TRB

Saturday, 22 March 2014

பாலகங்காதர திலகர்  விடுதலைப் போராட்ட வீரர்

பாலகங்காதர திலகர்  விடுதலைப் போராட்ட வீரர்
‘சுதந்திரம் எனது பிறப்புரிமை’ என்று முழங்கிய விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காதர திலகர் (Bal Gangadhar Tilak) பிறந்த தினம் இன்று (ஜூலை 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:  மகாராஷ்டிர மாநிலம் ரத்தினகிரியில் (1856) பிறந்தவர். தந்தை, பள்ளி துணை ஆய்வாளர். புனேயில் ஆரம்பக் கல்வி பயின்றார். கணிதம், சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கினார். புனே டெக்கான் கல்லூரியில் 1877-ல் பட்டம் பெற்றார்.
இந்தியச் செல்வம் ஆங்கிலேயரால் கொள்ளையடிக்கப்படுவது குறித்த தாதாபாய் நவ்ரோஜியின் நூலும், அதை அடிப்படையாகக் கொண்டு விஷ்ணு சாஸ்திரி ஆற்றிய உரைகளும் ஆங்கில அரசுக்கு எதிராக இவரைச் சிந்திக்கச் செய்தன. சுதந்திரப் போராட்ட வீரர்களை சிறையில் இருந்து மீட்பதற்காகவே சட்டப்படிப்பில் சேர்ந்தவர், 1879-ல் சட்டப்படிப்பை முடித்து, பல தேசபக்தர்களை சிறையில் இருந்து விடுவித்தார்.  கோபால் கணேஷ் அகர்கர், விஷ்ணுசாஸ்திரி உள்ளிட்டோருடன் இணைந்து 1881-ல் ‘கேசரி’ என்ற மராத்தி இதழையும், ‘மராட்டா’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும் தொடங்கினார். இதன் தலையங்கங்கள் பிரிட்டிஷ் ஆட்சியை கதிகலங்க வைத்தன.  இந்தியக் கலாச்சாரத்துடன் இணைந்த கல்வியை வழங்கவும், தேசபக்தி உணர்வை பரப்பவும் இவர்கள் இணைந்து 1884-ல் தக்காண கல்வி சபையைத் தொடங்கினர். இந்த அமைப்பு, பெர்கூசன் கல்லூரியாக வளர்ச்சியடைந்தது. மகாதேவ ரானடேயின் சார்வஜனிக் சபாவில் இணைந்து பொதுச் சேவை ஆற்றினார்.  ‘திலக் மகராஜ்’, ‘லோகமான்ய’ என்று போற்றப்பட்டார். ‘சுதந்திரம் எனது பிறப்புரிமை. அதை அடைந்தே தீருவேன்’ என்று முழங்கினார். அரவிந்தர் உட்பட ஏராளமானோர் இவரது தலைமையில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய தேசிய காங்கிரஸில் 1889-ல் இணைந்தார். மக்களிடம் ஒற்றுமை, நாட்டுப்பற்றை ஏற்படுத்த கணபதி உற்சவம், சத்ரபதி சிவாஜி உற்சவங்களைத் தொடங்கிவைத்தார்.  பம்பாய், புனேயில் 1896-ல் பிளேக் நோய் பரவியபோது நிவாரணப் பணிகளில் அயராது ஈடுபட்டார். அப்போது, மக்களைக் காப்பாற்றாமல் கொண்டாட்டங்களில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு இவர் எழுதிய தலையங்கமே காரணம் என்று கூறி சிறையில் அடைக்கப்பட்டார்.  வங்கப் பிரிவினை எதிர்ப்பு, சுதேசிப் பொருட்களுக்கு ஆதரவு, அந்நியப் பொருட்கள் பகிஷ்கரிப்பு என பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். 1907-ல் நாக்பூரில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் ‘மிதவாதிகள்’ என்றும், திலகரின் தலைமையில் தீவிரப்போக்கு கொண்டவர்கள் என்றும் அக்கட்சியில் இரு பிரிவுகள் உருவாகின.  தனது பத்திரிகையில் இளம் புரட்சியாளர்களை ஆதரித்து எழுதியதால், மீண்டும் 6 ஆண்டுகாலம் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு ‘கீதா ரகசியம்’ என்ற நூலை எழுதினார். நீரிழிவு நோயால் அவதிப்பட்ட இவரை விடுவிக்கக் கோரி, விக்டோரியா மகாராணிக்கு மாக்ஸ் முல்லர் கடிதம் எழுதினார்.  1914-ல் விடுதலையானதும் ஊர் ஊராகச் சென்று சுயாட்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1919-ல் இங்கிலாந்து சென்று இந்திய சுயாட்சிக்கு ஆதரவு திரட்டினார். இந்திய தேசிய இயக்கத்தின் தந்தை எனப் போற்றப்படும் பாலகங்காதர திலகர், உடல்நலம் பாதிக்கப்பட்டு 1920 ஆகஸ்ட் 1-ம் தேதி 64-வது வயதில் மறைந்தார். - ராஜலட்சுமி சிவலிங்கம்


No comments:

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.