TRB

TNTET

Tuesday, 31 May 2016

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் இதுவரை 2.48 லட்சம் பேர் பதிவு

பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் இதுவரை 2.48 லட்சம் பேர் பதிவு 
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். இதுவரை 2 லட்சத்து 48 ஆயிரத்து 760 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். தமிழகத்தில் 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 17 அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், 10 அரசு பொறியியல் கல்லூரிகள், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 553 தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகியவை அடங்கும். இந்தக் கல்லூரிகளில் ஏறத்தாழ 2 லட்சம் பிஇ, பிடெக், இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றைசாளர முறையில் (சிங்கில் விண்டோ சிஸ்டம்) நிரப்பப்பட உள்ளன.
பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் புதிய நடைமுறை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் பதிவு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கியது. முதல் நாளன்றே 5,424 பேர் பதிவு செய்தனர். ஆன்லைன் பதிவு செய்ய மே 31-ம் தேதியும், அதேபோல் ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க ஜூன் 4-ம் தேதியும் கடைசி நாள் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. மாணவ, மாணவிகள் விண்ணப்பத்தை தபால் மூலமாகவும், அண்ணா பல்கலைக்கழகத்துக்கு நேரில் சென்றும் சமர்ப்பித்து வருகின்றனர். இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, பொறியியல் படிப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்ய இன்று (செவ்வாய்க்கிழமை) கடைசி நாள் ஆகும். நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, 2 லட்சத்து 48 ஆயிரத்து 760 பேர் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 334 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றுகளுடன் ஜூன் மாதம் 4-ம் தேதி மாலை 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து மாணவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்களுக்கு ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்படும். அதன் பிறகு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு தொடங்கும். சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் கலந்தாய்வுக்கு மாணவ, மாணவிகள் தரவரிசைப்படி அழைக்கப்படுவார்கள். கலந்தாய்வின்போது கல்லூரியையும் பாடப்பிரிவையும் அவர்கள் தேர்வு செய்ததும் உடனடியாக அவர்களுக்கு ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.


No comments: