TRB

TNTET

Saturday, 14 May 2016

கல்வித்துறையின் நல்ல முடிவு

கல்வித்துறையின் நல்ல முடிவு
மத்திய அரசாங்கம் என்றாலும் சரி, மாநில அரசாங்கங்கள் என்றாலும் சரி, எல்லா திட்டங்களுக்கும் மேலாக, கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டிவருகின்றன. ஒரு நாடு வளமுள்ள நாடாக, அறிவாற்றல் மிகுந்த நாடாக விளங்க வேண்டுமென்றால், அங்கு கல்வி வளர்ச்சி இருந்தால்தான், நிச்சயமாக முடியும். அந்த வகையில், கேரளா, தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் கல்வி வளர்ச்சியில் மிகுந்த வேகத்தோடு வீறுநடை போட்டுக்கொண்டிருக்கின்றன என்பதை யாராலும் மறுத்துவிடமுடியாது.
மறைந்த பெருந்தலைவர் காமராஜர் கல்வி வளர்ச்சியில் அதிக அக்கறை காட்டினார். அதனால்தான் இலவச கல்வித்திட்டத்தை கொண்டுவந்தார். வறுமையால் வாடும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களுக்கு செல்வதற்கு தடையாக 'பசிப்பிணி' இருந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், மதிய உணவு திட்டத்தையே கொண்டுவந்தார். இப்போதும் நடந்துமுடிந்த பாராளுமன்ற கூட்டத்தில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றும்போது, மத்திய அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டங்களுக்கெல்லாம் முன்னுரிமையாக இருப்பது கல்விதான் என்ற வகையில், ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துவதற்காக பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பயிற்சிக்கான தேசிய இயக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.ஆக, கல்வி வளர்ச்சிக்கு ஆசிரியர்களின் பங்குதான் பெரிய பங்காகும். கைக்குழந்தைக்கு ஒரு தாய் பாலூட்டுவதுபோல, உணவு கொடுப்பதுபோல, அறிவை ஊட்டுவது ஆசிரியர்தான். அத்தகைய ஆசிரியர்களின் பணி மேலும் சிறக்க, தமிழக கல்வித்துறை ஒரு நல்ல நடவடிக்கையை எடுத்துள்ளது. பொதுவாக, 'ஒரு சில இடங்களில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிக்கூடங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் பள்ளிக்கூடங்களுக்கு வராமல் டிமிக்கி கொடுக்கிறார்கள்; தங்கள் சொந்தவேலையை பார்ப்பதற்கு சென்றுவிடுகிறார்கள், என்று ஒரு புகார் வருவதுண்டு. கிராமப்புறங்களில் இது அதிகமாக நடக்கிறது என்று புகார்கள் வந்துகொண்டே இருந்தன. இதை தடுப்பதற்காக, தமிழக கல்வித்துறை ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், 2 பேர் கொண்ட சோதனை குழுக்களை நியமிக்க முடிவுசெய்துள்ளது. இந்த 2 பேரில், ஒருவர் வட்டார வள ஆசிரியராகவும், மற்றொருவர் உதவி தொடக்கக்கல்வி அதிகாரியாகவும் இருப்பார்கள். இவர்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் 10 பள்ளிக்கூடங்களுக்கு அதிரடி சோதனைக்காக சென்று, அனைத்து ஆசிரியர்களும் பணியில் இருக்கிறார்களா? என்று சோதனையிடுவார்கள்.சில பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் காலையில் வந்துவிட்டு, பிற்பகலில் தங்கள் சொந்த வேலைக்கு சென்றுவிடுகிறார்கள் என்று புகார்கள் வருவதால், பெரும்பாலும் பிற்பகலிலும், பள்ளிக்கூடம் முடியும் நேரத்திலும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் சங்கங்களில் உள்ள நிர்வாகிகள், 'யூனியன் வேலைக்காக செல்கிறோம்' என்று சொல்லிவிட்டு செல்வதையும் தடுப்பதற்கு, இந்த சோதனைகள் உதவும் என்று கருதப்படுகிறது. இந்த குழுக்களின் சோதனையில் ஏதாவது ஆசிரியர் பள்ளிக்கூடத்தில் இல்லாமல் இருந்தால், துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டில் இந்தக்குழு தங்கள் சோதனையை தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது நிச்சயமாக நல்லமுடிவு. கல்வித்துறையோடு இதை நிறுத்திவிடாமல், மாநிலம் முழுவதிலும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் இதுபோல சோதனைகள் நடத்தப்பட்டால், அரசு ஊழியர்களின் திறமை மேம்படும். பொதுமக்களுக்கு கிடைக்கும் சேவையும் உயர்தரத்தில் இருக்கும்.பொதுவாக தொழிற்சங்க நிர்வாகிகள் தியாக மனப்பான்மை உடையவர்கள். அவர்கள் தங்கள் கடமையை செய்து, அதற்குப்பிறகு தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டால், மற்றவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இருக்கும். பணியாளர்களின் உரிமைக்காக போராடுபவர்கள், அந்த பணியாளர்களின் வேலைகளுக்கு அதிகமாக உழைத்துக்காட்டினால்தான், மற்றவர்களும் அவர்களை பின்பற்ற வசதியாக இருக்கும். தொழிலாளர்களின் உரிமைக்காக மட்டும் இல்லாமல், அவர்களின் பணி சிறக்கவும், தொழிற்சங்க தலைவர்கள் முன்மாதிரியாக இருக்கவேண்டும் என்பதையே நாடு எதிர்பார்க்கிறது. தொழிலாளர்களின் உரிமையோடு, மக்களின் நலனிலும் அவர்கள் அக்கறையோடு இருக்கவேண்டும்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments: