Saturday, 11 October 2014

இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார் .

இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க , பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார் . இந்தியா வந்துள்ள அவர் , பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில் , இதற்கான
ஆலோசனை நடைபெற்றதாகவும் , விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது . பேஸ்புக் என்ற பெயரில் , இலவச , சமூக தொடர்பு இணையதளத்தை துவக்கி நடத்தி வருகிறார் , 30 வயதே ஆன அமெரிக்கர் மார்க் சுக்கர்பெர்க் . அந்நாட்டின் இரண்டாவது பெரிய கோடீஸ்வரர் இவர் . முதலிடத்தில் உள்ளவர் , மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைவர் , பில் கேட்ஸ் . தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியாவில் , அதற்கான வாய்ப்புகளும் , வசதி களும் , கிராமங்களை சரி வர சென்றடையவில்லை . இணையதள வசதிகள் இன்னமும் கிராமப்புறங்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன . இதற்கான வசதிகள் கிராமங்களில் கொஞ்சம் இருந்த போதிலும் , நகர்புறங்களில் இருக்கும் அளவுக்கு கிராமப்புறங்களில் , இணையதளங்களின் செயல்வேகம் இல்லை . இந்த குறைபாட்டை போக்கவும் , இந்திய கிராமங்களில் அடிப்படை இணையதள சேவையை இலவசமாக வழங்கவும் , பேஸ்புக் முன்வந்துள்ளது .

இதன் மூலம் , உலக அளவில் இரண்டாவது மிகப் பெரிய , பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களை கொண்ட இந்தியாவை , முதலிடத்திற்கு கொண்டு செல்ல மார்க் விரும்பியுள்ளார் . பேஸ்புக் இணையதள வாடிக்கையாளர்களில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா . இது தொடர்பாக , மார்க் சுக்கர்பெர்க் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது : இந்தியா போன்ற வளரும் நாடுகளில் , ஆண்களுடன் ஒப்பிடும் போது , இணையதளங்களை , 25 சதவீத பெண்கள் தான் பயன்படுத்துகின்றனர் . ஏராளமானோருக்கு அத்தகைய ஒரு வசதி இருப்பதே தெரியவில்லை . தெரிந்த போதிலும் , அதை ஏன் நாங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற கேள்வி அவர்களிடம் உள்ளது . இதை நானாக சொல்லவில்லை . இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் , அந்த ஆய்வில் பங்கேற்ற , 69 சதவீதத்தினர் , இணையதளம் தங்களுக்கு எந்த அளவுக்கு உதவிகரமாக இருக்கும் என்பதை நாங்கள் அறியவில்லை என , தெரிவித்துள்ளனர் . அமெரிக்காவில் , 911 என்ற , அவசர கால அழைப்பு எண்ணை , போன் இணைப்பு இல்லாதவர்களும் மேற்கொள்ள முடியும் . இந்தியாவிலும் இது போன்ற நிலை ஏற்பட வேண்டும் . இணையதளங்களிலும் , அவசர கால , 100 என்ற எண்ணிற்கான அழைப்புகளை மேற்கொள்ள ஏதுவாக , கிராமப்புறங்களிலும் அடிப்படை இணையதள வசதியை இலவசமாக வழங்க முடிவு செய்துள்ளோம் . இதற்காக , டெலிபோன் சேவை வழங்கி வரும் நிறுவனங்களுடன் நாங்கள் பேச்சு நடத்தி வருகிறோம் . இந்த வகையில் , உலகம் முழுவதும் , 30 லட்சம் பேருக்கு ஏற்கனவே இணையதள வசதியை ஏற்படுத்தியுள்ளோம் . இணையதளங்களை , அந்தந்த வட்டார மொழிகளில் மேம்படுத்த வேண்டும் ; மொபைல் ஆப் எனப்படும் அப்ளிகேஷன்களை , வட்டார மொழிகளில் தயாரிப்பதற்கு , பேஸ்புக் அதிக ஊக்கம் அளித்து வருகிறது ; இதற்காக , 600 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்துள்ளோம் . இவ்வாறு , மார்க் சுக்கர்பெர்க் கூறினார் . 

தண்ணீர் இல்லாத கழிப்பறை : சாப்பிடவே வழியில்லாத ஏழை நாடுகளில் இணையதளம் தேவையா என்ற கேள்விக்கு , மார்க் அளித்த பதில் : தண்ணீர் இல்லாமல் டாய்லெட் கட்டி எந்த பயனும் இல்லை என்பது போன்ற நிலை இப்போது உலகில் , இணையதளத்திற்கு உள்ளது . இணையதளம் இல்லாமல் உலகம் இயங்க முடியாது என்ற அளவிற்கு நிலைமை மாறிவிட்டது . ஜாம்பியா போன்ற ஆப்ரிக்காவின் மிகவும் ஏழ்மையான நாட்டில் , கருவுற்ற பெண் , தன்னையும் , தன் குழந்தையையும் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து நாங்கள் இணையதளம் மூலம் இலவசமாக யோசனை அளிக்கிறோம் . எச் . ஐ . வி ., க்கு எதிராக , அந்நாட்டில் மிகப்பெரிய அளவில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம் . இவ்வாறு அவர் கூறினார் . பிரமாண்ட நிறுவனங்களின் தலைவர்கள் வருகை : தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் ஏராளமாக இருப்பதால் தான் , உலகின் பிரமாண்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொடர்பு நிறுவனங்களின் தலைவர்கள் இந்தியா வந்த வண்ணமாக உள்ளனர் . மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி , பில் கேட்ஸ் , அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி , சத்யா நாதெள்ளா , அமேசான் இணையதள நிறுவனத்தின் தலைவர் , ஜெப் பெஸோஸ் போன்றோர் , இந்தியா வந்து , பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த நிலையில் , பேஸ்புக் இணையதளத்தின் நிர்வாகிகளில் ஒருவரான மார்க் சுக்கர்பெர்க்கும் , பிரதமர் மோடியை நேற்று சந்தித்தார் . பிரதமர் மோடியும் , இணையதளம் , சமூக தொடர்பு இணையதளம் , மொபைல் போன் போன்ற சாதனங்களையும் , தொழில்நுட்ப வசதிகளையும் பயன்படுத்துவதில் வல்லவர் . லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் , ட்விட்டர் , பேஸ்புக் போன்ற இணையதளங்களை அவர் அதிகமாக பயன்படுத்தினார் . மார்க்கின் மகத்தான திட்டம் : டில்லிக்கு நேற்று முன்தினம் வந்த பேஸ்புக் நிர்வாகி மார்க் சுக்கர்பெர்க் , தன் செயல்திட்டம் குறித்து விரிவாக பேட்டியளித்தார் . அதில் , முக்கியமான அம்சங்களாவன : * உலகம் முழுவதும் , 270 கோடி பேருக்கு இணையதள வசதி உள்ளது . இன்னமும் , 450 கோடி பேருக்கு இணையதள சேவை வழங்கப்பட வேண்டும் . இதற்கு தடையாக இருப்பது , போதிய கட்டமைப்பு வசதி இல்லாமை மற்றும் இதற்கான செலவு அதிகரிப்பு தான் . * உலகம் முழுவதும் , 250 கோடி பேர் , நாள் ஒன்றுக்கு , 120 ரூபாய் சம்பளம் பெறுபவர்களாகத் தான் உள்ளனர் ; அவர்களுக்கு இணையதளம் எட்டாக்கனியாக உள்ளது . அதற்கான கட்டமைப்பை மேம்படுத்த சூரிய ஒளி சக்தி மூலம் செயல்படும் விமானங்களை இயக்கி , இணையதள சேவையை மேம்படுத்த உள்ளோம் . * இந்தியாவில் மிகச் சிறந்த திறன் வாய்ந்த பொறியாளர்களும் , வல்லுனர்களும் உள்ளனர் ; அவர்களின் திறமையை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம் . * இந்தியா நிறைய தொழில்நுட்ப புரட்சிகளை உருவாக்கிய நாடு . உதாரணமாக , பசுமை புரட்சி , தகவல் தொடர்பு புரட்சி , செவ்வாய் கிரக ஆராய்ச்சி போன்றவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளது . * நாள் ஒன்றுக்கு , 2,000 கோடி எஸ் . எம் . எஸ் ., தகவல்கள் அனுப்பப்படுகின்றன . இதற்கான செலவை குறைக்க , நாங்கள் தொலைத் தொடர்பு வழங்கும் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம் . அதில் வெற்றி பெற்றால் , 10 ஆயிரம் கோடி எஸ் . எம் . எஸ் ., தினமும் அனுப்பப்படும் . 10.89 கோடி பேரிடம் இணையதள வசதி : இந்தியாவில் இணையதள வசதி , அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது . 2013 ல் , 7.78 கோடி பேரிடம் தான் இணையதள வசதிகள் இருந்த நிலையில் , அந்த எண்ணிக்கை அசுரத்தனமாக அதிகரித்து வருகிறது ; இந்த ஆண்டின் இறுதியில் , இணையதள வசதி கொண்டவர்களின் எண்ணிக்கை , 10.89 கோடியாக அதிகரிக்கும் என , நம்பப்படுகிறது .