Friday, 7 July 2017

போலி சாதி சான்றிதழ் கொடுத்திருந்தால் உடனடியாக பட்டம், வேலை பறிபோகும் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

போலி சாதி சான்றிதழ் கொடுத்திருந்தால் உடனடியாக பட்டம், வேலை பறிபோகும் உச்ச நீதிமன்றம் கடும் எச்சரிக்கை | ''கல்வி, வேலைக்காக போலி சாதி சான்றிதழ் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட வரின் பட்டம், வேலை பறிபோகும். அத்துடன் தண்டனையும் வழங்கப் படும்'' என்று உச்ச நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. ''போலி சாதி சான்றிதழ் கொடுத்து, குறிப்பாகத் தாழ்த்தப் பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என போலி சாதி சான்றிதழ் கொடுத்து அரசு பணிகளில் சேர்ந்தவர்களின் வேலை உடனடியாகப் பறிக்கப் படும்'' என்று கடந்த மாதம் மத்திய அரசு திட்டவட்டமாகக் கூறியது. அத்துடன் போலி சாதி சான்றிதழ் கொடுத்து வேலைக்கு சேர்ந் தவர்களின் விவரங்களைச் சேகரிக்க அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. முன்னதாக கடந்த மார்ச் மாதம் மத்திய பணியாளர் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங், மக்களவையில் எழுத்துப்பூர்வ மாக அளிக்கப்பட்ட பதிலில் கூறும் போது, ''போலி சாதி சான்றிதழ் கொடுத்து மத்திய அரசு துறைகளில் 1,832 பேர் பணியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர் களில் 276 பேர் பணி நீக்கம் செய்யப் பட்டுள்ளனர். 521 பேர் வழக்கில் சிக்கி உள்ளனர். மீதம் 1,035 பேர் மீது துறை ரீதியான நடவடிக்கை நிலுவையில் உள்ளது'' என்று தெரிவித்தார். நிதித் துறை சார்ந்த பணிகளில் தான் பலர் சாதி சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்துள்ளனர். ஸ்டேட் வங்கி (157), சென்ட்ரல் வங்கி (135), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (112), சிண்டிகேட் வங்கி (103), நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் மற்றும் யுனைடெட் இந்தியா அஷ்யூரன்ஸ் ஆகியவற்றில் தலா 41 பேர் போலி சாதி சான்றிதழ் மூலம் பணியில் சேர்ந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போலி சாதி சான்றிதழ் கொடுத்தது கண்டு பிடிக்கப்பட்டால், கல்விக்கான பட்டம், வேலை ஆகியவை பறிக்கப் படும். அத்துடன் தண்டனையும் வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து உச்ச நீதிமன்றம் கூறும்போது, ''போலி சாதி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டால், அவர் எத்தனை ஆண்டுகள் பணி புரிந்திருக்கிறார் என்பது பற்றி கவலை இல்லை. இருபது ஆண்டுகள் பணியாற்றி இருந்தால் கூட, அவருக்கு சலுகை காட்ட முடியாது. அவருடைய வேலை பறிக்கப்படுவதுடன் தண்டனையும் வழங்கப்படும்'' என்று கடுமையாக எச்சரித்துள்ளது.

No comments: