Friday, 30 May 2014

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதினாறாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பதினாறாவது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் வரும் ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

ஜூன் 9 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்.

நாடாளுமன்றத்தின் முதல் நாள் (ஜூன் 4), இரண்டாம் நாள் கூட்டத்தில் புதிய உறுப்பினர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கப்படுகிறது. இது
தொடர்பாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், பதினாறாவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரை நடத்தும் தேதி குறித்து விவாதிக்கப்பட்டது.மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் வகையில் கூட்டத்தொடரை ஜூன் 4 முதல் 11-ஆம் தேதிவரை நடத்த யோசனை தெரிவிக்கப்பட்டது.அதை ஏற்றுக் கொண்ட அமைச்சரவை, அதே தேதிகளில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தலாம் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு பரிந்துரை செய்தது.

புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு: "பதினாறாவது மக்களவையின் உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்ளும் வகையில் ஜூன் 4, 5 ஆகிய நாள்களில் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு மக்களவையில் நடைபெறும்.

புதிய உறுப்பினர்களுக்கு மூத்த உறுப்பினரும் மக்களவையின் தாற்காலிக தலைவருமான கமல் நாத் பதவிப் பிரமாணம் செய்து வைப்பார். அவருக்கு உதவியாக மூத்த உறுப்பினர்கள் அர்ஜுன் சரண் சேத்தி (பிஜு ஜனதா தளம்), பி.ஏ. சங்மா (தேசிய மக்கள் கட்சி), பிரென் சிங் எங்க்டி (காங்கிரஸ்) ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வை மேற்கொள்வர்.  

இந்த நடைமுறைகளைத் தொடர்ந்து, மக்களவைத் தலைவர் பதவிக்கான தேர்தல் நடத்தப்படும். அதில் தேர்வு பெறும் மக்களவைத் தலைவர் ஜூன் 6-ஆம் தேதி பதவியேற்றுக் கொள்வார். துணைத் தலைவர் தேர்வு குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.மக்களவைத் தலைவர் பதவியேற்றதும் ஜூன் 9-ஆம் தேதி மக்களவை, மாநிலங்களவை ஆகிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றுவார். அதே நாளில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்திய பிறகு, மாநிலங்களவை கூட்டத்தொடர் முறைப்படி தொடங்கும். 

இரு அவைகளின் கூட்டம்:  இதையடுத்து, ஜூன் 10, 11 ஆகிய இரு நாள்களும் கூட்டம் நடைபெறும். அப்போது குடியரசுத்  தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உறுப்பினர்கள் பேசுவர். அத்தீர்மானம் மீது கடைசியாக பிரதமர் நரேந்திர மோடி பேசியதும் கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்படும். அவசியம் ஏற்பட்டால் புதிய மக்களவைத் தலைவருடன் கலந்து பேசி கூட்டத்தொடரை நீடிக்கவும் வாய்ப்புள்ளது' என்றார் வெங்கய்ய நாயுடு.   மக்களவைத் தலைவர் பதவிக்கு பாஜக மூத்த உறுப்பினர் சுமித்ரா மகாஜன், பதினைந்தாவது மக்களவையின் துணைத் தலைவர் கரிய முண்டா ஆகியோரது பெயர்கள் பரிசீலிக்கப்படுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

எதிர்க்கட்சி அந்தஸ்து: 543 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் மொத்த உறுப்பினர்களில் பத்தில் ஒரு பங்கு இடங்களைப் பெற்ற கட்சி இதுவரை எதிர்க்கட்சியாக இருக்கும் மரபு கடைப்பிடிக்கப்பட்டது.  ஆனால், பதினாறாவது மக்களவையில் பாஜகவுக்கு அடுத்தபடியாக 44 இடங்களை மட்டுமே காங்கிரஸ் பெற்றுள்ளது. எனவே, அக்கட்சிக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்குமா? என்ற சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் பிரச்னை செய்யாமல் காங்கிரûஸயே எதிர்க்கட்சியாக இருக்க ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஒப்புக்கொள்ளும் என்று தெரிகிறது.