TRB

TNTET

Tuesday, 10 May 2016

தேர்வு நடத்தும் முறையால்தான் பயம்!

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் படிப்புகளில் ஒரே மாதிரியான தேசியத் தகுதி நுழைவுத்தேர்வை நடத்தவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 11-ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்துத் தமிழகம், உத்தரப்பிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரி கூட்டமைப்புகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இது தொடர்பான கருத்துகள் வரவேற்கப்பட்டன. மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்துவதை ஆதரித்தும் எதிர்த்தும் பலர் வாதிட்டனர். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட சில கடிதங்கள் இதோ.
மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வை நடத்திட மருத்துவக் கவுன்சிலுக்குச் சட்டப்படியான அதிகாரம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அதற்கு முரணாகத் தற்போது நுழைவுத் தேர்வை நிச்சயம் நடத்தச் சொல்வது நியாயமா? தமிழ்நாட்டில் நுழைவுத் தேர்வு சட்டப்படி ரத்துசெய்யப்பட்டதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில் அகில இந்திய நுழைவுத் தேர்வைத் தமிழக மாணவர்கள்மீது திணிப்பது சரி இல்லை. 
- சீ.இலட்சுமிபதி, தாம்பரம், சென்னை 

மருத்துவ நுழைவுத் தேர்வு கண்மூடித்தனமாக எதிர்க்கப்பட வேண்டியதல்ல. ஆனால் மிகக் குறுகிய காலத்தில் மாநிலக் கல்வி வாரியம் மற்றும் மத்தியக் கல்வி வாரியம் என இருவழியில் படித்தவர்களும் ஒரே நுழைவுத் தேர்வை எழுத வேண்டும் என்பதே நாம் முற்றிலும் எதிர்க்க வேண்டியது. அதே வேளையில் மாநில மொழிகளில் நிச்சயம் தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அதை விடுத்து ஒரே நுழைவுத் தேர்வு, ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நுழைவுத் தேர்வு என்பது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் உள்ள கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைக் கலைக்கும் முயற்சி. அதனைப் போலவே கிராமப்புற மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு நிச்சயம் தேவை. அப்படிச் செய்யும்போதுதான் கிராமப்புற மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்கும். தமிழக மாணவர்களுக்குத் தேர்வு ஒரு பயம் அல்ல. தேர்வு நடத்தும் முறையே பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே இதனை உச்ச நீதிமன்றமும் மத்திய அரசும் நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும். 
ச.கிறிஸ்து ஞான வள்ளுவன், வேம்பார். 

மருத்துவ நுழைவு தேர்வு வேண்டாம் எனச் சொல்வதை ஏற்க முடியாது. நுழைவுத் தேர்வு பல நாட்டிலும் நடத்தப்படுகிறது. கொரியா போன்ற நாடுகளில் மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வின்போது போக்குவரத்து நெரிசல் இல்லாமல் பார்த்துக் கொள்கிறார்கள். இன்றைக்கு மாணவர்கள் கடும் போட்டிக்கு இடையில் வாழ்கிறார்கள். ஒரு நொடி வினா ஏற்றம் என்பதைப் பார்க்க முடியாது. அப்படிப்பட்ட உலகில் 15 வருடமாகப் பாடத்திட்டத்தை ஒழுங்காக அமைக்காமல் அவர்களை முட்டாளாக்கியது யார் தவறு? 
திடீரென்று அவர்களை நுழைவுத் தேர்வு எழுது என்று சொல்லும் நீதிமன்றம் ஒரு வருடத்துக்கு முன்பே பாடத்திட்டத்தை மாற்று, வினாத்தாள் அமைக்கும் முறையை மாற்று என்று உத்தரவு பிறப்பித்திருந்தால் இன்று இப்படி ஒரு நிலைமை மாணவர்களுக்கு வந்திருக்காது. எதையும் சமாளிக்கும் திறன் படைத்தவர்களாக இருப்பார்கள். 
- வீ. யமுனா ராணி, சென்னை 

பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும் எனச் சொன்னால் இந்தியா முழுவதும் பொதுப் பாடத்திட்டம் இருக்க வேண்டுமல்லவா? அதற்குக் கல்வி வாரியம் இந்தியா முழுவதும் ஒரே மாதிரி அமைக்கப்பட வேண்டும். நிதி, கண்காணிப்பை அரசு செய்ய வேண்டும். இப்படி இருக்கும் பட்சத்தில் பொதுத் தேர்வு குறித்துப் பேசினால் அதில் அர்த்தம் இருப்பதாக ஏற்றுக்கொள்ளலாம். 
- அ. முஹம்மதுசெளது, தலைஞாயிறு  

ஏற்கெனவே வருடம் முழுவதும் சொல்லப்போனால் +1 லிருந்தே இந்தப் பாடங்களைக் கஷ்டப்பட்டுப் படித்து, கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற மன அழுத்தத்தோடு அல்லாடும் குழந்தைகளுக்கு இது ரெட்டைச் சுமை. நகர்ப்புற மாணவர்களுக்கு வேண்டுமானால் வெவ்வேறு பயிற்சி மையங்கள் இருக்கின்றன. ஆனால் கிராமப்புறத்தில் அரசு பள்ளியில் கடின உழைப்பைச் செலுத்தி மதிப்பெண் குவித்து வெளியே வரும் மாணவர்களை மீண்டும் நுழைவுத் தேர்வு என்ற பெயரால் வாட்டுவது சமூக நீதிக்கும் எதிரானது குழந்தையின் மனநலத்துக்கும் பாதகமானது. 

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

No comments: