Thursday, 2 March 2017

தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி | தமிழக அரசின் பாடத்திட்டம் குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு வாரத்தில் வெளியாகும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். இதுகுறித்து நிருபர்களுக்கு, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று அளித்த பேட்டி வருமாறு:- பொதுத்தேர்வுகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு 2-ந் தேதி (இன்று) தொடங்கி 31-ந் தேதி முடிகிறது. இந்த தேர்வை மொத்தம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 606 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். தேர்வு முடிவுகள் மே 12-ந் தேதி வெளியாகும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 8-ந் தேதி தொடங்கி 30-ந் தேதி முடிகிறது. இந்த தேர்வை 10 லட்சத்து 33 ஆயிரத்து 908 மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். மே 19-ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும். இந்த தேர்வு எழுதும் மாணவ-மாணவிகளுக்கு 'கேரியர் கைடன்ஸ் கவுன்சலிங்' என்ற அடுத்த கட்டத்துக்கான ஆலோசனையை அரசு சார்பில் நடத்த திட்டமிட்டுள்ளோம். 32 மாவட்ட தலைநகரங்கள், 124 நகராட்சிகள், 385 ஒன்றியங்கள் என 541 இடங்களில் இந்த கூட்டத்தை நடத்துகிறோம். ஏப்ரல் 6 அல்லது 7-ந் தேதி ஆகிய ஏதாவது ஒரு நாளில் இந்த கூட்டம், அந்தந்த பகுதிகளில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் நடத்தப்படும். மாவட்ட கல்வி அதிகாரிகள் கண்காணிப்பில் கூட்டம் நடக்கும். மருத்துவம், பொறியியல், அறிவியல் பிரிவுகள், அரசுத்துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், பாதுகாப்புப் படை, காவல்துறை போன்ற துறைகளில் உள்ள வேலைவாய்ப்பு, அதற்கான போட்டித் தேர்வு பற்றிய ஆலோசனைகள், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும். இது, வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத திட்டமாகும். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்தில் பல ஆண்டுகளாக பழைய பாடத்திட்டம்தான் உள்ளது. போட்டித் தேர்வுகளில் தமிழகத்தில் இருந்து 2 சதவீதம் பேர்தான் தேர்ச்சி அடைகின்றனர். எனவே, சி.பி.எஸ்.இ. பாடத்திட்டங்களை நோக்கி மாணவர்கள் செல்கின்றனர். அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?
பதில்:- இது தொடர்பாக அரசு சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்னும் ஒரு வாரத்தில் அதுபற்றிய அறிவிப்பு வெளியிடப்படும்.
'நீட்' தேர்வு
கேள்வி:- கல்வி கட்டண குழுவின் தலைவர் பதவி கடந்த ஒன்றரை ஆண்டாக காலியாக இருக்கிறதே? பல தனியார் பள்ளிகளில் அவர்களே கட்டணத்தை நிர்ணயித்து இஷ்டம்போல் வசூலிக்கின்றனரே?...
பதில்:- ஒருநாள் மட்டும் பொறுத்துக்கொள்ளுங்கள். நல்ல முடிவு அறிவிக்கப் படும். நானும், கல்வித்துறை முதன்மை செயலாளரும் கோப்பில் கையெழுத்து போட்டிருக்கிறோம். முதல்-அமைச்சரின் உத்தரவுக்காக காத்து இருக்கிறோம்.
கேள்வி:- 'நீட்' தேர்வு தொடர்பாக பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு இருக்கிறதா?
பதில்:- நீட் தேர்வு தொடர்பாக பிரதமரை முதல்-அமைச்சர் சந்தித்து கோரிக்கை விடுத்து இருக்கிறார். அதை பரிசீலிப்பதாக பிரதமரும் கூறி உள்ளார். சட்டத்துறை உள்பட சில துறைகளைக் கடந்த பிறகுதான் இறுதியில் ஜனாதிபதியிடம் அந்த மசோதா போகும்.
கேள்வி:- ஆனால் கண்டிப்பாக நீட் தேர்வு இந்த ஆண்டு நடக்கும் என்றுதான் பரவலாக பேசப்படுகிறதே?
பதில்:- மாணவர்கள் எல்லாருமே இதற்கு தயார் நிலையில்தான் இருக்கின்றனர். நீட் தொடர்பாக ஒரு முடிவை எதிர்பார்த்தாலும், அதே நேரத்தில் தங்களை தயார்படுத்தி உள்ளனர்.
'வெயிட்டேஜ்'
கேள்வி:- ஆசிரியர் தகுதித்தேர்வை எழுதிவிட்டு இன்னும் வேலையில் நியமிக்கப்படாமல் பலர் காத்திருக்கின்றனர். அந்த நிலையில் மற்றொரு தேர்வை நடத்தினால் சரிவருமா?
பதில்:- 'வெயிட்டேஜ்' என்ற நிலையை அரசு நிர்ணயித்து உள்ளது. இதெல்லாம் அரசின் ஆய்வில் உள்ளது. ஒரு வாரத்தில் இதுபற்றிய முடிவை அரசு எடுக்கும்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.

No comments: