Thursday, 29 December 2016

3 ஆண்டுகளாக தமிழ் படிக்காத மாணவர்கள் தாய்மொழியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் அரசுக்கு அறிவுரை கூறும்படி அட்வகேட் ஜெனரலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு


3 ஆண்டுகளாக தமிழ் படிக்காத மாணவர்கள் தாய்மொழியில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் அரசுக்கு அறிவுரை கூறும்படி அட்வகேட் ஜெனரலுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு | கடந்த 3 ஆண்டுகள் தமிழ் மொழிப்பாடங்களை படிக்காத மாணவர்களை, நடைபெற உள்ள 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மொழிப்பாடமான தமிழுக்கு பதில் தங்களது தாய்மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு, அட்வகேட் ஜெனரல் அறிவுரை கூறவேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. முதல் மொழிப்பாடம் தமிழக அரசு, கட்டாய தமிழ் கற்றல் சட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி, 2006-ம் ஆண்டு முதல் மொழி சிறுபான்மை பள்ளிக்கூடங்கள் உள்பட அனைத்து வகையான பள்ளிக்கூடங்களிலும் முதல் மொழிப்பாடமாக தமிழை கண்டிப்பாக கற்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. இந்த சட்டத்தின்படி, கடந்த 2006-ம் ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் கடந்த மார்ச் மாதம் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதினார்கள். அப்போது, சில மாணவர்கள் தங்களுக்கு தமிழ் பாடம் நடத்தப்படவில்லை என்றும், இதனால் பொதுத்தேர்வில் தமிழுக்கு பதில் முதல் மொழிப்பாடமாக தங்களது தாய்மொழியில், அதாவது தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்றும் தமிழக பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு கோரிக்கை மனு கொடுத்தனர். தாய்மொழியில் தேர்வு இவர்களது கோரிக்கையை பள்ளி கல்வித்துறை செயலாளர் நிராகரித்துவிட்டதால், பலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர், மொழி சிறுபான்மை பள்ளிக்கூடங்களில் படிக்கும் இந்த மாணவர்கள், தங்களது தாய்மொழியான தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது ஆகிய மொழிகளை முதல் மொழிப்பாடமாக கொண்டு தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கடந்த ஜனவரி மாதம் உத்தரவிட்டார்கள். இதனால், கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி நடந்த 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், முதல் மொழிப்பாடமாக தமிழை எழுதுவதற்கு பதில், தங்களது தாய் மொழியான இந்தி, தெலுங்கு, கன்னடம், உருது ஆகிய மொழிகளில் தேர்வுகளை எழுதினார்கள். விசாரணை இந்த நிலையில், மொழி சிறுபான்மை பள்ளிக்கூடங்களின் சங்கம் உள்பட பலர், முதல் மொழிப்பாடமாக தமிழை எழுதுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல், கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர்களின் வாழ்க்கையோடு தமிழக அரசு விளையாடுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு வரை மொழி சிறுபான்மை பள்ளிக்கூடங்களில் தமிழ் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எனவே, மொழி சிறுபான்மை மாணவர்களை வருகிற 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மொழிப்பாடமாக தமிழுக்கு பதில் அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கவேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் குடியேறிய மாணவர்கள் தங்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கக்கோரி கொடுக்கும் விண்ணப்பத்துடன், மொழி சிறுபான்மை பள்ளிக்கூட கோரிக்கைகளையும் சேர்த்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். அரசுக்கு அறிவுரை இதையடுத்து நீதிபதிகள், கடந்த 3 ஆண்டுகளாக தமிழ் பாடங்களை படிக்காத மாணவர்களுக்கு, 10-ம் வகுப்பு பொதுதேர்வில் முதல் மொழிப்பாடமாக தமிழுக்கு பதில், அவர்களது தாய் மொழியில் தேர்வு எழுத அனுமதிக்கும்படி தமிழக அரசுக்கு அறிவுரை கூறும்படி, அட்வகேட் ஜெனரலுக்கு உத்தரவிட்டனர். அட்வகேட் ஜெனரலும், அரசுக்கு அறிவுரை கூறுவதாக உத்தரவாதம் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜனவரி 3-ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


No comments:

TRB