Friday, 30 December 2016

ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை

ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேர் பட்டியல் தயார் கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என எச்சரிக்கை | ரூ.7 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியல் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளது. கருப்பு பணத்தை டெபாசிட் செய்தவர்கள் யாரும் தப்ப முடியாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பு பணம் ஒழிப்பு கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி அறிவித்தார். மக்கள் தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், தங்கள் வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவும் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதேசமயம் கணக்கில் வராத கருப்பு பணம் அதிகளவில் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமானத்தை காட்டினால் அதற்கு 50 சதவீதம் வரி விதிக்கப்படும் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டது. எஞ்சிய 50 சதவீதத்தில் 25 சதவீதத்தை வட்டியில்லாத டெபாசிட்டாக 4 ஆண்டுகளுக்கு வங்கியில் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 60 லட்சம் பேரின் பட்டியல் வங்கிகளில் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்பவர்கள் வருமான வரி மற்றும் இதர புலனாய்வு நிறுவனங்கள் மூலம் கண்காணிக்கப்படுவார்கள் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ரூ.7 லட்சம் கோடி டெபாசிட் செய்துள்ள 60 லட்சம் பேரின் பட்டியலை வருமான வரித்துறை சேகரித்துள்ளது. வங்கிகளில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கு இன்றே (வெள்ளிக்கிழமை) கடைசி நாள். அதன் பின்னர் மார்ச் மாதம் 31-ந் தேதி வரை ரிசர்வ் வங்கியில் பிரமாண பத்திரத்துடன் டெபாசிட் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசு எச்சரிக்கை சிலர் தங்கள் கருப்பு பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து வெள்ளையாக்கிவிட்டோம் என்று நினைத்து இருந்தால் அவர்கள் தப்ப முடியாது என்று மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:- உண்மையான வங்கி டெபாசிட்தாரர்கள் யாரையும் அரசு தொந்தரவு செய்யாது. அதேசமயம் கருப்பு பணத்தை டெபாசிட் செய்து வெள்ளையாக்கியவர்கள் யாரும் தப்ப முடியாது. அரசு அறிவித்த தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தை பயன்படுத்தாதவர்கள் நிச்சயம் பிடிபடுவார்கள். ரூ.2 லட்சம், ரூ.5 லட்சம் அதற்கும் மேல் டெபாசிட் செய்தவர்களின் எண்ணிக்கை, டெபாசிட் செய்த தொகை போன்ற தினசரி தகவல்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது. அவர்களின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றிய தகவல்களுடன் ஒப்பிட்டு பார்ப்போம். எனவே அவர்கள் தாமாக முன்வந்து வருமானத்தை தெரிவிக்கும் திட்டத்தில் சேருவார்கள் என எதிர்பார்க்கிறோம். அப்படி அவர்கள் செய்யவில்லை என்றால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தப்ப முடியாது அதேபோல பல வங்கிகளில் கணக்குகள் வைத்துள்ள டெபாசிட்தாரர்கள், மற்றவர்களின் வங்கி கணக்கில் பணம் செலுத்தியவர்கள் போன்றவர்களையும் கண்காணித்து வருகிறோம். வரி ஏய்ப்பாளர்கள் யாரையும் வரித் துறை தப்பவிடாது. 60 லட்சம் தனிநபர்கள், கம்பெனிகள், நிறுவனங்கள் ரூ.7 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் செய்துள்ள தகவல்கள் எங்களிடம் உள்ளது. இது வியப்புக்குரிய தொகை. இதில் தனிநபர்கள் மட்டும் 3 முதல் 4 லட்சம் கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்துள்ளனர். வரித்துறையின் நடவடிக்கைகள் காரணமாக இந்த ஆண்டு அல்லது வருகிற ஆண்டுகளில் அரசுக்கு அதிக வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.


No comments: