TRB

Friday, 6 May 2016

டி.எஸ். அவிநாசிலிங்கம் சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர்

டி.எஸ். அவிநாசிலிங்கம் சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர்
சுதந்திரப் போராட்ட வீரரும் காந்தியவாதியும் தலைசிறந்த கல்வியாளருமான டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார் (T.S. Avinashilingam Chettiar) பிறந்த தினம் இன்று (மே 5). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
அன்றைய கோவை மாவட்டத்தின் திருப் பூரில் வளமான குடும்பத்தில் பிறந்தார் (1903). தந்தை பிரபல வணிகர். திருப்பூர் உயர்நிலைப் பள்ளியிலும் கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1923-ல் பட்டம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் 1925-ல் பட்டம் பெற்றார்.
ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர் ஆகியோரிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த இவர், திருமணம் செய்துகொள்ளாமல் இறுதிவரை, ஏறக்குறைய துறவி போலவே எளிமையாக வாழ்ந்து வந்தார். தாய்நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் தன் செல்வச் செழிப்பான வாழ்க்கை, குடும்பம், வெற்றிகரமான தொழில் அனைத்தையும் தியாகம் செய்தவர்.
1930-ல் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கினார். பின்னர் பெரியநாயக்கன் பாளையத்தில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்த வளாகத்துக்கு அந்தப் பள்ளியை மாற்றினார். கோவையில் ஒரு ஹோம் சயின்ஸ் கல்லூரியையும் தொடங்கினார்.
இந்திய விடுதலைப் போராட்ட இயக்கத்தில் இணைந்து ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்டப் போராட்டங்களில் பங்கேற்றார். 1930 முதல் 1942 வரையிலான காலகட்டங்களில் நான்கு முறை சிறை சென்றார். காங்கிரசில் இணைந்து பணியாற்றினார்.
கோவை மாவட்ட காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டத்தகாதவர்கள் என ஒடுக்கப்பட்ட மக்களின் நலவாழ்வுக்காகப் பாடுபட்டார். 1934-ம் ஆண்டு ஹரிஜன நலவாழ்வு நிதிக்காக நன்கொடை திரட்டத் தமிழகம் வந்த காந்தியடிகளுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்தார். விதவைகள் மறுமணத்துக்காகவும் போராடி வந்தார்.
கல்வி நிலையங்களிலும் ஜாதிப் பாகுபாடு தலைவிரித்தாடிய அந்த காலகட்டத்தில், தனது பள்ளியில் அனைத்து ஜாதிகளைச் சேர்ந்தவர் களையும் சேர்த்துக்கொண்டார். 1957-ல் பெண் கல்விக்காக கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். அது தற்போது அவிநாசிலிங்கம் மனை யியல் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக உள்ளது. இவர் எழுதிய திருக்கேதாரம் என்ற பயண நூல் மிகவும் பிரசித்தம். மேலும் பொருளா தாரம், காந்தியின் கல்விக் கொள்கை குறித்தும் எழுதியுள்ளார்.
1946-ல் சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகத் தேர்ந் தெடுக்கப்பட்டார். டி. பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார் ஆகியோரின் சென்னை மாகாண அமைச்சரவையில் கல்வியமைச்சராகப் பணியாற்றினார். பள்ளிகளில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு வந்தார். 1946-ல் தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவினார். இந்த அமைப்பு, தமிழில் முதன் முறையாக பத்து அதிகாரங்கள் கொண்ட என்சைக்ளோபீடியாவை வெளியிட்டது.
நூலகங்களை சீரமைத்தார். பாரதியார் பாடல்களை தேசிய மயமாக்கினார். ஆறாம் வகுப்பிலிருந்து திருக்குறளைப் பாடத்திட்டத் தின் ஓர் அங்கமாக அறிமுகம் செய்தார். 1952-ல் திருப்பூர் நாடாளு மன்ற தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1958 முதல் 1964 வரை மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1975-ல் இவரது தலைமையிலான ஒரு குழு சிறுவர் கலைக்களஞ்சியம் ஒன்றை வெளியிட்டது. சிறந்த விவசாயக் கொள்கை மட்டுமே வெற்றிகரமான தொழில்மயமாக்கலுக்கு நம்மை இட்டுச் செல்லும் என்று நம்பினார்.
1970-ம் ஆண்டு இவருக்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட்டது, ஜி.டி. பிர்லா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. சமூக சீர்திருத்தவாதி, சமூக சேவகர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் வளர்ச்சிக்கு பெரும் தொண்டாற்றியவர், சிறந்த அரசியல்வாதி, தலைசிறந்த கல்வியாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட டி.எஸ். அவிநாசிலிங்கம் செட்டியார், 1991-ம் ஆண்டு, நவம்பர் மாதம், 88-வது வயதில் காலமானார்.

Tags :
trb news, tet news, tet news, tnpsc news, tnschools,

Popular Posts

E.Mail Free Subsciption

முதலில் உங்கள் இ.மெயில் முகவரியை இங்கே பதிவு செய்து தினம் ஒரு இ.மெயிலை இலவசமாக பெறுங்கள்.

After registration, We will send an activation link to your "Inbox". Click on the link to complete registration process.