TRB

TNTET

Thursday, 21 February 2013

தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்பதற்காக "போலீஸ்காரரை பணியில் இருந்து நீக்கியது சரியல்ல" மீண்டும் வேலை வழங்க, ஐகோர்ட்டு உத்தரவு

தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்பதற்காக போலீஸ்காரரை பணியில் இருந்து நீக்கியது சரியல்ல என்றும், மீண்டும் போலீஸ் வேலை வழங்க வேண்டும் என்றும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி தாலுகா ஆப்பனூரை சேர்ந்தவர் உமயசேகர்(வயது 38). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் வருமாறு:–நான், 1997–ம் ஆண்டு போலீஸ் பணியில் சேர்ந்தேன். 9 ஆண்டுகளாக எந்தவித புகாரும் இல்லாமல் பணியாற்றினேன். ராமநாதபுரம் மாவட்டம் இளஞ்செம்பூர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போது 6.7.2006 அன்று விடுமுறையில் சென்றேன். அந்த சமயத்தில் என் மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரை அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தேன். என் மனைவிக்கு குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே குழந்தை பிறந்ததால், அவருடன் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

மேலும் பிரசவத்துக்கு பணம் இல்லாததால், பணம் பெறுவதற்காக கடுமையாக அலைந்தேன். இந்த நிலையில் தொடர்ந்து 21 நாட்கள் பணிக்கு வரவில்லை என்று கூறி என்னை பணியில் இருந்து ஓடி விட்டதாக அறிவித்தனர். அதன்பின்பு, என்னை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து 28.8.2007 அன்று ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.இதை எதிர்த்து ராமநாதபுரம் போலீஸ் டி.ஐ.ஜி, உள்துறை செயலாளர் ஆகியோருக்கு அப்பீல் செய்தேன். அவர்கள் எனது அப்பீலை நிராகரித்து விட்டனர். தற்போது 7 வயதில் குழந்தை உள்ளது. எனது வருமானத்தை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. குடும்ப சூழ்நிலை காரணமாகத்தான் உடனடியாக என்னால் பணிக்கு திரும்ப முடியவில்லை. எனவே, எனக்கு மீண்டும் போலீஸ் வேலை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கே.என்.பாஷா, பி.தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் பி.கணபதிசுப்பிரமணியன் ஆஜராகி வாதாடினார். மனுவை விசாரித்த நீதிபதிகள் உத்தரவில் கூறி இருப்பதாவது:–‘‘உரிய காரணங்கள் எதுவும் இல்லாமல் வேண்டுமென்றே 6 மாதங்கள் தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்தால் மட்டுமே அதிகபட்ச தண்டனையான பணி நீக்க நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மனுதாரரை பொறுத்தமட்டில் குடும்ப பிரச்சினை காரணமாக அவர் உரிய நேரத்தில் பணியில் சேர முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுதாரருக்கு அதிகபட்ச தண்டனையான பணி நீக்கம் என்பது சரியல்ல. எனவே, மனுதாரரை மீண்டும் பணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.’’இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

No comments: