TRB

TNTET

Friday, 5 September 2014

ஆசிரியர் தினம்: தலைவர்கள் வாழ்த்து

ஆசிரியராகப் பணியாற்றி நாட்டின் குடியரசுத் தலைவராக உயர்ந்த ‘சர்வபள்ளி’ டாக்டர் ராதாகிருஷ் ணனின் பிறந்த நாள் (செப்டம்பர் 5), இன்று ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

திமுக தலைவர் கருணாநிதி: 

டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் ஆசிரியர் சமுதாயம் மகிழும் வகையில் கடந்த 1997-ம் ஆண்டு முதல், பரிசுத் தொகையுடன் ‘டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன் விருது’ வழங்கியது திமுக அரசு. திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மத்திய அரசின் ஊதியக்குழு பரிந்துரைகளை தமிழகத்திலும் அமல்படுத்தியது. மாணவர்களிடையே நாட்டுப் பற்றை ஆசிரியப் பெருமக்கள் வளர்க்கவேண்டும். தமிழகத் தின் நலனை, தமிழ் சமுதாயத் தின் தன்மானத்தைக் காக்கும் பொறுப்பையும் மேற்கொள்ள வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாகத் தெரிவித்து, திமுக சார்பில் ஆசிரியர் தின வாழ்த்துகளைக் கூறிக் கொள்கிறேன். 

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன்: 

கல்வித் துறையில் இந்தியா சிறந்து விளங்கவும், எல்லோருக்கும் கல்வி அளிக்கவும், நல்லாசிரியர்களை உருவாக்கி ஆசிரியர்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்து பல்வேறு திட்டங்களை முந்தைய காங்கிரஸ் அரசு உருவாக்கியது. மாணவர்களுக்கு கல்விக் கடன், 6 வயது முதல் 14 வயது வரை இலவச கட்டாயக் கல்வி என்பன கல்வித் துறையில் மாபெரும் புரட்சியாகும். இன்றைக்கு தமிழகத்தில் ஆசிரியர்கள் தேர்வுக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை எதிர்த்து போராட்டம், டி.டி. மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் போன்றவை நடக்கின்றன. இதில் மாநில அரசு கவனம் செலுத்தி தீர்வு காண வேண்டும். 

பாமக நிறுவனர் ராமதாஸ்: 

ஆசிரியர்கள் அறிவை வழங்குபவர்கள். தாய், தந்தைக்கு அடுத்தபடியாக வணங்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களுக்கு அரசு மரியாதை அளித்துள்ளதா என்பது கேள்விக்குரியது. சுமார் 9 லட்சம் பேர் ஆசிரியர் படிப்பு முடித்தும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை. வணங்கும் இடத்தில் வைக்கப்பட வேண்டியவர்கள் நீதி கேட்டு போராடுவதற்காக நாள்தோறும் கைது செய்யப்படுகிறார்கள். மற்றொருபுறம் டாக்டர் ராதாகிருஷ்ணனின் கொள்கைக்கு மாறாக தமிழகத்தில் தாய் மொழிவழிக் கல்விக்கு மாற் றாக ஆங்கிலவழிக் கல்வி திணிக் கப்படுகிறது. இந்த நிலைகள் மாற ஆசிரியர்கள் மட்டுமின்றி நாம் அனைவரும் பாடுபட இந்த நன்னாளில் உறுதியேற்போம். 

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவைக் கொண்டாடி மகிழ்கிறோம். நல்ல குடிமக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இதைத்தான் மத்திய அரசு ‘குரு உத்சவ்’ அதாவது ‘குருவைக் கொண்டாடுவோம்’ என்றது. ஆனால் அது அரசியலாக்கப்பட்டுவிட்டது. ஆசிரியப் பணி இறைப் பணிக்கு நிகரானது. அத்தகைய உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியப் பெருந்தகைகளுக்கு பாஜக சார்பில் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த்: 

மாணவர்களுக்கு கல்வியைக் கற்றுக் கொடுப்பது மட்டுமல்லாமல், அறிவு, ஆற்றல், திறமை, ஒழுக்கம், கடமை என அனைத்தையும் அவர்களிடத்தில் வளர்த்து, ஒரு மனிதன் சமுதாயத்தில் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொடுக்கும் ஆசான்களே ஆசிரியர்கள் ஆவர். ஆசிரியப் பணி என்பது இறைவனுக்குச் செய்யும் பணிக்கு இணையானது. இத்தகைய சிறப்புப் பெற்ற ஆசிரியப் பெருமக்களுக்கு தேமுதிக சார்பில் ஆசிரியர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இதேபோல் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமாரும் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Tags :
tnschools, tet news, trb news, tet news, tnpsc news