TRB

Friday, 17 May 2013

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த பிப்ரவரி மாதம் 2–ம் தேதி நடைபெற்ற குரூப்–1 முதல்நிலைத் தேர்வில் 1,330 பேரை தேர்வு செய்து அறிவித்துள்ளது. இதில் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் பயிற்சி பெற்ற 323 பேர்கள் தேர்வு பெற்றுள்ளனர்.


குரூப்–1 முதல்நிலை தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்(டி.என்.பி.எஸ்.சி.) தலைவர் ஏ.நவநீதகிருஷ்ணன்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:–

தமிழ்நாடு அரசின் குரூப்–1 பணியிடங்களில் காலியாக உள்ள துணை ஆட்சியர்–8, துணை காவல்துறை கண்காணிப்பாளர்–4, உதவி ஆணையர்(வணிக வரி)–7, கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர்–1 மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்–5 ஆகிய 25 பணியிடங்களுக்கான முதல்நிலை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 16–ந் தேதி நடைபெற்றது.இந்த தேர்விற்கு 1 லட்சத்து 33 ஆயிரத்து 282 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 75 ஆயிரத்து 629 பேர் தேர்வு எழுதினார்கள். தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் பிற விதிகளின் அடிப்படையில் 1,330 பேர் முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட உள்ளனர். முதன்மை தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள 1,330 பேர்களின் பதிவெண்கள் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in–ல் வெளியிடப்பட்டுள்ளது.முதன்மை தேர்வுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள், தாங்கள் விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்களின் அடிப்படையிலான சான்றிதழ்களை சரிபார்ப்பதற்காக வருகிற ஜூன் மாதம் 7–ந் தேதிக்குள் பதிவு தபாலில் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஆன்லைனிலும் பதிவேற்றம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் அந்த நபரின் தேர்வு ரத்து செய்யப்படும்.அதைத் தொடர்ந்து, ரத்து செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக காத்திருப்பவர்கள் பட்டியலில் இருந்து புதிய நபர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் முதன்மை தேர்விற்கு அனுமதிக்கப்படுவார்கள். புதிய நபர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் முதன்மை தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும்.முதன்மை தேர்வை தொடர்ந்து, நேர்முக தேர்வு நடைபெறும். முதன்மை தேர்வின் மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வின் முடிவுகளின் அடிப்படையில் அந்த 25 பணியிடங்களும் நிரப்பப்படும்.இவ்வாறு ஏ.நவநீதகிருஷ்ணன் கூறினார்.பேட்டியின் போது டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் எம்.விஜயகுமார், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெ.ஷோபனா ஆகியோர் உடன் இருந்தனர்.

சென்னை மேயர் சைதை துரைசாமியின் தலைமையில், மல்லிகா துரைசாமி, வெற்றி துரைசாமி, வசுந்தரா வெற்றி ஆகியோரால் நடத்தப்பட்டு வரும் மனிதநேய இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு மத்திய, மாநில அரசு பணிகளுக்கான இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இந்த குரூப்–1 முதல்நிலைத் தேர்வுக்கு மாணவ–மாணவியர்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த தேர்வில் இந்த மையத்தில் பயின்ற 323 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதன்மை தேர்வில் கலந்து கொள்பவர்களுக்கு இந்த மையத்தில் இலவச பயிற்சி அளிக்கப்பட்ட உள்ளது.

இது குறித்து மனிதநேய மைய மாநில தேர்வுகள் ஒருங்கிணைப்பாளர் சாம் ராஜேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–


குரூப்–1 முதல்நிலைத் தேர்வில், தேர்ச்சி பெற்றுள்ள அனைத்து மாணவர்களுக்கும் முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் தேர்ச்சி பெற்ற மாணவ–மாணவியர்கள் தங்களுடைய பாஸ்போர்ட் அளவு புகைப்படம், முதல்நிலை தேர்விற்கான நுழைவுச் சீட்டு ஆகியவற்றுடன் சென்னை 35, சி.ஐ.டி. நகர், முதல் பிரதான சாலையில் உள்ள இந்த மைய அலுவலகத்துக்கு வந்து பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு முதன்மை தேர்வில் பதிவு செய்து கொள்ளும் அனைவருக்கும், தொடர்ந்து நேர்முகத் தேர்வு வரை முழுமையான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்த முதன்மை தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் தேர்ச்சி பெற்ற புதிய மாணவர்களுக்கும், அனைத்து வசதிகளும் இலவசமாக செய்து தரப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் சாம் ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.