Tuesday, 31 January 2017

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு

கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு கூடாது ஐகோர்ட்டு உத்தரவு | கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலைக்கு மகன், மகள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாவட்டம் பூலாங்குளத்தை சேர்ந்த முத்துசெல்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- எனது தந்தை வேல்முருகன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் வேலை செய்தார். திடீரென 2012-ம் ஆண்டு இறந்தார். அதன்பிறகு எனக்கு திருமணமானது. இதனையடுத்து எனக்கு கருணை அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்று விண்ணப்பித்தேன். ஆனால் எனக்கு திருமணம் ஆனதை காரணம் காட்டி, என்னுடைய விண்ணப்பத்தை நுகர்பொருள் வாணிப கழக தலைவர் நிராகரித்தார். இந்த உத்தரவை ரத்து செய்து கருணை அடிப்படையில் எனக்கு வாரிசு வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "திருமணம் ஆனாலும் வாரிசு வேலை பெறுவதற்கு ஆண்பிள்ளைகளுக்கு எந்த தடையும் இல்லை. ஆனால் பெண்ணுக்கு இந்த உரிமை மறுக்கப்பட்டுள்ளது. பெற்றோர் பராமரிப்பு சட்டப்படி ஆண், பெண் பிள்ளைகள் சமம். அதேபோல அரசியலமைப்பு சட்டப்படி ஆணும், பெண்ணும் சமம். இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது திருமணம் ஆன பெண்ணும் வாரிசு வேலை பெறலாம்" என்று வாதாடினார். விசாரணை முடிவில் நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:- கருணை அடிப்படையில் வழங்கப்படும் வேலையில் மகன், மகள் என்ற பாகுபாடு காட்டக்கூடாது. இந்த விஷயத்தில் ஒருவரின் குழந்தைகள் ஒரே மாதிரி நடத்தப்பட வேண்டும். எனவே மனுதாரரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. நுகர்பொருள் வாணிப கழக மேலாளர் (நிர்வாகம்) மனுதாரரின் மனுவை பரிசீலித்து, காலிப்பணியிடங்கள் இருக்கும்பட்சத்தில் தகுதிக்கு ஏற்ப வேலையை 2 மாதத்துக்குள் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

No comments: