TRB

Monday, 18 April 2016

கெமிக்கல் எஞ்சினியரிங் கிளைப் பிரிவுகளில் எதைப் படிக்கலாம்?

கெமிக்கல் எஞ்சினியரிங் கிளைப் பிரிவுகளில் எதைப் படிக்கலாம்?
வேதிப் பொறியியல் மற்றும் தொழில்நுட்பவியல் படிப்பு பற்றியும், அதன் கிளைப் பிரிவுகள் சிலவற்றைப் பற்றியும் கடந்த இதழில் பார்த்தோம். வேதிப் பொறியியல் என்பது பிரமாண்டமான கிளைகளை உள்ளடக்கிய துறை. அண்மைக்காலமாக அவற்றில் வேலை வாய்ப்புகளும் அதிகரித்து வருகிறது. மாணவர்களின் கவனமும் அவற்றில் குவிகிறது. அதனால் அவற்றில் சில கிளைப் பிரிவுகளை விரிவாகவே பார்ப்போம்.

  செராமிக் தொழில்நுட்பம் (Ceramic Technology)
மண்பாண்டம் முதலிய செராமிக் பொருட்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே  பயன்பாட்டில் இருந்துவந்துள்ளன. நீரேற்றுக் குழாய்கள், தரை மற்றும் கூரை ஓடுகள், கட்டுமானப் பொருட்கள், இரும்பு மற்றும் கண்ணாடி தயாரிக்கும் கலன்கள், சமையல் பாத்திரங்கள், மேசைப் பொருட்கள், குளியலறைத் தளவாடங்கள், காஸ் அடுப்பு உபகரணங்கள், மருத்துவச் சாதனங்கள், ஜெட் எஞ்சின் பிளேடுகள், டிஸ்க் பிரேக், பேரிங்குகள், ஏவுகணை முகப்புக் கூம்புகள் ஆகியவை செராமிக் பயன்படுத்திச் செய்யப்படும் பொருட்களாகும். வெப்ப மின் அரிதில் கடத்திகளாகவும் (Insulators), அரைக் கடத்திகளாகவும் (Semiconductors) பல்பொருத்திகளாகவும் (Dental Implants), கலைப் பொருட்களாகவும், செயற்கை எலும்புகளாகவும் கூட செராமிக்ஸ் பயன்படுகிறது.
Ceramic Technology பாடத்திட்டத்தில் செராமிக்ஸின் தன்மைகள், மூலப்பொருட்கள், பதப்படுத்துதல், செராமிக்ஸ் ஆய்வு முறைகள், புராதன செராமிக்ஸ், செராமிக்ஸ் கட்டுமான முறைகள், கண்ணாடிப் பொறியியல், ரிஃப்ராக்டரிகள், ப்ராசஸ், பொருளாதாரமும் தொழிற்கூட மேலாண்மையும் ஆகியவை இடம் பெறுகின்றன. செராமிக் தொழில்நுட்பம் பயின்றவர்களுக்கு, ஆய்வுக்கூடம், வெப்பம், ப்ராசஸிங் தயாரிப்பு, கிலன் செட்அப், கிராபிக் செராமிக், வார்ப்பு, ஸ்டூடியோ (சிற்பம் முதலியன), சிமுலேஷன், ப்ரோஃபைல், பல் மருத்துவம் ஆகியவற்றில் டெக்னீஷியன் பணிகளும், செராமிக் பொறியாளர், மெட்டீரியல் அறிவியலாளர், அருங்காட்சியகத் தொழில்நுட்பவியலாளர், EEQ தானியக்கப் பொறியாளர், ஆராய்ச்சியாளர், தகவல் ஆய்வாளர், விற்பனை மேலாளர், ஃபர்னஸ் (இரும்பு உலையை வடிவமைப்பதில்) மேலாளர் முதலிய வேலைகளும் காத்திருக்கின்றன.
உணவுத் தொழில்நுட்பம் (Food Technology)
தமிழ்நாட்டில் வேளாண் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகள், சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் உணவுத் தொழில்நுட்பப் பாடப்பிரிவுகள் உண்டு.  CFTRI (மத்திய உணவுத் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம், மைசூர்), மைய அரசின் உணவுப் பதனிடு தொழில்துறை அமைப்பின் கீழ் வரும் NIFTEM ஆகியவை இத்துறையின் சிறப்பு நிறுவனங்கள். இப்படிப்புப் பிரிவில் உணவு வேதியியல், உணவு நுண்ணுயிரியியல், மனித உணவியல், உணவுச் செப்பமும் பதப்படுத்துதலும், சுற்றுச்சூழலியல், உணவு நொதிப்பு முறை, மரபணு மாற்றம், உணவுப் பாதுகாப்பு அறுவடை கடந்த தொழில்நுட்பவியல் முதலியன கற்பிக்கப்படுகின்றன. உணவு மற்றும் மருந்தியல், உயிர் வேதியியல், உணவுச்சங்கிலி, ஊட்ட உணவு ஆகியவற்றில் செய்முறை வகுப்புகள் இருக்கும். உணவுத் தொழில்நுட்பம் பயின்றவர்கள் உணவுத் தரக்கட்டுப்பாடு, விநியோகம், உணவு அறிவியலும் காப்பும், நுண்ணுயிரி ஆய்வு, Toxicology, Dietetics, Applied Nutrition  ஆகிய துறைகளில் பணியாற்றலாம். உணவு ஆய்வகங்கள், நட்சத்திர உணவு விடுதிகள், குளிர்பானத் தொழிலகங்கள், நெல் அரவைக்கூடங்கள், ஆயத்த உணவுத்தயாரிப்பு துறை ஆகியவற்றில் வேலை பெறலாம். சுயதொழில் புரியும் வாய்ப்பும் அதிகம்.
துணி தொழில்நுட்பம் (Textile Technology)
துணி உற்பத்தி நுணுக்கங்களோடு அத்துறையில் பயன்படும் கருவிகள், அவற்றின் பராமரிப்பு, நிர்வாகம் ஆகியவற்றையும் பற்றியது இந்தப் படிப்பு. இந்தியா, வங்காள தேசம், சீனா, எகிப்து நாடுகளே உலக துணித்தேவையின் பெரும்பகுதியைத் தீர்ப்பதால் நமக்கு இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த துறை. அண்மையில் திருத்தப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதித்திட்டத்தின்கீழ் (ATUFS), உள்நாட்டுத் துணி உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கும் ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கவும், 30 லட்சம் பேருக்கு இத்துறையில் வேலைவாய்ப்பு உருவாக்கவும் இந்திய அரசின் அமைச்சரவை பரிந்துரைத்திருப்பது கவனிக்கத்தக்கது. ஆடை தயாரிப்புக்கு மட்டுமின்றி, கம்பளம், படுக்கை விரிப்பு முதலியவற்றிலிருந்து தீயணைப்புத்துறைக்கான உடைகள், விண்வெளி ஆய்வுக்கான உடை, NASA-வின் ஏவுகணைக் கூம்புகள் தயாரிப்பது வரை பல வகையில் இத்துறை பயன்படுகிறது. மருத்துவத் துறையில் காயங்களுக்கு கட்டுப்போடுதல், தையல் போடுதல், இம்ப்ளான்ட்டுகள், செயற்கைத்தசை நார்கள், இதய வால்வுகள், செயற்கைத் தோல் ஆகியவற்றை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.
வேளாண் துறையிலும் கட்டுமானப் பணிகளிலும் இந்தத் தொழில்நுட்பம் உதவுகிறது. Textile Technology படிப்பில் சுற்றுச்சூழலியல், பாலிமர் வேதியியல், நூற்றலுக்கும் நெய்தலுக்குமான முன்செயல்கள், துணி இழைகள், துணி தயாரிப்பு, இழை தொழில்நுட்பம், பின்னல் தொழில்நுட்பம், இழை தர அளவீடு, டெக்ஸ்டைல் இயந்திரங்கள், ஒட்டுத்துகில் நுட்பவியல், துகில் தொழிலகங்களில் OR, TQM ஆகியவை பொதுவாக இடம்பெறும். இத்துறையிலும் இத்துடன் இயைந்த Fashion Technology, Textile Chemistry ஆகியவற்றிலும் பட்ட, பட்டயப் படிப்புப் படித்தவர்களுக்கு தர மேலாளர், தயாரிப்பு மேலாளர், கட்டுமானத் துகில் வடிவமைப்பாளர், மருத்துவத் துகில் பொறியாளர், தரக் கட்டுப்பாடு மேற்பார்வையாளர், விற்பனை மேலாளர், அச்சு வடிவமைப்பாளர், பாணி வடிவமைப்பாளர் (Fashion Designer) முதலிய பல வேலைகள் காத்திருக்கின்றன.  தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு உண்டு. உலோகவியல் பொறியியல் (Metallurgical Engineering) இந்தப் படிப்பும், Metallurgy and Materials என்ற படிப்பும் வேதிப் பொறியியலிலிருந்து கிளைத்தவை என்றே கொள்ளலாம்.
இவை, அண்ணா பல்கலைக்கழகக் கல்லூரிகளிலும், NIT, IIT நிறுவனங்களிலும் வழங்கப்படுகிறது. வாரங்கல் NIT-ல் 1965-லிருந்தே இப்பிரிவு உள்ளது. உலோகத் தாதுக்களைக் கண்டறிந்து அகழ்தல், உலோகங்களைப் பிரித்தல், தூய்மைப்படுத்துதல் கலவைகள் (Alloys) உருவாக்குதல் முதலிய தயாரிப்பு முறைகளும் சுற்றுச்சூழலால்  உலோகங்களில் நிகழும் தாக்கமும் காப்பும் முதலியவை பற்றியது இத்துறை. இதன் பி.டெக். பாடத்திட்டத்தில் பொதுவாக, Fuels, Furnaces and Refractories, Material Science, Physical Metallurgy, Mineral Benefaction, Mechanical Metallurgy, Testing of Materials, Production of iron, Non ferrous Extraction Metallurgy Corrosion, Surface Engineering  ஆகியவை இடம்பெறும். இப்பிரிவு வல்லுநர்களுக்கு இளம் அறிவியல் ஆலோசகர்கள், இளம் ஆராய்ச்சியாளர், Risk Analyst, Service Engineer, works Manager, Marketing Executive  முதலிய பணிகள் காத்திருக்கின்றன. கல்லூரிகள், வங்கிகள், தனியார், பொதுத்துறை நிறுவனங்களில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உண்டு. 
தோல் தொழில்நுட்பம் (Leather Technology)
தோல் பதனிடுதல், காலணி, தோலாடை, வீட்டு உபயோக மற்றும் பணிக்கூடத் தயாரிப்புகள், சுற்றுச்சூழல் முதலியன சம்பந்தப்பட்டது இப்படிப்பு. நம் நாட்டுக்கு அதிக அந்நியச் செலாவணி பெற்றுத்தரும் துறைகளில் ஒன்று. இத்துறை பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புகள் ஏராளம் உண்டு. இப்படிப்பில், அடிப்படை பயோ வேதியியல், நுண்ணுயிரியல், தோல் புரோட்டீன்களும் பதப்படுத்துதலும், கனத்தோல் தயாரிப்பு, குரோம் மற்றும் கனிமப் பதப்படுத்தும் முறைகள், பாலிமர் அறிவியல், கனமற்ற தோல் தயாரிப்பு, சுற்றுச்சூழலியல், தோல் பொருட்களும் ஆடைகளும், தோல் எந்திரங்கள் தோல் காலணித் தொழில்நுட்பம், TQM முதலிய பாடங்கள் கற்பிக்கப்படும். ஆப்பிரிக்க நாடுகளிலும், சீனா, இந்தோனேஷியா, தைவான் போன்ற ஆசிய நாடுகளிலும், ஜெர்மனிஇத்தாலி முதலிய ஐரோப்பிய நாடுகளிலும் இத்துறையில் பட்டம், பட்டயம் பெற்றவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு உண்டு. தோல் தயாரிப்பு, ஏற்றுமதி, Fashion துறை, பாதுகாப்புப் பொருட்கள் தயாரிப்பு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் நல்ல பணி வாய்ப்புகள் உண்டு.
மரக்கூழ் மற்றும் காகிதத் தொழில்நுட்பம் (Pulp and Paper Technology)

மரக்கூழ், மரம் முதலிய மூலப்பொருட்களிலிருந்து காகிதம் தயாரிக்கும் முறைகள் பற்றிய இப்பிரிவும் வேதி பொறியியலிருந்து கிளைத்ததே. செய்தித்தாள்கள், வார மாத இதழ்கள், நூல் பதிப்பகங்கள், விளம்பரத்துறை முதலியவை மட்டிலுமின்றி, Packaging துறையிலும் பெரிதும் உதவுகிறது. மின்பொருட்களும் கட்டுப்பாடும். சுற்றுச்சூழலியல், Physical Chemistry, வேதி இயக்கக் கணக்கீடுகள், பொருள் தொழில் நுட்பம், வெப்ப பொருள் திணிவு மாற்றம்,
சக்திப்பொறியியல், பயோ கெமிக்கல் பொறியியல் பாதுகாப்பு, TQM முதலியன இப்படிப்பில் இடம்பெற்றுள்ள பாடங்கள். மத்திய மரக்கூழ் மற்றும் காகித ஆராய்ச்சி நிறுவனம், உள்ளிட்ட அரசு மற்றும் தனியார் துறைகளில் Rescarch Associate, Excutive Towers, Scientific Process Engineer,  விற்பனை மேலாளர் முதலிய பொறுப்புகளில் இப்படிப்பை முடித்தவர்கள் பணியாற்றலாம்.

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.