Tuesday, 18 July 2017

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி | என்ஜினீயரிங் கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார். அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 518 என்ஜினீயரிங் கல்லூரிகளில் 2 லட்சத்து 61 ஆயிரத்து 692 இடங்கள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 725 இடங்களுக்கு, ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 77 பேர் பதிவு செய்து இருந்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 36 ஆயிரத்து 988 பேரின் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். என்ஜினீயரிங் கலந்தாய்வு தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு 21-ந் தேதி நடைபெறுகிறது. அவர்களில் அழைப்பு அனுப்பப்பட்டவர்கள் 19, 20-ந் தேதிகளில் அசல் விளையாட்டு சான்றிதழ், பதக்கத்தை கொண்டுவந்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படாதவர்களும், வராதவர்களும் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது. 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 11-ந் தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. தினமும் காலை 7 மணிக்கு கலந்தாய்வு தொடங்கி இரவு வரை நடைபெறும். எனவே காலையிலேயே நடைபெறும் கலந்தாய்விலும், இரவு நேரத்தில் நடைபெறும் கலந்தாய்விலும் பங்கேற்க இருப்பவர்கள், விரும்பினால் அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் அண்ணா பல்கலைக்கழகத்தில் தங்கலாம். அதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் படித்து முடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சியை அரசு எடுத்துக்கொண்டு இருக்கிறது. என்ஜினீயரிங் படிப்பை தேர்ந்தெடுத்த சிலர், மருத்துவ படிப்புக்கு செல்வதற்கும் வாய்ப்பு உள்ளது. அப்படி அவர்கள் சென்றால் ஏற்கனவே தேர்ந்தெடுத்த என்ஜினீயரிங் படிப்புக்கான இடம் காலியாகவே இருக்கும். அடுத்த ஆண்டு முதல் இந்த குளறுபடியை போக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடைசியாக 2012-2013-ல் என்ஜினீயரிங் கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. 3 ஆண்டுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றி அமைக்கலாம் என்றாலும், கடந்த 5 ஆண்டுகளாக கட்டணத்தை மாற்றவில்லை. இந்த ஆண்டு தான் கட்டணத்தை மாற்றி இருக்கிறோம். என்ஜினீயரிங் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக வசூலிப்பதாக யாராவது புகார் கொடுத்தால் கட்டண நிர்ணயக்குழுவுக்கு அதை அனுப்பி, அந்த கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். புகார் தெரிவிப்பவர்களின் விவரங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments: