TRB

TNTET

Saturday, 9 June 2012

இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, 13ம் தேதி முதல், 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பிற்கு, 13ம் தேதி முதல், 26ம் தேதி வரை, 110 மையங்களில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் தேவராஜன் கூறியிருப்பதாவது: அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம், உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட தேர்வு செய்யப்பட்ட, 110 மையங்களில், விண்ணப்பம் வழங்கப்படும். எஸ்.சி.,- எஸ்.டி., பிரிவினர், 250 ரூபாய் செலுத்தியும், இதர பிரிவினர் 500 ரூபாய் செலுத்தியும், விண்ணப்பங்களை பெறலாம். பிளஸ் 2 தேர்வில், குறைந்தபட்சம் 540 மதிப்பெண் பெற்றவர்கள், இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., - எஸ்.டி., பிரிவு மாணவ, மாணவியர், தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்.

வயது வரம்பு : ஜூலை 21ம் தேதியன்று, 30 வயதிற்கு மிகாமல் இருப்பவராக இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், 35 வயது வரை இருப்பவராக இருக்கலாம். ஆதரவற்றோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதவையாக இருந்தால், 40 வயது வரை உள்ளவர் விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பங்களை பெறும் இடங்களிலேயே, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஒப்படைக்க வேண்டும். 23ம் தேதி மாலை 5:45 வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும். இவ்வாறு தேவராஜன் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நிலவரப்படி, 39 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், 43 உதவிபெறும் பள்ளிகள் மற்றும் 680 தனியார் பள்ளிகள் இருந்தன. இவற்றில், 100 தனியார் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டன. இந்த ஆண்டு, 50 பள்ளிகள் மூட சம்மதம் தெரிவித்துள்ளன. ஜூலை 5ம் தேதி முதல், திருச்சியில் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்கிறது. அதற்குள், மேலும் 50 பள்ளிகள் வரை மூடப்படலாம் என தெரிகிறது. எனவே, தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 500க்கும் கீழே வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மொத்த இடங்களின் எண்ணிக்கையும் சரிந்துள்ளது.


இயக்குனர் தேவராஜன் கூறும்போது,""கவுன்சிலிங் மூலம் 17 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும். நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 20 ஆயிரம் இடங்கள் வரை உள்ளன,'' என தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக, ஆண்டுக்கு 10 ஆயிரம் இடங்கள் வரை காலியாகவே உள்ளன. இந்த ஆண்டு, 7,000 இடங்கள் நிரம்பினாலே பெரிய சாதனையாக இருக்கும் என, துறை எதிர்பார்க்கிறது.

No comments: