Monday, 23 January 2017

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு

இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர்: சட்டசபையில் இன்று கவர்னர் உரையாற்றுகிறார் ஜல்லிக்கட்டு மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு | இந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் ஆரம்பமாவதால், தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்றுகிறார். மேலும், ஜல்லிக்கட்டு அவசர சட்டத்துக்கான மாற்று சட்ட மசோதா நிறைவேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது. ஆண்டுதோறும் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் ஆரம்பிக்கும்போது கவர்னர் உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் இன்று (திங்கட்கிழமை) தொடங்குவதால், இன்றைய கூட்டத்தில் கவர்னர் வித்யாசாகர் ராவ் உரையாற்ற இருக்கிறார். கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, காலை 9.55 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவ் சட்டசபைக்கு வர இருக்கிறார். அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் செல்வார்கள். சபாநாயகர் இருக்கையில் அமரும் கவர்னர் வித்யாசாகர் ராவ், சரியாக காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் உரை நிகழ்த்த தொடங்குகிறார். அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை விவரித்து சுமார் ஒரு மணி நேரம் பேசுகிறார். அவர் பேசி முடிந்ததும் அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அவர் வாசித்து முடிந்ததும் இன்றைய சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அதன் பிறகு, சபாநாயகர் ப.தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், கூட்டத் தொடரில் என்னென்ன அலுவல்களை மேற்கொள்வதென நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்படும். ஒருவேளை அனைத்துக் கட்சி தலைவர்களும், "ஜல்லிக்கட்டு நடத்த கொண்டுவரப்பட்ட அவசர சட்டத்துக்கான மாற்று சட்ட மசோதாவை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும். அதையும் இன்றே செய்ய வேண்டும். அதற்காக சிறப்பு கூட்டத்தை இன்று மாலையே கூட்ட வேண்டும்" என்று முடிவு எடுத்தால், இன்றே சிறப்பு கூட்டத்தை கூட்டி மசோதா தாக்கல் செய்து மாற்றுச் சட்டமான நிரந்தர சட்டத்தை நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறது.
இல்லை என்றால், எந்த தேதியில் இந்த மசோதாவை தாக்கல் செய்வது என்ற நிகழ்ச்சி நிரலை அனைத்துக் கட்சி தலைவர்கள் அடங்கிய அலுவல் ஆய்வுக் குழு முடிவு செய்யும். நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் சட்டசபை கூட்டத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. இந்த தீர்மானத்தின் மீது முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், மற்றும் பிற சட்டமன்ற கட்சி தலைவர்கள், சபாநாயகர் ப.தனபால் ஆகியோர் பேசுகிறார்கள். இதேபோல், மறைந்த முன்னாள் தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முக்கிய பிரமுகர்கள் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. அத்துடன் அன்றைய கூட்டம் ஒத்திவைக்கப்படும். அதன்பிறகு, 25-ந் தேதி (புதன்கிழமை) கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடங்குகிறது. இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுகிறார்கள். மறு நாள் (26-ந் தேதி) குடியரசு தின விழா என்பதால், சட்டசபைக்கு விடுமுறை ஆகும். 27-ந் தேதி சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடருகிறது. 30-ந் தேதி வரை சட்டசபை கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது.

No comments: