Friday, 3 February 2017

குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம்

குறிப்பிட்ட காலத்திற்குள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் அபராதம் | வருமானவரி கணக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. 2017-2018-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதி மந்திரி அருண் ஜெட்லி நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார். தனிநபர் வருமான வரி விலக்குக்கான உச்சவரம்பு தற்போது ரூ.2½ லட்சமாக இருப்பது உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த உச்சவரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படாதது மாதச்சம்பளம் பெறுவோருக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்தது. ஆனால் வரி விதிப்பு விகிதத்தில் அருண் ஜெட்லி சலுகை வழங்கி இருக்கிறார். தற்போது ரூ.2½ லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 5 சதவீதமாக குறைத்து இருக்கிறார். ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு ஏற்கனவே உள்ளது போல் 20 சதவீத வரியும், ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ள வருமானத்துக்கு 30 சதவீத வரியும் விதிக்கப்படும். 60 முதல் 80 வரையிலான மூத்த குடிமக்கள் என்றால் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி கிடையாது. ரூ.3 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதமும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதமும், ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீதமும் வருமான வரியாக விதிக்கப்படும். 80 வயதுக்கு மேற்பட்ட மிக மூத்த குடிமக்கள் ரூ.5 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி செலுத்த வேண்டியது இல்லை. ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 20 சதவீதம் வரி செலுத்த வேண்டும். இந்த பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.50 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு ஏற்கனவே உள்ள 30 சதவீத வரியுடன் கூடுதலாக 10 சதவீத வரியும், ரூ.1 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத கூடுதல் வரியும் விதிக்கப்படும். ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு தற்போது 87ஏ பிரிவின் கீழ் ரூ.5 ஆயிரம் கழிவு சலுகை வழங்கப்படுகிறது. இந்த வருமான உச்சவரம்பு ரூ.3½ லட்சமாக குறைக்கப்பட்டு கழிவு தொகையும் ரூ.2,500 ஆக குறைக்கப்பட்டு இருக்கிறது. வருமான வரி சட்டம் 80 சி பிரிவின் கீழ் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி, ஆயுள் காப்பீடு, 2 குழந்தைகளுக்கான கல்வி கட்டணம், தேசிய சேமிப்பு பத்திரம், வீட்டுக்கடனுக்காக செலுத்தப்படும் அசல் தொகை போன்றவற்றுக்கான கழிவு உச்சவரம்பு தற்போது ரூ.1½ லட்சமாக இருக்கிறது. விலைவாசி உயர்வின் காரணமாக செலவினங்கள் அதிகரித்து இருப்பதால் இந்த கழிவு உச்சவரம்பை குறைந்தபட்சம் ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மாதச்சம்பளம் பெறுவோரிடம் இருந்தது. ஆனால் இந்த உச்சவரம்பு பட்ஜெட்டில் உயர்த்தப்படாதது அவர்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாகவே அமைந்தது. வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவமும் எளிமையாக்கப்பட்டு இருக்கிறது. ரூ.5 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் வருமான வரி தாக்கல் செய்வதற்கான படிவம் இனி ஒரு பக்கத்தை கொண்டதாக மட்டுமே இருக்கும் என்று அருண் ஜெட்லி அறிவித்து இருக்கிறார். ஒரு சொத்து வாங்கப்பட்ட 3 ஆண்டுகளில் விற்கப்பட்டால் அதன்மூலம் கிடைக்கும் லாபம் முதலீட்டு வருவாயாக கருதப்பட்டு அந்த தொகைக்கு வரி விதிக்கப்படுகிறது. இந்த 3 ஆண்டு காலவரையறை என்பது பட்ஜெட்டில் 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டு இருக்கிறது. மாதம் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வாடகை செலுத்துவோருக்கு 5 சதவீதம் வரி கழிவு உண்டு என்று அறிவித்துள்ள அருண் ஜெட்லி, தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இருந்து அவசர செலவுகளுக்காக 25 சதவீத தொகையை திருப்பி எடுத்தால் அதற்கு வரி கிடையாது என்றும் கூறி இருக்கிறார். 2-வது வீடு வாங்கியதற்காக செலுத்தப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி தொகையில் 71-வது பிரிவின் கீழ் இனி ரூ.2 லட்சம் வரை மட்டுமே கழிவு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன் இந்த உச்சவரம்பு கிடையாது. வரி செலுத்துவோர் குறிப்பிட்ட காலவரையறைக்குள் தங்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், இது 2018-2019-ம் ஆண்டில் இருந்து அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது. வருமான வரி சோதனையின் போது கணக்கில் காட்டப்படாத வருவாய் மற்றும் சொத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு மேல் இருந்தால், சம்பந்தப்பட்ட நபர் தாக்கல் செய்த 10 ஆண்டுகள் வரையிலான வருமான வரி கணக்குகளை வருமான வரி அதிகாரிகள் மறு ஆய்வு செய்ய முடியும் என்று அருண் ஜெட்லி அறிவித்து உள்ளார். இந்த காலவரையறை தற்போது 6 ஆண்டுகளாக உள்ளது.

No comments:

TRB