கத்தில், நாடார் சமுதாயத்தை பற்றி உண்மைக்கு புறம்பான, தவறான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குழு அமைப்பு ஆனால், தமிழகத்தில் நாடார் சமுதாயம் மிகப்பெரிய சமுதாயமாகும். இவர்கள், தமிழகத்தின் பொருளாதாரம் மற்றும் வர்த்தக துறைகளில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். அப்படிப்பட்ட சமுதாயத்தை பற்றி பாடப்புத்தகத்தில் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளது வேதனைக் குரியது ஆகும். இதனால், இந்த பொய்யான தகவல் களை, பாடப்புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் என்று கடந்த செப்டம்பர் 14-ந் தேதி, சி.பி.எஸ்.. இணை இயக்குனருக்கு நோட்டீசு அனுப்பினோம். இதற்கு கடந்த அக்டோபர் 6-ந் தேதி சி.பி.எஸ்.சி இணை இயக்குனர் பதிலளித்துள்ளார். அதில், 'பாடப்புத்தகத்தில் நாடார் சமுதாயத்தை பற்றி இடம் பெற்றுள்ள தகவல்கள் குறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதை பரிசீலித்த கவுன்சில், சர்ச்சைக்குரிய பாடத்தை மறுஆய்வு செய்ய ஒரு குழு அமைத்துள்ளது. இந்த குழுவின் அறிக்கையை பெற்று, புத்தகத்தில் இருந்து சர்ச்சைக்குரிய பகுதியை அகற்ற தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் இதுவரை உத்தரவு பிறப்பிக்கவில்லை. அதனால், அந்த கவுன்சிலை நீங்கள் அணுகலாம்' என்று கூறியுள்ளது. நீக்கவேண்டும் ஆனால், சி.பி.எஸ்.. இணை இயக்குனர் தான் எங்களுடைய கோரிக்கையை பரிசீலித்து உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். அதை செய்யாமல், அவர் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலை அணுகும்படி கூறுகிறார். மேலும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலிடம் 'நாடார்கள் கூட்டமைப்பு' என்ற அமைப்பு கடந்த 2012-ம் ஆண்டு அக்டோபர் 26-ந் தேதியே புகார் மனு கொடுத்துள்ளது. ஆனால், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. எனவே, தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் அமைத்துள்ள குழு, நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்களை ஆய்வு செய்து, தகுந்த உத்தரவினை பிறப்பிக்கவேண்டும் என்றும், சர்ச்சைக்குரிய பகுதியை புத்தகத்தில் இருந்து நீக்கவேண்டும் என்றும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. 3 மாதத்தில் ஆய்வு இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:- சி.பி.எஸ்.. 9-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் நாடார் சமுதாயம் குறித்து சர்ச்சைக்குரிய தகவலை மறுஆய்வு செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு ஆய்வு செய்து அறிக்கையை தந்த பின்னர், அதுகுறித்து தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அவ்வாறு உத்தரவு பிறப்பித்த பின்னர்தான் அந்த உத்தரவின் அடிப்படையில் சி.பி.எஸ்.. தகுந்த முடிவினை எடுக்க முடியும். எனவே, மனுதாரரின் கோரிக்கையின் அடிப்படையில், சர்ச்சைக்குரிய பாடம் குறித்து ஆய்வு செய்து, 3 மாதங்களுக்குள் தகுந்த உத்தரவினை தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் பிறப்பிக்க வேண்டும். அந்த உத்தரவு விவரங்களை சி.பி.எஸ்.. இணை இயக்குனருக்கும், மனுதாரருக்கும் அனுப்பிவைக்க வேண்டும். இந்த மனு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

TRB